சாமி மேடைக்கு மஇகா இளைஞர் பிரிவு போராட்டமா? கோமாளித்தனத்துக்கு அளவே இல்லையா?

கோவில்கள் உடைக்கப்படும் போது குறட்டை விட்டவர்கள் சாமி மேடைக்குப் போராட்டம் நடத்தப்  போகிறார்களா? மலேசிய இந்தியர்கள் ஏமாளியாக இருந்தால் இன்னும் அதிகமான கோமாளித்தனங்களை மஇகா  இளைஞர் பிரிவு காட்டும் என்பது  திண்ணம்.

அண்மையில் சிப்பாங்கில்  வீட்டுக்கு வெளியில்  8 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட சாமி மேடைக்கு முறையான அங்கீகாரம் வாங்காதவர்,  நகராட்சி மன்றம்  அந்தக் கட்டுமானத்தை  அப்புறப்படுத்தச் சொல்லி நோட்டீஸ் கொடுத்தும்  அதனை மதிக்கவில்லை. அது சம்பந்தமாக மாநில அரசிடமோ, நகராட்சி மன்றத்திடமோ மேல் முறையீடு செய்யவில்லை. செய்ய வேண்டியதைச் செய்யாமல், நகராட்சி மன்றம் எடுத்த நடவடிக்கைக்கு  மஇகாவின் இளைஞர் பிரிவினர் மாநில அரசை மிரட்டுவதா?

ஓர் அரசியல் கட்சியின்  இளைஞர் அணி என்பது துடிப்பு மிக்கதாக இருக்க வேண்டும். ஆனால்  மஇகாவின் இளைஞர் பகுதி வளர்ச்சி குன்றிய நிலையில் நீண்ட நாட்களாக  இருப்பதைக் காணப் பரிதாபமாக இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக மஇகா இளைஞர் பகுதி வளர்ச்சியே அடையாத நிலையில்  இருப்பதை மலேசிய இந்தியர்களுக்கு நன்கு உணர்த்தும் வகையில்  அமைந்ததுதான் மஇகாவின்  இளைஞர் பகுதியின் இன்றையச் செயல். அக வளர்ச்சி, புறவளர்ச்சி ஆகிய இரண்டும் குன்றிய பிள்ளை பெற்றோர்களுக்கு பாரமே ! அதைப் போல் வளர்ச்சி குன்றிய மஇகாவின்  இளைஞர் அணியும்  இந்திய சமுதாயத்திற்கு சுமையாகத்தான் இருக்கிறது என்பதைச்  சமுதாயம் உணர்கிறது.

பக்காத்தான்  சிலாங்கூர் மாநில ஆட்சியைக் கைப்பற்றியது முதல்  குட்டிச்சுவர்களைக்  கட்டி அழும் இயக்கமாக மஇகா  இளைஞர் அணி இருக்கிறது என்றால்  அது மிகையாகாது. பூஜை மேடை, காடு அல்லது சாலை ஓரத்தில் அமைந்துள்ள சாமி பேழைகளை நகராட்சி மன்றங்கள்   அகற்றி விட்டால் அதனை ஒரு விவகாரமாக்கி மற்றவர்கள் இந்திய சமுதாயத்தை  ஏளனமாகப் பார்க்க இந்த இளைஞர் பிரிவினர் வழி அமைத்துக் கொடுத்து வருகின்றனர்.

இப்பொழுது நடக்கும் அம்னோ மாநாட்டு இளைஞர் பகுதி விவாதங்களைக் கவனித்து  அதுக்கு ஈடாகக் காரியத்தில் இறங்கத்தான் இவர்களுக்குத் துருவில்லாவிட்டாலும், அவர்களின்  மகளிர்  அணியின் வேகமாவது இருக்க வேண்டாமா என்று  சமுதாயம் வெட்கித் தலை குனிகிறது. அம்னோ மகளிர் அணித்தலைவி என்னச் சொல்கிறார் தெரியுமா? அதன் உள்கருத்து விளங்குகிறதா?

அ.  மலாய்க்காரர் மேலாண்மை தொடர்ந்து காக்கப்பட வேண்டுமாம்! அதாவது  இந்நாட்டில்  மற்றவர்களை மூன்றாம் தர பிரஜையாகவே நிலைநிறுத்த வேண்டும் என்கிறார்.

ஆ.  அவர் கூறிய  மே 13 கலவரம், மலாய்க்காரர்களே  பக்காத்தானுக்கு  வாக்களித்து நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் அதற்கான  தண்டனையையும், பழியையும்  மலாய்க்கார அல்லாதவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதே  அவர் கூறிய  மே 13 கலவரம் பற்றிய முன் எச்சரிக்கை.  அவருக்குப் பதிலளிக்க வேண்டிய சக்தி இவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.  அதைப் புரிந்துக் கொள்ளும்  சக்தி அற்றவர்களாக கூட மஇகாவின்  இளைஞர் அணி இருப்பது பரிதாபத்திற்குரியது!

இப்படிபட்ட சூழ்நிலையில்  இந்திய சமுதாயம் கவனிக்க வேண்டியது என்ன?

1. இப்பொழுது நடைபெற்று வரும் கல்வி சீரமைப்பு என்ற போர்வையில் 150 மாணவர்களுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான  பள்ளிகளை  ஒருங்கிணைப்பது பற்றி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2. பிரதமர்  ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்ட  வாக்களித்து 10 மாதங்கள்  ஆகிறது, ஆனால் பட்ஜெட்டில் அதற்கான ஒதுக்கீடு, மற்ற ஆய்வு என்ற  ஒன்றுகூட இல்லை.

3. குற்றச்செயல்களில் ஈடுபடும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை அளவு கடந்து பேய் கொண்டிருக்கிறது. சிலாங்கூரில் ஒவ்வொரு போலீஸ் மாவட்டத்திலும் சராசரி 500 இந்திய  இளைஞர்களின் பெயர்களும், படமும் குற்றவாளி பட்டியல் இருக்கிறதாம்.

4. அரசாங்க வேலைகளில் இந்தியர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக  ஒரு தமிழ்ப்பத்திரிக்கை பக்கம் பக்கமாகப் போட்டு உடைக்கிறது.

5. இத்தனை ஆண்டுகளாக இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதும்  செய்யப்படவில்லை. கடந்த பல ஆண்டுகளாகத் தெக்குன் கடனுதவி மூலம் 200 கோடி ரிங்கிட்கள் ஓர் இனத்தித்தின் மேம்பாட்டுக்குக் கொடுத்தவர்கள்,  அடுத்த   தேர்தலைக் கருத்தில் கொண்டு 5 கோடி ஒதுக்குவதாக உறுதி கூறியுள்ளார்கள்.

6. புத்ரா ஜெயா மேம்பாட்டுக்கு அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட நான்கு தோட்டங்களைச் சார்ந்த தொழிலாளர்கள், செய்துவந்த வேலைகளை இழந்து, அவர்கள் பிள்ளைகள்  கல்வி வாய்ப்புகளை இழந்து, கட்டி கொடுக்கப்பட்ட தற்காலிக வீடுகளும் இன்று இடியுமா,  நாளை பொழுது விடியுமா  என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்க்கையையே போராட்டமாக நடத்தி வருகிறார்கள் டெங்கில் தாமான் பெர்மாத்த மக்கள்.

இதுபோன்ற எண்ணற்ற பிரச்சனைகள் ஏன்  இந்தப் போராட்டவாதிகளின் கண்ணுக்குத் தெரியவில்லை? இந்த ஏழை இந்திய சமுதாயத்திற்கு தலைமை தாங்குவதாகக் கூறிக் கொண்டு துரோகம் இழைக்கும் துரோகிகளை இன்னும் எத்தனைக் காலந்தான் இச்சமுதாயம் சகித்துக் கொள்ளவேண்டும்?

இந்திய சமுதாயத்துக்கு என்ன பிரச்சனை என்பதனைக்கூட அறியாத திண்ணை தூக்கிகளாக இருந்துவிட்டு, மற்றவர்களை குறை சொல்லியே காலங்கடத்திவரும்  மஇகா இளைஞர் பகுதி அதன் ‘’மன வளர்ச்சி குன்றிய’’ நிலையிலிருந்து விடுபடவேண்டும். இந்தியர்களின் இன்னல் மேலே குறிப்பிட்டுள்ளது மட்டுமல்ல இன்னும் நிறைய உண்டு. உருப்படியாக எதையாவது செய்வார்களா இளம் போராட்ட வாதிகள்?

-அண. பாக்கியநாதன், டிசம்பர் 1, 2012.

TAGS: