தமிழ் மக்களிடம் சமய ரீதியான வேற்றுமைகள் கூடாது: டி.எம்.சுவாமிநாதன்

swaminathanதமிழ் மக்கள் மத்தியில் சமய ரீதியான வேற்றுமைகள் இருக்கக் கூடாது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவதன் மூலமே பல்வேறு முன்னேற்றங்களை அடைய முடியும் என்று இந்துமத அலுவல்கள்,

இந்து கலாசாரம் மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையின் ஏற்பாட்டில் அகில இலங்கை சைவ மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நீராவியடியில் அமைந்துள்ள சைவபரிபாலன சபையின் ஆச்சிரம மண்டபத்தில் ஆரம்பமாகியது. மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் சமயத்தை வளர்ப்பதில் காட்டும் கரிசனையை எங்களுடைய மொழியை வளர்ப்பதிலும் செலுத்த வேண்டும். இவ்வாறான விழாக்கள் மூலம் எங்களுடைய இளம் சந்ததியினருக்கு ஆன்மீக உணர்வை ஊட்ட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் ஆலயங்கள் போரினால் பல அழிவடைந்துள்ளன. என்னிடம் நிதி கேட்டு விண்ணப்பம் மேற்கொண்ட அனைத்து ஆலயங்களுக்கும் நான் என்னுடைய அமைச்சின் மூலமாக நிதி வழங்கியுள்ளேன். இன்னமும் இவ்வாறான அழிவடைந்த மற்றும் சேதமடைந்த ஆலயங்களுக்கு நிதி வேண்டுமானால் சைவபரிபாலன சபையூடாகவும், நிர்வாக சபைகள் மூலமாகவும் அறிவித்தால் அரசாங்கத்தின் சார்பாக உரிய நிதி கிடைக்க ஆவண செய்வேன்.

சைவபரிபாலன சபை யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சைவ மாநாட்டை ஏற்பாடு செய்து நடாத்துவது மிகவும் வரவேற்புக்குரியது. இந்து சமய கலாசார விவகார அமைச்சின் கீழ் இயங்கும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் பல்வேறு காத்திரமான பணிகளை இலங்கை வாழ் சைவ மக்களுக்கும், இளம் சந்ததியினருக்கும் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய பணிகள் தொடர்வதற்கு இலங்கையிலுள்ள சைவ மக்களும், சைவசமய நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: