கெட்கோ நில விவகாரம், லோட்டஸ் குழும உரிமையாளர்கள் இருவர் கைது

macc - gatcoமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) , கம்போங் செராம்பாங் இண்டா அல்லது லாடாங் கட்கோ நில உரிமையாளர் மற்றும் விற்பனை விவகார வழக்குத் தொடர்பாக விசாரணை செய்ய, லோட்டஸ் குழும உரிமையாளர்கள் இருவரைக் கைது செய்துள்ளது.

இன்று காலை சுமார் 11 மணியளவில், ரெனா.துரைசிங்கம்  மற்றும் ரெனா.இராமலிங்கம் இருவரையும் எம்.ஏ.சி.சி. கைது செய்தது. புத்ரா ஜெயாவிலுள்ள  எம்.ஏ.சி.சி. தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவ்விருவரும், பின்னர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைதானதை உறுதிபடுத்திய எம்.ஏ.சி.சி.-யின் விசாரணை குழு இயக்குநர் சிமி அப்துல் கானி, அது குறித்து மேலும் கருத்துரைக்க மறுத்துவிட்டார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்பில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாளை,  தடுப்புக் காவல் நீட்டிக்க, அவர்கள் இருவரும் புத்ரா ஜெயா உயர்நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 18-ல், கெட்கோ விவகாரத்தை நன்கு அறிந்தவர் என நம்பப்படும், 68 வயதான ஒருவரை maccஎம்.ஏ.சி.சி. கைது செய்ததாக அதன் தலைமை ஆணையர் சூல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார். அவர் இந்த கெட்கோ நில விற்பனையில் இடைத் தரகராக இருந்தார் எனத் தெரிகிறது.

முன்னதாக, சூல்கிப்ளி அஹ்மாட்டின் தலைமையில், எம்.ஏ.சி.சி. குழு ஒன்று, பாதிக்கப்பட்ட கட்கோ குடியேறிகளை நேரில் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் மாநில செயலகம், நெ.செம்பிலான் டெவலப்மென்ட் கோபரேஷன், ஜாலான் ஈப்போ – சிங்கம் & யோங் கணக்கியல் நிறுவனம், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தாமரை ஹோல்டிங்ஸ் சென்.பெர். ஆகியவை எம்.ஏ.சி.சி.-யின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்விவகாரத்தில் எம்.ஏ.சி.சி. தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் கூடிய விரைவில் இன்னும் பலர் கைது செய்யப் படலாம் எனவும் சூல்கிப்ளி கூறினார்.

இதற்கென ஒரு சிறப்புப் பணிப்படை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.