மக்களின் மனநிலை மாறுகிறது.. பாஜகவுக்கு பாடம் கற்பித்த குர்தாஸ்பூர் இடைத்தேர்தல் படுதோல்வி!

டெல்லி: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் லோக்சபா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுனில் ஜாஹர் 1,92,219 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சலேரியாவை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் பாஜக வசம் இருந்த இந்த தொகுதி காங்கிரசுக்கு மாறியுள்ளது. இந்த வெற்றி பாஜகவுக்கு முக்கியமான பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. அதே நேரம் காங்கிரசின் பொறுப்புணர்வை அதிகரித்துள்ளது.

குர்தாஸ்பூர் வெற்றியில் கவனிக்க வேண்டியது, காங்கிரஸ் பெற்றுள்ள அபார வாக்கு வித்தியாசம்தான். சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்பது, பாஜகவுக்கு கொடுக்கப்பட்ட எச்சரி்க்கையாக பார்க்கப்படுகிறது.

மக்கள் மனநிலை மாற்றம்

பாஜகவின் கோட்டையான குர்தாஸ்பூரில் காங். பெற்றுள்ள இந்த வெற்றி, மக்களின் மன ஓட்டம் பாஜகவுக்கு எதிராக மாறியுள்ளதை காண்பிக்கிறது. இதன் மூலம், பிரதமர் மோடியின் கனவான, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற கனவுக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

சீக்கியர், இந்து, வணிகர்கள் எதிர்ப்பு

குர்தாஸ்பூர் என்பது பஞ்சாப்-ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையிலுள்ள ஒரு முக்கிய பகுதியாகும். இங்கு சீக்கியர்களும், இந்துக்களும் பெரும்பான்மையாக உள்ளனர். அம்மாநிலத்தின் முக்கிய வணிக நகரங்களில் இதுவும் ஒன்று. காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த மக்களுக்கு இது வணிக நோக்கங்களை நிறைவேற்றும் நகரமாக உள்ளது. இந்து, சீக்கியர்கள் அதிகம் உள்ள பகுதியில், வணிகர்கள் அதிகம் உள்ள பகுதியில் பாஜக தோற்றுள்ளது, நாட்டின் அரசியல் அலை மாறிவருவதை சுட்டிக் காட்டுவதாக உள்ளது.

மறு பரிசீலனை செய்யும் மக்கள்

நாட்டில் பொருளாதாரம் மந்தமாக உள்ளது, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது, ஜிஎஸ்டியாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையாலும் பெரும்பாலான தொழில்கள் நசிவடைந்துள்ளன. ‘அச்சே தின்’ கோஷத்தை நிறைவேற்றுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எனவே அரசு மீதான கருத்தாக்கத்தை வாக்காளர்கள் மறு பரிசீலனை செய்ய தொடங்கியுள்ளனர்.

கோஷங்களுக்கு மேல் கோஷம்

2014 லோக்சபா தேர்தல் நேரத்தில், மோடியின் பிரமாண்ட எழுச்சி என்பது, அவரை சுற்றியிருந்த வாய்ப்புகளால் கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்தியர்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் கொள்கைகள் மோடியிடம் இருப்பதாக மக்கள் நம்பியிருந்தனர். ஆனால், இப்போது, அரசு வெறுமனே கோஷங்களை முன் வைக்கிறது, புதிதாக மேலும் பல கோஷங்களையும் முன் வைக்கிறது. ஆனால், நடைமுறையில் எதுவும் மாறவில்லை, மோசமாகிறது என்ற எண்ணம் வெகு ஜனங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பாஜக தோல்விகள்

பல்வேறு இடைத் தேர்தல்கள் முடிவுகள் பாஜகவுக்கு எதிரான மக்களின் மன ஓட்டத்தை காட்டுகின்றன. பெரிய பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மாணவர் அமைப்பு தேர்தல்களில் பாஜக ஆதரவு அமைப்புகள் தோல்வியை தழுவியுள்ளன. அது தலைநகர் டெல்லியாக இருகலாம், யோகி ஆளும் உ.பி.யிலுள்ள அலகாபாத்தாக இருக்கலாம். ரிசல்டுகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக உள்ளது.

ஆம் ஆத்மி பலவீனம்

இந்த தேர்தலில் கவனிக்கத்தக்க மற்றொரு அம்சம், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனது செல்வாக்கை இழந்து வருகிறது. இதன் மூலம், நாடு மீண்டும் பாஜக vs காங்கிரஸ் என்ற இரு துருவ அரசியலை நோக்கி போகத்தொடங்கியுள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் வாக்குகளை சிதற வைத்த ஆம் ஆத்மிக்கு பலம் குறைந்துள்ளது காங்கிரசின் பிளஸ்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

காங்கிரசின் சவால்

அதேநேரம் காங்கிரசுக்கு உண்மையான சவால் இனிதான் காத்திருக்கிறது. வரும் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரசால், பஞ்சாப்பில் பெற்ற வெற்றியை போன்றதொரு வெற்றியை பெற முடியுமா என்பது சந்தேகம். ஏனெனில், பஞ்சாப்பில் காங்கிரசின் தேசிய தலைமையை தாண்டி, அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் ஆளுமை, குருதாஸ்பூர் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளது. அதுபோல பெயர் சொல்லக்கூடிய, வாக்காளர்களிடம் உத்வேகம் ஏற்படுத்தக் கூடிய தலைவர்கள் குஜராத்திலும், இமாச்சல பிரதேசத்திலும் இல்லை. அதற்கான முயற்சிகளை இதுவரை காங்கிரசும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

tamil.oneindia.com

TAGS: