பாஸ் மற்றும் ஹரக்காவுக்கு எதிராக சித்தி காசிம் வழக்கு தொடர்கிறார்

 

sitihashimthreatensதமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக வழக்குரைஞர் சித்தி காசிம் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் கட்சியின் நாளிதழ் ஹரக்கா டெய்லி மீது வழக்கு தொடர்வதற்காக சட்டப்பூர்வமான கோரிக்கை கடிதத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

“பாஸ் மற்றும் ஹரக்காவுக்கு எதிரான தமது வழக்கு தாம் செய்திருந்த கொர்பான் பதிவைப் பற்றி பொதுமக்களிடம் பொய்களைப் பரப்பியதற்காகும்.

“உங்களைக் கொடுமைப்படுத்தி அடக்குவதற்கு எவரையும் அனுமதிக்காதீர்”, என்று சித்தி அவரது முகநூல் பதிவில் கூறுகிறார்.

அவருக்கு சினமூட்டிய கட்டுரை எதுவென்று சித்தி குறிப்பிடவில்லை. ஆனால், ஹரக்கா டெய்லி கெடா பாஸ் முஸ்லிமாட் தலைவர் சித்தி அய்ஷாவை மேற்கோள் காட்டி எழுதியிருந்தது பற்றி சித்தி செப்டெம்பர் 8 இல் குறிப்பிட்டார்.

செப்டெம்பர் 7இல் வெளியிடப்பட்ட கட்டுரையில், சித்தி காசிம் அவரது முகநூல் பதிவில் இஸ்லாத்தில் பின்பற்றப்படும் கொர்பான் பற்றி கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அவர் முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கிறார் என்று சித்தி அய்ஷா குற்றம் சாட்டியிருந்தார்.

இதைத் தொடர்ந்து சித்தி காசிம்க்கு எதிராக பாஸ் கட்சி குறைந்தபட்சம் நான்கு போலீஸ் புகார்களை திராங்கானு, பேராக், பெர்லிஸ் மற்றும் கெடா மாநிலங்களில் செய்துள்ளது.

தமது முகநூல் பதிவை சித்தி அய்ஷா சரியாகப் பார்க்காததோடு தவறாகவும் புரிந்து கொண்டுள்ளார் என்று சித்தி காசிம் கூறினார்.

செப்டெம்பர் 18 இல் சித்தி காசிம் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில், ஹரக்கா டெய்லி 48 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்; அது அதன் தளத்தின் முன்பகுதியில் ஏழு நாள்களுக்கு காட்டப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

மேலும், ஹரக்கா டெய்லி அவருக்கு எதிராக அவதூறுகளை வெளியிடக்கூடாது என்று கோரியுள்ளதோடு, அவருடைய நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு ஈடாக ஒரு “நியாயமான தொகையை” அளிக்கும்படியும் சித்தி காசிம் கோரியுள்ளார்.