கேவியஸ் : கேமரன் மலை வேட்பாளர் விஷயத்தில் பி.என்.-னின் முடிவை ஏற்பேன்

Kayvies-PPP-MIC-Cameron-685x320-1எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விஷயத்தில், பாரிசான் நேசனல் உச்சமன்றம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் தாம் மதித்து, ஏற்கவுள்ளதாக மக்கள் முற்போக்குக் கட்சியின் தேசியத் தலைவர், எம்.கேவியஸ் கூறியுள்ளார்.

பாரிசான் நேசனல் உச்சமன்றம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், பொதுத் தேர்தல் வெற்றியை உறுதி செய்யவும், கட்சி நலனைக் காக்கவுமே என அவர் சொன்னார்.

“பி.என். உச்சமன்ற முடிவு பற்றி எனக்குக் கவலை இல்லை, ஆனால், அங்கு நிறுத்தப்படும் வேட்பாளர், அனைவருக்கும் விருப்பமான ஒருவராக இருக்க வேண்டும்,” என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்குக் குறிவைத்து, கேவியஸ் தனது பரப்புரைகளை M-Kayveasமேற்கொண்டிருந்தது தெரிந்ததே. கடந்த 13-வது பொதுத் தேர்தலில், முன்னாள் ம.இ.கா. தேசியத் தலைவர் ஜி.பழநிவேலு அத்தொகுதியில் நின்று வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து அமைச்சின் ஆலோசகருமான கேவியஸ், கேமரன் மலையில் வெற்றிபெற்று, அத்தொகுதி மக்களுக்குச் சேவையாற்ற தம்மை அனுமதிக்குமாறு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னமே, தாம் பிரதமர் நஜிப்பிடம் கேட்டுள்ளதாகவும் கூறினார்.

இருப்பினும், நேற்று நிறைவடைந்த ம.இ.கா. தேசிய மாநாட்டில், கேமரன் மலை தொகுதியை மீண்டும் ம.இ.கா.-விற்கே கொடுக்குமாறு, அதன் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் நஜிப்பைக் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

11-வது பொதுத் தேர்தலில் இருந்து, ம.இ.கா. அத்தொகுதியில் போட்டியிட்டு வருகிறது.

கடந்த பொதுத் தேர்தலில், கேவியஸ் பேராக், தெலுக் இந்தான், பாசீர் பெடாமார் சட்டமன்றத்தில் போட்டியிட்டு, ஜசெக-வின் தேரென்ஸ் நாயுடுவிடம் 13,037 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.