தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ளார் என சகோதரர் இக்பால் கஸ்கர் போலீசிடம் தெரிவித்ததாக தகவல்

dawood_ibrahimமும்பை,

மும்பையில் 1993-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ந்தேதி 257 பேரை கொன்று குவித்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி, தாவூத் இப்ராகிம் (வயது 59). அவர் மும்பை தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி, அங்கு அந்த நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். அவரை கைது செய்வதற்கு ‘ரெட் கார்னர் நோட்டீசும்’ விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள தாவூத் இப்ராகிம், இருப்பிடம் குறித்த பல்வேறு முக்கிய ஆவணங்களை பாகிஸ்தான் அரசிடம் இந்தியா அளித்துள்ளது.

இதுவரையில் பாகிஸ்தான் எந்தஒரு நடவடிக்கையும் எடுத்தது கிடையாது, மாறாக எப்போதும் போல இல்லை என மறுப்பு மட்டும் தெரிவித்தது. பாகிஸ்தானில்தான் தாவூத் இப்ராகிம் உள்ளார் என்பது தொடர்பாக முகவரியையும் இந்திய அரசு வெளியிட்டது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய சதிகாரரான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்ததில் இருந்து சி.பி.ஐ. தேடி வருகிறது. தாவூத் இப்ராகிம்மை சர்வதேச தீவிரவாதி என்று அமெரிக்கா அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கட்டுமான அதிபரிடம் மிரட்டி பணம் பறித்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி இக்பால் கஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸ் கைது செய்தது.

தானே போலீஸ் இக்பால் கஸ்கரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. விசாரணையின் போது தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் உள்ளார் என இக்பால் கஸ்கர் கூறியதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது. விசாரணையின் போது கராச்சியில் தாவூத் இப்ராகிம் வசிக்கும் 4 இடங்களின் முகவரியை கஸ்கர் கூறியதாக தகவல்கள் தெரிவித்து உள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. இப்போது கிடைக்கப்பெற்று உள்ள தகவல்களை, ஏற்கனவே தாவூத் இப்ராகிம் விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐயிடம் தெரிவிக்க போலீஸ் திட்டமிட்டு உள்ளது.

ஏற்கனவே தாவூத் இப்ராகிம் இருப்பிடம் தொடர்பாக விசாரணை முகமைகள் கொண்டு உள்ள தகவல்களும், இப்போது கிடைத்து உள்ள தகவல்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பதை பார்க்க முயற்சி செய்யப்படுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் சிபிஐயும் இவ்விசாரணையில் இணைய வாய்ப்பு உள்ளது என தானே போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்து உள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

-dailythanthi.com

TAGS: