நீர் நெருக்கடி: தீர்வுகான தடையாக இருப்பது யார்?, சேவியர் கேள்வி

சிலாங்கூர் மாநில அணைகளில் நீர் நிரம்பி ஆற்றில் வெறியேறலாம், ஆனால் அது குடிக்க உகந்த தண்ணீராக அல்ல என்கிறார் எரி சக்தி, பசுமைத் தொழில் நுட்ப, நீர்வள அமைச்சர் பீட்டர் சின். நீர் விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்  என்று மக்களுக்கு அறிவுறுத்தும்  அமைச்சர், முதலில் தானும்  தனது அமைச்சரமையும், மத்திய பாரிசான் அரசும் கவனமாக  இவ்விவகாரத்தைக்  கையாண்டுள்ளதா என்பதனை மலேசிய மக்களுக்கு விளக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் சேவியர் வலியுறுத்துகிறார்.

மேலும், சம்பந்தப்பட்ட அமைச்சரும் மத்திய அரசும் இவ்விவகாரத்தை கையாண்டும் முறை குறித்து கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்:

  1. குடி நீரைத் தனியார் மயப்படுத்தும் கடந்த 1996ம் ஆண்டின் ஒப்பந்தத்தை 2006ம் ஆண்டில் மீண்டும் மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் நிறைவேற்ற மத்திய பாரிசான் அரசு ஏன் மறுக்கிறது?
  2. நாடாளுமன்றத்தில் 2006ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி நீர் சேவைகள் மற்ற மாநிலங்களிடம் திரும்ப ஒப்படைக்கப் பட்டிருக்கும் போது, சிலாங்கூர் மக்களுக்கு மட்டும் ஏன் அந்த உரிமை  மறுக்கப்படுகிறது?
  3. ஷாபாஸ் நிறுவனத்தின்  2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுக்கான கணக்கறிக்கையின்படி ரீங்கிட் 32.5 கோடிக்கான கணக்குகள்  சரியாக இல்லை. இது குறித்து மத்திய பாரிசான் அரசும்  அமைச்சரும் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்?
  4. சுத்தகரிக்கப் பட்ட 30 சதவீத நீர்  வீண்ணடிக்கப் படுவதை ஏன் ஷாபாஸ் இன்னும் கட்டுபடுத்தவில்லை.
  5. இதைப் போன்ற இன்னும் ஏகப்பட்ட முறைக்கேடுகள், நடைமுறை கோளாறுகள் கொண்ட நிர்வாகத்தின்  சேவையை அகற்ற அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி (  நீர் சேவை சட்டம் WSIA வின் பிரிவு 114 (1) யை )  மாநில அரசிடம் அச்சேவையைத் திரும்ப ஒப்படைக்க ஏன் மறுக்கிறார்?
  6. லங்காட் 2 வது சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படாவிட்டால் மாநிலத்தில்  2014 ஆண்டுக்கு அப்பால் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்பதே அமைச்சர் முதல் ஷாபாஸ், துணை பிரதமர் மற்றும் ஏனைய எல்லாத் தரப்பினரின் கூற்றுமாகும்.  அப்படியிருக்க அவசரக்கால தண்ணீர் பங்கீடு முறையை ஷாபாஸ் ஏன் கடந்த மாதம் (ஜூலையில்)  அமல் செய்தது.
  7. ஆக 2012 ல் தட்டுப்பாடு ஏற்படும் என்பதனை மாநில மக்களுக்கும், மாநில அரசுக்கும் முன் கூட்டியே ஏன் தெரியப்படுத்த வில்லை?  இப்படிப்பட்ட பொறுப்பற்ற ஒரு நிறுவனம் எப்படி சுமார் 7 மில்லியன் மக்களின் நலனைப் பாதுகாக்க முடியும்? ஆக, மாநிலஅரசு அந்த பணியை மேற்கொள்ளுவதை ஏன் மத்திய அரசு தடுக்க வேண்டும்?  

“அதிகாரமற்ற ஒரு செயலைச் செய்து, அதாவது மாநில மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டிய குடிநீரைத்  தடுத்துச் செயற்கையான ஒரு நீர் தட்டுப்பாட்டை உருவாக்கி, மாநில மக்களிடம் பக்காத்தான் அரசு மீது வெறுப்பை  ஏற்படுத்த பாரிசான் அரசுடன் சேர்ந்து ஷாபாஸ் மேற்கொண்ட சூழ்சியா, இல்லையா?”, என்று அவர் வினவுகிறார்.

“மத்திய அரசின் திட்டப்படி மக்களின் வரிப்பணமான சுமார் 394 கோடி வெள்ளியில் நிர்மாணிக்க உத்தேசித்துள்ள லங்காட் 2 வது சுத்திகரிப்பு நிலையம் 2014ம் ஆண்டுக்குப் பிறகே சுத்திகரிப்பைத் தொடங்கும், ஆனால் மாநில அரசோ சுமார் 50 கோடி வெள்ளி செலவில் மார்ச் 2013 லேயே அதற்கு ஈடான நீரை அடுத்த பல  ஆண்டுகளுக்கு மாநில மக்களுக்கு வழங்கத் தயாராகச் செயல்  முறையைக் கைவசம் வைத்துள்ளபோது அதனை ஏன் மத்திய அரசும் ஷாபாஷும் அமைச்சரும்  பரீசீலிக்க மறுக்கிறார்கள்?”

 உண்மையில் அமைச்சரும் மத்திய அரசும் மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாகச் செலவிடுவதில் காட்டும் ஆர்வத்தை மக்களின் நல்வாழ்வுக்கு செலவிடுதில் காட்டுவதில்லை என்பதற்கு  இன்னும் ஒரு சான்றாக இது விளங்குகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

“சிலாங்கூர் மாநிலத்தில் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் நான்கு நிறுவனங்களான ஷாபாஸ்,  நீர் சுத்திகரிப்பு நிறுவனமான புஞ்சா நியாகா, ஸ்ப்லாஜ் மற்றும் அபாஸ் ஆகியவற்றை, ரீங்கிட் 929 கோடி வெள்ளிக்கு வாங்கும் மாநில அரசின் முயற்சிக்கு முட்டுகட்டையிட்டுள்ளது பாரிசான் மத்திய அரசு. அதே வேளையில் அந்நிறுவனங்களைக் கடனிலிருந்து மீட்க பாரிசான் அரசு ரீங்கிட் 650 கோடி வெள்ளி மக்கள் பணத்தைச் செலவழித்துள்ளது. இது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் நியாயமற்றச் செயல் மட்டுமல்ல. நீர் கட்டணத்தை  உயர்த்தவும், சிலாங்கூர் மாநில அரசு  வழங்கும் இலவச 20 கன மீட்டர் தண்ணீரைத் தடுக்க மத்திய அரசு  மேற்கொள்ளும் ஓர் அரசியல் யுக்தி. இந்த யுக்திகளை  மாநில  மக்கள் கண்டிப்பாக நிராகரிப்பார்கள்  என்ற நம்பிக்கை மாநில அரசுக்கு  உண்டு”, என்று  சேவியர்  மேலும் கூறினார்.