ரோஹிஞ்சா நெருக்கடி: அகதிகளுக்கு பெரிய முகாம்களை அமைக்க வங்கதேசம் திட்டம்

rohingya05அண்டை நாடான மியான்மரில் இருந்து தப்பிவரும் 4 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு உறைவிடங்களை அமைக்கும் திட்டங்களை வங்கதேச அரசு அறிவித்திருக்கிறது.

14 ஆயிரம் உறைவிடங்களை வங்கதேச படையும். உதவி நிறுவனங்களும் சேர்ந்து அமைக்கவுள்ளன. ஒவ்வொரு உறைவிடமும் 6 குடும்பங்களை உள்ளடக்கும் வீடுகளை கொண்டு கோஸ் பஜார் நகருக்கு அருகில் அமையவுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மியான்மர் அரசின் வன்முறை தாக்குதல்களில் இருந்து தப்பித்து சுமார் 4 லட்சம் ரோஹிஞ்சா மக்கள் வங்கதேசம் வந்திருப்பதாக நம்பப்படுகிறது.

மியான்மர் நடத்துகின்ற இந்த நடவடிக்கையை இன சுத்திகரிப்புக்கு இட்டுசெல்லலாம் என்று ஐக்கிய நாடுகள் மாமன்றம் தெரிவித்திருக்கிறது,

ரோஹிஞ்சாக்களின் கிராமங்களை மியான்மர் ராணுவம் தீ வைத்து எரித்துள்ளதாக மனித உரிமை குழுக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ஆனால், ஆயுதப்படையினர் மீது பதில் தாக்குதல் நடத்துவதாகவும். பொது மக்களை இலக்கு வைத்து தாக்கவில்லை என்றும் மியான்மர் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், கடந்த வாரங்களில், வங்கதேச வான்பரப்பில் விதிமீறல்களை நடத்தியுள்ளதாக வங்கதேசத்திற்கும் மியான்மருக்கும் இடையில் ராஜீய சர்ச்சை புதிதாக தொடங்கியுள்ளது.

திட்டமிட்டுள்ள புதிய உறைவிடங்கள் பற்றி நமக்கு தெரிந்தவை என்ன?

வங்கதேசத்தின் நாளேடான ‘ஸ்டார்’ செய்தித்தாளின்படி, இந்த புதிய உறைவிடங்கள் 8 சதுர கிலோமீட்டர் (3 சதுர மைல்) நிலப்பரப்பில் அமைக்கப்படும். இது மியான்மரில் இருந்து வந்த அகதிகளால் நிறைந்திருக்கும் முகாம்களுக்கு அருகில் அமைக்கப்படவுள்ளன.

8 ஆயிரத்து 500 தற்காலிக கழிப்பிடங்கள் கட்டப்படுகின்றன. 14 தற்காலிக கிடங்குகள் உறைவிடங்களுக்கு அருகில் அமைக்கப்படும் என்று இந்த செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்தின் பேரிடர் மேலாண்மை செயலாளரை மேற்கோள்காட்டி, இவ்விடம் 4 லட்சம் மக்களுக்கு போதுமானதாக இருக்கம் என்று அரசு நம்புவதாக எஃஎபி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது 10 நாட்களில் கட்டப்படயிருக்கிறது.

அகதிகளாக வந்துள்ள குழந்தைகள் பலருக்கும் ரூபல்லா மற்றும் போலியே தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் சனிக்கிழமையில் இருந்து தொடங்குவதாக கூறப்பட்டுள்ளது.

ரோஹிஞ்சாக்கள் ஏன் தப்பியோடுகின்றனர்?

ரக்கைன் மாநிலத்திற்குள் இருந்தபோது நடைபெற்ற கொலைகள், பாலியல் வல்லுறவுகள் மற்றும் படுகொலைகள்கூட நடைபெற்றதாக மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு தப்பி சென்ற மக்கள் இந்த மாதத்தின் தொடக்கத்தில் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். ரக்கைன் மாநிலத்திற்குள் எரிந்துபோன வீடுகளை பிபிசி அணியினர் நேரடியாக பார்த்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று ‘ஹ்யூமன் ரைட்ச் வாச்’ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மியான்மர் ராணுவம் “இன சுத்திகரிப்பு நடவடிக்கையை” மேற்கொண்டுள்ளதாக கூறியிருக்கிறது,

கடந்த திங்கள்கிழமை ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தின் தலைவர் சையத் ராடு அல் ஹூசைன் பயன்படுத்திய அதே சொற்கள் இந்த அறிக்கையில் எதிரெலித்திருக்கின்றன.

தீ வைத்து தாக்குதலுக்கு இலக்கான கிராமங்களின் பட்டியலை அது வெளியிட்டுள்ளது.

செயற்கைக்கோள் படங்களை வைத்து கள ஆய்வு நடத்தியதில், மியான்மரின் வடக்கிலுள்ள ரக்கைன் மாநிலத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வாழும் கிராமங்களில் பெருமளவு வீடுகள் எரிக்கப்பட்டுள்ளதற்கு ராணுவம்தான் நேரடி பொறுப்பு என்பது சுட்டிக்காட்டப்படுகிறது” என்று இந்த அமைப்பின் ஆசியாவின் துணை இயக்குநர் ஃபில் ராபாட்சன் தெரிவித்திருக்கிறார்.

இத்தகைய கொடூர நடவடிக்கைகளை மியான்மர் அரசு நிறுத்தவும், அங்கிருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்படும் ரோஹிஞ்சாக்களை தடுத்து நிறுத்தவும் ஐக்கிய நாடுகள் மாமன்றமும், அதன் உறுப்பு நாடுகளும் மியான்மர் மீது உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஐநாவின் பாதுகாப்பு சபை இத்தகைய வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று மியான்மர் அரசை கோரியுள்ளது. ஆனால், தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

அதிகாரிகள் என்ன சொல்லுகிறார்கள்?

ரக்கையின் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்கள் மீது குற்றஞ்சாட்டியுள்ள ஐநாவுக்கான மியான்மரின் தூதர், இத்தகைய கொடூரங்களை தன்னுடைய நாடு ஒருபோதும் சகித்து கொள்ளாது என்று தெரிவித்திருக்கிறார்.

இடம்பெயர்ந்து வாழ்வோர் ரக்கைன் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் அடைக்கலம் பெற்றுகொள்ளும்படி மியான்மர் அரசு செய்தி தொடர்பாளர் ஸாவ் ஹட்டே கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், வங்கதேசத்திற்கு தப்பிச்சென்ற எல்லோரையும் மியான்மருக்குள் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

மியான்மர், வங்கதேசம் உறவை பாதிக்கம் ரோஹிஞ்சா நெருக்கடி

ரோஹிஞ்சா நெருக்கடி தொடர்பாக மியான்மர் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு உதவும் வகையில் அதிக அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்காக ஐநா பொது பேரவை கூட்டத்திற்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சென்றிருப்பதால், இரு நாட்டிற்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

மேலும், கடந்த வாரத்தில் மியான்மரின் ராணுவ ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வங்கதேச வான்பரப்பின் விதிகளை மீறியுள்ளன என்ற முறையான எதிர்ப்பு ஒன்றையும் வங்கதேசம் முன்வைத்துள்ளது.

இது ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்று வங்கதேசம் கூறியுள்ள நிலையில், மியான்மர் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.

மேலும், எல்லையில் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாக எழுந்துள்ள பிரச்சனையிலும், இரு நாடுகளும் சண்டையிட தொடங்கியுள்ளன.

வெளியேறியுள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்கள் நாட்டுக்குள் திரும்பி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், நிலத்தில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளதாக வங்கதேசம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த கண்ணிவெடிகள் 1990களில் ராணுவ ஆட்சியின்போது புதைக்கப்பட்ட பழைய கண்ணிவெடிகள் என்று மியான்மர் அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு தப்பியோடியபோது கண்ணிவெடிகளில் சிக்கி ஊனமுற்ற ரோஹிஞ்சா முஸ்லிம்களிடம் பிபிசி பேசியுள்ளது.

ஆனால், இந்த கண்ணிவெடிகள் எப்போது, யாரால் புதைக்கப்பட்டன என்பது தெளிவாக தெரியவில்லை. -BBC_Tamil