சோமாலியில் வெடிகுண்டு தாக்குதல்: 30 பேர் பலி

சோமாலி நாட்டின் தலைநகரான மொகதிஷுவின் பிரதான பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள ஹோட்டலின் வாசலில், வெடிபொருட்களோடு வந்த ஒரு லாரி, வெடித்ததில், பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்தியது யார் என தெளிவாக தெரியவில்லை. அரசுக்கு எதிராக போராடிவரும், அல்-கய்தாவுடன் தொடர்புடைய, அல்ஷபாப் குழுவின் தொடர் இலக்காக மொகதிஷு இருந்து வருகிறது.

முதல் குண்டுவெடிப்பிற்கு பிறகு, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய காவல்துறை தலைவர் முகமது ஹுசைன், ` அது ஒரு கனரக வாகன குண்டு. அதிகமானோர் இறந்துள்ளனர். ஆனால், எவ்வளவு பேர் என்பதை எங்களால் கூற முடியவில்லை, காரணம், அந்த பகுதியில் வாகனம் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது` என்றார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், டஜன் கணக்கானோர் இறந்திருக்கலாம் என பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் உள்ள, பிபிசியின் சோமாலி செய்தியாளர் கூறுகையில், சஃபாரி ஹோட்டல் முழுமையாக இடிந்து தரைமட்டமாகிவிட்டதாகவும், இடிபாடுகளுக்கு இடையே மக்கள் சிக்கியிருக்கலாம் என எண்ணுவதாகவும் கூறினார்.

மொகதிஷூவில் வசிக்கும் முஹதிஎன் அலி , ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், , `இதுவரை நான் பார்த்ததிலேயே இதுதான் மிகப்பெரிய குண்டு வெடிப்பு, அந்த பகுதியையே அது முழுமையாக அழித்துவிட்டது` என்றார். -BBC_Tamil