திருமுருகன் காந்தி மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து

Thirumurugan-gandhiமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டநால்வர் மீதான குண்டர்கள் தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள உத்தரவில் திருமுருகன் காந்தி, இளமாறன், அருண் மற்றும் டைசன் மீது பதியப்பட்ட அந்த வழக்கை ரத்து செய்துள்ளது.

கடந்த மே மாதம் 21 ஆம் தேதியன்று சென்னை மெரினா கடற்கரையில், அனுமதியின்றி, ஈழத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வை நடத்த முயன்ற அந்த நால்வரும் கைது செய்யப்பட்டார்கள்.

கைதானவர்கள் மீது குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனங்களை பதிவு செய்திருந்தன.

தமிழக அரசின் இது போன்ற தொடர் குண்டர் சட்ட நடவடிக்கைகளை ஏற்க முடியாது என கூறி மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களிலும் ஈடுப்பட்டனர்.

தொடர்ந்து இந்த விவகாரத்தில் நீதி விசாரணையும் நடைபெற்று வந்த சூழலில் இன்று இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

முன்னதாக, சேலம் கல்லூரி ஒன்றின் வாயிலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரச்சுரங்களை கொடுத்துக்கொண்டிருந்த வளர்மதி என்கிற மாணவியை குண்டர் சட்டத்தில் கைதுசெய்தது செல்லாது எனவும் கூறிய சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 5 ஆம் தேதி அந்த வழக்கையும் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil

TAGS: