தமிழ் நாளேடுகளை விமர்சிக்க உத்துசானுக்கு தகுதியில்லை, சேவியர்

“மலேசிய தமிழ் நாளிதழ்களின் நடுநிலை பற்றியோ, தரம் பற்றியோ கேள்வி எழுப்பவோ, விமர்சிக்வோ சற்றும் தகுதியற்றது உத்துசான் நாளேடு என்பது நாடறிந்த உண்மை”, என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் சேவியர் கூறினார்.

ஓர் அரசியல் கட்சியான அம்னோவிற்கு  சொந்தமான அப்பத்திரிக்கை முழு மலாய் தீவிரவாதச்  சித்தாந்தத்தைக் கொண்ட ஏடு. அது எல்லாக் காலங்களிலும் மலாய்காரர்கள்  நலனை மட்டும் முன்நிறுத்திச் செயல்படும் அம்னோவின் கொள்கை ஏடாகவே இருந்து வந்துள்ளது. அதற்கு தமிழ்ப் பத்திரிக்கைகளையோ மற்ற மொழி நாளேடுகள் குறித்தோ எடைப்போட, எழுத எந்த தகுதியுமில்லை என்று அவர் இடித்துரைத்தார்.

அம்னோவின் அரசியல்வளத்தைப் பயன்படுத்தித்  தனது பங்குதாரர்களையும், கட்சிக்கார்களையும் செல்வ சீமான்களாக்கிய உத்துசான், ஏழை பாட்டாளி சமுதாய ஏடுகளில் பணிபுரியும் தமிழ்ப்பத்திரிக்கையாளர்கள் ஒழுங்கான ஊதியத்தைக்கூடக் காலத்தோடு பெற முடியாத நிலையிலிருப்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாரிசானுக்கும், அரசாங்கத்திற்கும்  ஆதரவாகவே எழுதி வருகின்றன என்பதை சேவியர் சுட்டிக் காட்டினார்.

“இன்றும் தமிழ்ப்பத்திரிக்கைகள் பாரிசானுக்கு ஆதரவாக எழுதி வருவதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் பணங்கொடுத்து பத்திரிக்கைகள் வாங்கும் வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கும்,  தேசத்துக்கும் சேவையாற்ற வேண்டியது தமிழ்ப்பத்திரிக்கைகளின் கடமை. அந்த ரீதியிலேயே சுடும்  சில  உண்மைகளை எடுத்து வைக்கின்றனர். அதுவும் அரசாங்கம் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற நற்பாசையில்தான்”, என்றாரவர்.

கடந்த ஜூலை 31ந்தேதி மாட்சிமை தங்கிய துணை பேரரசர் சுல்தான் முகமட் V, அறிவுறுத்தியபடியே,  நாட்டின் மீதான விசுவாசத்தை அவை காட்டி வருகின்றன. தமிழ்நேசன்  ஒரு முன்னாள் அமைச்சரின் பத்திரிக்கையேயானாலும் அரசாங்கத்தின்  தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், மக்கள் வரிப்பணத்தை சுருட்டும் அரசியல் வாதிகளின் மாபெரும் ஊழல்களை வெளியிடுவதும் தேசப்பற்று உள்ளவர்கள் செய்யும் செயல். உண்மையை, நீதியை, தர்மத்தை முன் நிறுத்தி எழுதும் போது, அதில் எவர், எந்தக் கட்சி என்று பாகுபாட்டுடன் செய்தி வெளியிட்டால் அது தேசத் துரோகமாகும் என்பதை உத்துசான் நாளேடு புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

முன்னாள் பிரதமர் மகாதீர் உத்துசானுக்கும் மலாய் சமூதாயத்திற்கும் நிறைய செய்திருக்கலாம். அதற்காக அவர்கள் அவரைப் பாராட்டட்டும். ஆனால் அவர் ஆட்சிக்காலத்தில் இருந்ததை இழந்து விட்ட, இந்திய சமுதாயமும் அவரை பாராட்டினால் வேடிக்கையாக இருக்காதா?  இந்தியர் நலத்திற்காக மட்டுமின்றி இந்நாட்டு நலன் கருதி அவர் முன் வைத்த எத்தனையோ கோரிக்கைகளுக்குச் சிரித்துக் கொண்டே “நெகி” என்றுதான் சொல்ல முடியும்’’ என்று சொல்லிக் கைதட்டல் வாங்கிச் சென்ற அரசியல்வாதியை இந்திய சமூகமோ, தமிழ்ப்பத்திரிக்கையோ பாராட்டும் என்று எதிர் பார்கக்கூடாது. அப்படிச் செய்வது முன்னால் பிரதமரைக் கேவலப்படுத்துவதாகும்.  

“நாட்டு நிர்மாணிப்பில் தனது பங்கினை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் அள்ளி வழங்கிய ஏழை சமுதாயத்திற்கு இந்நாடு சொந்தமில்லை, குடியுரிமையில்லை, ஆனால் நேற்று வந்தவர்களுக்கெல்லாம் வாக்களிக்கும் உரிமையுடன் சிறப்பு சலுகையும் கொடுக்கப் படுவதைக் கண்டும் காணமல் இன்னும் எத்தனை காலம் இச்சமூகம்  இருக்க வேண்டும், எழுதவேண்டுமென்று உத்துசான் எதிர்பார்க்கிறது”, என்று அவர் எரிச்சலுடன் வினவினார்.

“ஒரு தேர்தலின் சிறு தோல்வியைகூட அம்னோவாலும் உத்துசானாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், அம்னோவின் எல்லா வெற்றிகளிலும் தோல்வியையே சந்தித்த இந்திய சமூகத்தின் வேதனைகளும், துயரங்களும் எவ்வளவு கடுமையானதாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க இது அம்னோவிக்கு இறைவன் வழங்கிய சந்தர்ப்பமாகும்”, என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

TAGS: