அஸ்மின்: பீர் 2017 விழா நடத்தலாம், ஆனால் விதிகளுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும்

 

AzminBeer2017பீர் விழாக்களில் இதர இனங்கள் பங்கேற்கும் உரிமையை மாநில அரசு மதிக்கிறது, ஆனால் அவ்வாறான நிகழ்ச்சிகள் ஊராட்சிமன்றங்களின் விதிகளுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் அஸ்மின் அலி கூறினார்.

“மாநில அரசின் நிலைப்பாடு இதுதான்: பொறுப்புள்ள அரசாங்கம் என்ற முறையில் இதர இனங்களின் உரிமைகள் மற்றும் சமயங்கள் ஆகியவற்றை நாம் மதிக்க வேண்டியது அவசியம் என்பதோடு மட்டுமில்லாமல், நாம் அவர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமும் பாதுகாப்பும்கூட அளிக்க வேண்டும் – அது மாநிலத்தின் கொள்கை.

“ஆனால் எந்த நிகழ்ச்சிகளனாலும், அவற்றின் ஏற்பாட்டாளர்கள் மாநில அரசு அல்லது ஊராட்சிமன்றம் விதித்துள்ள விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்”, என்று அஸ்மின் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

பீர் விழா 2017 சிலாங்கூரில் நடத்தப்படும் சாத்தியம் பற்றி அஸ்மினிடம் வினவப்பட்டது.

சில அரசுசார்பற்ற அமைப்புகள் இந்த விழாவை சிலாங்கூரில் நடத்தப்படுவதை தடுக்கும் நோக்கத்துடன் சிலாங்கூர் சுல்தானின் தலையீட்டை கோரும் கோரிக்கையை சிலாங்கூர் அரண்மனையிடம் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளன.

இந்நிகழ்ச்சியை மாநில அளவில் நடத்துவதற்கு மனு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, ஏற்பாட்டாளர்கள் ஊராட்சிமன்றத்திடம் மனு செய்துள்ளனரா என்பது தமக்குத் தெரியாது என்ற கூறிய அவர், ஆனால் அது மாநில அளவிற்கு வந்து சேரவில்லை என்றார்.