பொதுப் பல்கலைக்கழகங்களில் இந்தியர்களுக்கு அதிகமான இடங்களை ஒதுக்குங்கள்

india-studentபொதுப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு அதிகமான இடங்களை ஒதுக்க வேண்டுமென, இந்தியர்கள் அரசாங்கத்தைக் கேட்பதாக, மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை விரிவுரையாளர், பேராசிரியர் எம்.இராஜேந்திரன் தெரிவித்தார்.

பொதுப் பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் இருக்கும் ஒதுக்கீட்டு முறை (கோட்டா) இந்தியச் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்றார் அவர்.

“பொதுப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, அரசாங்கம் மறுஆய்வு செய்ய விரும்புகிறோம். 100 இடங்கள் இருந்தால், இந்திய மாணவர்களுக்குச் சிறந்த 10 இடங்களை ஒதுக்க வேண்டும்,” என்றார்.

இன்று, மலாயா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்திய இளைஞர்களுக்கான ‘தேசிய உருமாற்றம்’ (TN50) நிகழ்வில் இராஜேந்திரன் இவ்வாறு பேசினார்.

இந்திய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு, சிறந்த தேர்ச்சியை அடைகின்றனர். ஆனால், அவர்களுக்கு அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் நுழைவு கிடைப்பதில்லை, அவர்கள் விரும்பியத் துறையும் கிடைப்பதில்லை. இதனால், அவர்கள் மிகவும் பின் தங்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர், என்று அவர் விளக்கப்படுத்தினார்.

“இது வேலை இல்லாத சமுதாயத்தை உருவாக்கும், சுய மரியாதையைக் குறைக்கும். டாக்டராக வேண்டும், வக்கீலாக வேண்டும் எனும் அவர்களின் கனவுகள் சிதைக்கப்படுகின்றன,” என்றார் அவர்.

பெரும்பாலான இந்திய இளைஞர்கள் ஏழை குடும்பங்களில் இருந்து வருகிறார்கள், தனியார் பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர அவர்களுக்கு வசதியில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.