அமெரிக்காவை நெருக்கடியில் தள்ளினால் வடகொரியாவை அழிப்போம்: டிரம்ப் எச்சரிக்கை

donald-trump_orderedஅமெரிக்கா தன்னையும் தன் கூட்டாளி நாடுகளையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டால், வடகொரியாவை அமெரிக்கா முற்றிலும் அழித்து நிர்மூலமாக்கிவிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபை கூட்டத்தில் முதல் முறையாக பேசிய அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபரை நையாண்டி செய்து, “ராக்கெட் மனிதர், தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

ஐ.நா. எச்சரிக்கையையும் மீறி வடகொரியா அணு ஆயுதத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிர்வாகப் பகுதியான குவாம் தீவை ஒட்டி ஏவுகணை சோதனை நடத்தும் திட்டத்தை கடந்த மாதம் வடகொரியா அறிவித்த பிறகு நிலைமை மேலும் மோசமடைந்தது.

ஆனால், எந்த அச்சுறுத்தலுக்கும் தாங்கள் அடிபணியப் போவதில்லை என்றும், சர்வதேச அச்சுறுத்தல்களை தங்களை மேலும் உறுதிப்படுத்தி, அணு ஆயுதத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கே உதவும் என்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தெரிவித்திருக்கிறார்.

இரான் மீது டிரம்ப் சாடல்

மேலும் ஐ.நா. மன்றத்தில் உரையாற்றிய டிரம்ப், இரானை `ஊழல் சர்வாதிகார ஆட்சிட என்று விமர்சித்த டிரம்ப், அது முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் சீர்குலைக்க முற்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

வட கொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இரான் தனது சொந்த மக்களை கவனிப்பதில் முன்னுரிமை அளித்து, பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம், இரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்காக ஒப்பந்தம் செய்தது மிகுந்த தர்மசங்கடமான செயல் என்றும் விமர்சித்தார்.

(இஸ்லாமியவாத பயங்கரவாதக் குழுக்களால் முன்வைக்கப்பட்ட அச்சுறுத்தலை நசுக்குவதாக அவர் வாக்குறுதி அளித்ததோடு, அவர்களை தோல்வியுற்றவர்கள் என்று கூறினார்.) -BBC_Tamil