பிச்சை எடுப்பது போல கர்நாடகாவிடம் காவிரி நீருக்காக கெஞ்சுகிறோம்: சுப்ரீம்கோர்ட்டில் தமிழகம் வாதம்

cauvery-caseடெல்லி: காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் வழக்கில் வாதாடிவிட்ட நிலையில், மத்திய அரசின் வழக்கறிஞர் இன்று வாதம் முன் வைத்தார்.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரமுள்ளது, காவிரி நடுவர்மன்றம் ஆலோசனைமட்டும் வழங்கலாம் என்று மத்தியஅரசு வழக்கறிஞர் வாதம் முன் வைத்தார். இது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையியில் தமிழக அரசு சார்பிலும், குறுக்கிட்டு, வாதம் முன்வைக்கப்பட்டது. தமிழக அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுகளை நம்ப முடியாது.

2007ம் ஆண்டு காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியானது. ஆனால் மத்திய அரசு 2013ல்தான் அரசிதழில் அந்த தீர்ப்பை வெளியிட்டது. இப்படி தாமதம் செய்யும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சந்தேகமே. எனவே, உச்சநீதிமன்றமே திட்டத்தை வகுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால் நூற்றாண்டாக கர்நாடகாவுடன் காவிரி விவகாரத்தில் கசப்பான அனுபவம்தான் உள்ளது. பிச்சை எடுப்பது போல கர்நாடகாவிடம் ஆண்டுதோறும் கெஞ்சுகிறோம். அப்படியும், அவர்கள் விடமறுப்பதால், உச்சநீதிமன்றத்தை அணுகி சிறிதளவு காவிரி நீரைத்தான் பெறுகிறது தமிழகம் என்று தெரிவித்தார். தொடர்ந்து வாதம் நடைபெற்று வருகிறது.

tamil.oneindia.com

TAGS: