ஆர்சிஐ விசாரணையில் மகாதிர்

dr mஇன்று  பிற்பகல்  மணி   12.15 அளவில்   முன்னாள்   பிரதமர்   மகாதிர்  முகம்மட்   பேங்க்   நெகாராவின்   அன்னிய   செலாவணி   இழப்புகள்  மீது   விசாரணை   நடத்தும்   அரச  விசாரணை   ஆணைய(ஆர்சிஐ)த்திடம்   சாட்சியமளித்தார்.

முதலில்  தம்   வாக்குமூலத்தை   வாசித்த   மகாதிர்,  பேங்க்  நெகாரா  தனித்து   செயல்படும்  ஓர்   அமைப்பு   என்றார்.  அதன்  கவர்னர்தான்   அதன்   தலைவர்.

“பேங்க்  நெகாரா    செயல்பாடுகள்  குறித்து  அவ்வப்போது   அதன்  இயக்குனர்   வாரியத்துக்குத்   தெரியப்படுத்த   வேண்டியது   கவர்னரின்   பொறுப்பு.

“பிரதமர்  என்ற  முறையில்    நான்  பேங்க்   நெகாரா   நிர்வாகத்தில்   தலையிட்டதில்லை.  அதன்  கொள்கைகளிலும்  விவகாரங்களிலும்   தலையிடும்   அதிகாரம்   சட்டப்படி  எனக்கு  இல்லை    என்றும்   நம்புகிறேன்”,  என்று  மகாதிர்  கூறினார்.

அதற்காக  பேங்க்  நெகரா  கவர்னர்   மத்திய   வங்கியின்   நடவடிக்கைகள்  பற்றி   பொதுவாக   பேசியதே  இல்லை   என்றும்   சொல்லி  விட  முடியாது  என்றும்   அவர்   குறிப்பிட்டார்.

“ஆனால்,  எல்லாம்  வழக்கமான  பேச்சுத்தான்.  எதையும்  விவரமாகவோ  விளக்கமாகவோ  சொன்னதில்லை”,  என்றார்.

ஒரே  ஒரு  தடவைதான்,  1980கள்  பிற்பகுதியில்    (பேங்க்  நெகரா  கவர்னர்) ஜப்பார்   பேங்க்   நெகாரா  வெளிநாணய   செலாவணி   வணிகம்   நடக்கும்   அறையைப்  பார்ப்பதற்குத்  தம்மை   அழைத்திருந்தார்   என  மகாதிர்  தெரிவித்தார்.

“அரை  மணி   நேரம்தான்   அங்கிருந்தேன்.  அழைத்தாரே   என்பதற்காகத்தான்   அங்கு   போனேன்”,  என்றார்.

நிதி   அமைச்சின்  முன்னாள்   துணைத்    தலைமைச்  செயலாளர்   கிளிப்பர்ட்  பிரான்சிஸ்   ஹெர்பர்ட்,    வெளிநாணயச்  செலாவணி  இழப்பு  குறித்துத்    தெரிவிக்கப்பட்டபோது  மகாதிர்  “சில  வேளைகளில்    ஆதாயம்   கிடைக்கும்    சில   வேளைகளில்   இழப்பு    ஏற்படலாம்”   என்று    கூறினார்  என்பதை   நினைவுப்படுத்தினார்.

அதற்குப்  பதிலளித்த   மகாதிர், “நான்  ‘சில வேளைகளில்   ஆதாயம்  கிடைக்கலாம்   அல்லது   நட்டப்படலாம்’   என்று  கூறினேனா  என்பது  நினைவில்லை.  அப்படி  நான்  சொல்லியிருந்தால்  அதில்   ஒன்றும்  விசித்திரமில்லை,  ஏனென்றால் ஜப்பார்   என்னிடம்  போரெக்ஸ்  வணிகம்   அப்போது   நாட்டின்  பணக்கையிருப்பைச்   சமப்படுத்த   உதவியுள்ளதாகக்  கூறியிருந்தார்”,  என்றார்.

ஆனால், ரிம30பில்லியன்  இழப்பு   குறித்து   தமக்குத்  தெரிவிக்கப்படவில்லை   என்றார்.

“அப்படி   நான்  சொல்லியிருந்தால்  ரிம30 பில்லியன்  இழப்பு   எனக்குத்   தெரிவிக்கப்படவில்லை   என்பது  நிச்சயம்.

“எனக்குத்   தெரியப்படுத்தப்பட்டிருந்தால்   நான்  அப்படிச்   சொல்லியிருக்க   வாய்ப்பில்லை”,  என்று  குறிப்பிட்டார்.