போலி அம்னோ இளைஞர் முகநூல் பக்கம் பற்றி பிஎன் போலீசில் புகார் செய்யும்

அம்னோ இளைஞர் முகநூல் பக்கம் எனக் கூறப்பட்ட போலியான பக்கத்தில் செய்யப்பட்ட ‘தாக்குதல்’ நோக்கத்தைக் கொண்ட பதிவு ஒன்றின் மீது போலீசில் இன்று புகார் செய்யப்படும்.

பிஎன் இளைஞர் பிரிவு நிர்வாகச் செயலாளர் இப்டிலிலாலா இஷாக் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“அது அதிகாரப்பூர்வமாக எங்களுடையது அல்ல. முக நூலில் பலர் கணக்குகளைத் திறக்கலாம். யாரும்  தங்களை தாங்கள் விரும்பும் வகையில் காட்டிக் கொள்ள முடியும்,” என்றார் அவர்.

“ஆகவே அது அதிகாரப்பூர்வமாக பெமுடா அம்னோ (அம்னோ இளைஞர் பிரிவு) அல்ல. அவர்கள்  பெமுடா அம்னோ பெயரை எங்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தியுள்ளனர்.”

இன்று மாலை கோலாலம்பூரில் போலீசில் தாம் புகார் செய்யப் போவதாக இப்டிலிலாலா மலேசியாகினி தொடர்பு கொண்ட போது கூறினார்.

‘Pemuda Umno Malaysia’ என்னும் பக்கத்தில் கடந்த சனிக்கிழமையன்று அந்தப் பதிவு முதலில் வெளியானது. அதனைத் தொடர்ந்து அது வெகு வேகமாகப் பரவி விட்டது. அன்றைய தினமே அந்தப் பதிவு அகற்றப்பட்டு விட்டது.

மலாய் மொழியில் எழுதப்பட்ட அந்தப் பதிவு இவ்வாறு கூறியது: “மலேசியக் கூட்டரசின் அதிகாரத்துவ சமயமாக நீங்கள் கிறிஸ்துவ சமயத்தை ஆக்க விரும்பினால் பக்காத்தான் ராக்யாட்டுக்கான உங்கள் ஆதரவைத் தொடருங்கள்.”

‘மகனே உன்னை இறைவன் ஆசீர்வதிக்கட்டும்,” என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.

பக்காத்தான் ராக்யாட் கிறிஸ்துவ நாட்டை உருவாக்க எண்ணியுள்ளது என வெளிப்படையாக அந்த ‘முகநூல் பதிவில்’ கூறப்பட்டுள்ளது உண்மையில்  கடந்த ஆண்டு ‘Big Dog’ என அழைக்கப்படும் அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் ஸாக்கிர் முகமட் எழுதிய வலைப்பதிவின் தொடர்ச்சியாகும்.

இந்த நாட்டின் மதத்தை மாற்றுவதற்கு டிஏபி கிறிஸ்துவ தலைவர்கள் சதி செய்வதாக 2011 மே 6ம் தேதி அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

‘Big Dog’-ன் குற்றச்சாட்டை வலைப்பதிவை உத்துசான் மலேசியா அடுத்த நாள் வெளியிட்டது. அரசியல் களத்தில் இரு தரப்பையும் சார்ந்தவர்கள் அதனைக் கண்டித்தனர்.

என்றாலும் அந்தக் குற்றச்சாட்டுக்களை டிஏபி தலைவர்களும் தேவாலயத் தலைவர்கள் மறுத்துள்ளனர்.

முகநூல் பக்கம் எங்களுடையது அல்ல என்கிறார் கே ஜே

போலி அம்னோ இளைஞர் முக நூல் பக்கத்தில் செய்யப்பட்ட அந்தப் பதிவைத் தொடர்ந்து அம்னோஇளைஞர் பிரிவு அந்தப் பக்கத்தை நிர்வாகம் செய்யவில்லை என்றும் அங்கீகரிக்கவும் இல்லை என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் கூறினார்.

அந்தப் பதிவு ‘தாக்குதல்’ நோக்கம் கொண்டது என வருணித்த அவர், அதன் நிர்வாகி கண்டு பிடிக்கப்படுவார் எனத் தெரிவித்தார்.

 

TAGS: