காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் என்ன செஞ்சீங்க? மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் சுளீர்

supreme_courtடெல்லி: காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்தது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் வழக்கில் வாதாடிவிட்ட நிலையில், மத்திய அரசின் வழக்கறிஞர் இன்று வாதம் முன் வைத்தார்.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரமுள்ளது, காவிரி நடுவர்மன்றம் ஆலோசனைமட்டும் வழங்கலாம் என்று மத்தியஅரசு வழக்கறிஞர் வாதம் முன் வைத்தார். இது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு குற்றச்சாட்டு

வழக்கு வாதத்தின்போது, தமிழக அரசு வழக்கறிஞர் குறுக்கிட்டு, காவிரி விவகாரத்தில் சுமூக தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

உச்சநீதிமன்றம் கண்டனம்

அதேபோல மத்திய அரசின் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டும் கண்டனம் தெரிவித்தது. 2013ல் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியாகிவிட்டபோதிலும், இத்தனை ஆண்டுகளாக அதை செயல்படுத்தாமல் மத்திய அரசு கால தாமதம் செய்தது ஏன் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. இது தவறான அணுகுமுறை என்று கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம்.

விளக்கம் கேட்டோம்

இதையடுத்து, மத்திய அரசு சார்பில் பதிலளித்து வழக்கறிஞர் வாதாடினார். அவர் கூறுகையில், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் கோரிதான் காத்திருந்தோம் என்றார்.

தயாராக உள்ளோம்

மேலும், சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் எந்த வகையான தீர்ப்பு வழங்கினாலும், அதை செயல்படுத்த மத்திய அரசு தயார் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: