சிறுபான்மையினருக்கு புதிய அரசியல் கட்சியாக, நியூஜென் கட்சி!

newgen2கடந்த 2013-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 28-ல், நியூஜென் கட்சியின் பதிவு அங்கீகரிக்கப்பட்டது. கட்சியின் பதிவுக்கு இராஜரத்தினம் ஆறுமுகன் மற்றும் எஸ். கோபி கிருஷ்ணன் இருவரும் முயற்சி செய்தனர். கட்சி பதிவு பெறுவதற்கு முன், ராப்பாட் மலேசியா (RAPAT) , பவர் மலேசியா (POWER) , மலேசிய இந்திய இளைஞர் மன்றம் (MIYC) , மலேசியத் தமிழ் நடவடிக்கை அணி (TAF) மற்றும் இன்னும் சில அரசுசார்பற்ற இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றினோம் என்கிறார் இராஜரத்தினம் .

அவர் அளித்த செய்தி விபரங்கள் வருமாறு.

கட்சி பதிவு பெற்ற பின், கட்சியின் தோற்றுனர்களான எஸ்.கோபி கிருஷ்ணன் தலைமைச் செயலாளராகவும், இராஜரத்தினம் கட்சியின் பொது ஆலோசனை குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.

மார்ச் 11, 2017 இல், இராஜரத்தினம் கட்சியின் உதவித் தலைவராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, மார்ச் 30-ல், கட்சியின் சிறப்புக் கூட்டத்தில், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப கட்சிக்குப் புதிய பெயரும் சின்னமும் வடிவமைக்க பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், பதிவு இலாகா அதற்கு அனுமதி வழங்கவில்லை.

newgen1இதற்கிடையே, கட்சியின் தலைவரும் துணைத் தலைவரும் பதவி விலகியதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 22 இல், கட்சியின் தலைமைச் செயலாளர் கோபி கிருஷ்ணனும் தனது பதவியை இராஜினாமா செய்தார். இச்செய்தியைச் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்த இராஜரத்தினம், 2017/2019 ஆம் ஆண்டுக்கான உச்சமன்ற உறுப்பினர்களை நியமிக்க/தேர்ந்தெடுக்க பொதுக்கூட்டத்தைக் கூட்டினார்.

பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

செப்டம்பர் 16-ல் நடந்த 5-ம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில், கட்சி பிரதிநிதிகளும் உறுப்பினர்களும் ஒருமுகமாக எடுத்த முடிவுகள் :-

இராஜரத்தினம் தலைமையிலான 2017/2019 ஆம் ஆண்டு புதிய நிர்வாகக் குழுவிற்கு முழு ஆதரவு அளித்தல்.

பொதுக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் புதிய பெயர், சின்னம், முகவரி மற்றும் நோக்கங்களுக்கு முழு ஆதரவு அளித்தல்.

நியூஜென் கட்சி, ‘சிறுபான்மையினர் உரிமை செயல் கட்சி’ (மீரா) எனும் புதிய பெயரில் தொடர்ந்து செயல்படும். பல்லினக் கட்சியான இதில், நாடுதழுவிய நிலையில் சிறுபான்மை மக்கள் அனைவரும் உறுப்பியம் பெறலாம்.

14 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, பக்காத்தான் ஹராப்பானுடன் இணைவது அல்லது ஒத்துழைப்பது குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தைப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கொடுத்தல்.

பக்காத்தான் ஹராப்பானில் இருக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடனும் சம்மதத்துடனும் அக்கூட்டணியில் இணைய வேண்டும். ‘மீரா’ நாட்டிலுள்ள அனைத்து சிறுபான்மை இனங்களின், குறிப்பாக, இந்தியர், பூர்வக்குடியினர், சபா-சரவாக் பூர்வக்குடியினர் ஆகியோரின் கோரிக்கைகளையும் அபிலாஷைகளையும் பிரதிநிதிக்கும் கட்சியாக விளங்கும்.

பல அரசுசாரா இயக்கங்களின் ஆதரவு

நியூஜென் கட்சி (மீரா) பக்காத்தான் ஹராப்பானுடன் இணைய நூற்றுக்கும் அதிகமான அரசுசாரா இயக்கங்கங்களின் தலைவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளதாக அதன் தலைவர் கூறுகிறார்.

அத்தலைவர்கள் நியூஜென் கட்சியில் இணைவதற்கு விருப்பமும் தெரிவித்துள்ளனர். இதன்வழி, நியூஜென் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை 100,000-ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறார் இராஜரத்தினம்.

தேசிய அதிகாரமளிக்கும் நிகழ்வு 2040 (NEA@2040)

நியூஜென் கட்சி அரசுசாரா இயக்கங்களுடன் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது. அக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை கூட்டம் கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது :-

நாள்   : அக்டோபர் 1, 2017 (ஞாயிறு)

நேரம் : காலை மணி 9 – மாலை 5 மணி வரை

இடம்  : தி.கே.பி. கூட்டம் & மாநாடு , செண்ட்ரல் பிளாசா, ஜாலான் சுல்தான் இஸ்மாயில், கோலாலம்பூர்.