ஆர்சிஐ விசாரணையின் நோக்கம் என்னையும் ஒரு திருடனாகக் காட்டுவதே, மகாதிர்

 

BnrecoveredMsaysபேங்க் நெகாரா அதன் அந்நியச் செலவாணி நட்டத்திலிருந்து மீட்சி கண்டுவிட்டது. இப்போது நடந்து கொண்டிருக்கும் அந்நியச் செலவாணி வர்த்தகத்தில் (போரெக்ஸ்) ஏற்பட்ட நட்டம் குறித்த அரச ஆணைய விசாரணை (ஆர்சிஐ) அந்த நட்டம் பற்றி விசாரிப்பதற்கல்ல என்று மகாதிர் கூறுகிறார்.

“அது பணத்தை இழந்தது பற்றியதல்ல, ஏன்றால் அதற்குப் பின்னர், பேங்க் நெகாரா முற்றாக மீட்சி பெற்றுள்ளது.

“அது மீட்சி மட்டும் பெறவில்லை, இன்று அதன் சொத்துடமை மிகப் பெரிய அளவில் இருக்கிறது – நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களில் அளவில் இருக்கிறது.

“உங்களுக்கு ஞாபகம் இருக்குமானால், ஆரம்பத்தில் பேங்க் நெகாராவுக்கு கொடுக்கப்பட்ட மூலதனம் வெறும் ரிம5 மில்லியன்தான். இன்று, அதனிடம் ரிம100 பில்லியனுக்கும் கூடுதலாக இருக்கிறது.

“ஆக, பேங்க் நெகாரா தோல்வியடைந்த ஒன்று கூறப்போகிறீர்களா? அது நமது பணத்தை கவனித்துக் கொள்ளத் தவறிவிட்டதா?”, என்று மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார்.

போரெக்ஸ் குறித்த அரச விசாரணை ஆணையத்தின்முன் 24 ஆவது சாட்சியாக தோன்றிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்த ஆசிஐ விசாரணை தன்னையும், பக்கத்தான் ஹரப்பானையும், அன்வார் இப்ராகிம்மையும் தவறான தோற்றத்தில் காட்டும் நோக்கம் கொண்டது என்று மகாதிர் மீண்டும் மீண்டும் கூறினார்.

தம்மிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சம்பந்தமில்லாதவை. அவை பேங்க் நெகாரா அடைந்த நட்டம் பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கம் கொண்டிருக்கவில்லை என்று கூறிய மகாதிர், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தாம் சரியான பதில்களை அளித்துள்ளதாக நம்புவதாக கூறினார். மேலும், அப்போது நிதி அமைச்சராக இருந்த அன்வாரும் அவருக்கு தெரிவிக்கப்பட்ட தகவலுக்கு ஏற்ப பதில் அளித்துள்ளார் என்றும் மகாதிர் கூறினார்.

“நான் எனது அறிக்கையில் கூறியிருந்தது போல், இந்த அரச ஆணையம் பேங்க் நெகாரவுக்கு ஏற்பட்ட நட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக அல்ல. இது பொதுமக்களிடத்தில் என்னை ஒரு கெட்டவனாகக் காட்டுவதற்கு ஒரு வழியைக் காண்பதற்காகும் – அதாவது, எனது காலத்தில்கூட பணம் திருடப்பட்டுள்ளது, ரிம30 மில்லியன்.

அதுதான் அவர்களின் நோக்கம். இன்று நாட்டை நிர்வாகிக்கும் கொள்ளைக்காரர்களில் ஒருவரைப் போல் என்னையும் காட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள். ஆனால், அதில் அவர்கள் வெற்றிபெறவில்லை”, என்று விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளின் தன்மை குறித்து கேட்டதற்கு, மகாதிர் கூறினார்.