சிப்பாங் பூசை மேடை உடைப்பு : மஇகா ஆர்ப்பாட்டத்தில் வெறும் 150 பேர்!

அண்மையில் சிப்பாங்கில்  வீட்டுக்கு வெளியில்  8 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட பூசை மேடை சிப்பாங் நகராண்மைக் கழகத்தினால் உடைக்கப்பட்டதை கண்டித்து சிலாங்கூர் மாநில அரசு பணிமனைக்கு முன்னால் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

மஇகா இளைஞர் பகுதி ஏற்பாடு செய்தியிருந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150 பேர் கலந்துகொண்டு சிலாங்கூர் அரசுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

பாக்கத்தான் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அணி திரண்டுவருவார்கள் என மஇகா இளைஞர் பகுதி தலைவர் முன்னர் கூறியிருந்தபோதும், இன்று காலை 200-க்கும் குறைவானவர்களையே அங்கு காண முடிந்தது.

மேலும், அங்கு கூடியிருந்த மஇகா இளைஞர் பகுதியினர், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை அந்நேரத்தில் வசைபாட தவறவில்லை.  அவர்கள் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் என பலரை கொச்சை வார்த்தைகளால் திட்டி கூச்சலிட்டு குண்டர் கும்பல்போல் செயல்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் செம்பருத்தியிடம் கூறினார்.

“பல்லின மக்கள் வந்துபோகும் மாநில அரசுப் பணிமனைக்கு முன்னால் நின்றுகொண்டு கடும் கொச்சை வார்த்தைகளால் கத்தி கூச்சலிடுவதுதான் கோயிலுக்காக போராடுகிறோம் என கூறிக்கொள்ளும் மஇகா-வின் பண்பா?” என வினவிய அவர், பூசை மேடை உடைப்புக்காக முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆதரித்தாலும், அவர்கள் நடந்துகொண்ட விதத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

ஒருபொது இடத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற நாகரீகம் தெரியாதவர்களின் இவ்வாறான செயல்பாடுகளினால் ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களுக்கு பெருத்த அவமானம் என்று கூறிய அவர், குண்டர் கும்பல் அரசியலை தொடர் கதையாக்கிக் கொண்டு வரும் இவர்களுக்கு வருகின்ற தேர்தலில் தமிழர்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என தனது ஆதங்கத்தை செம்பருத்தியிடம் தெரிவித்தார்.

பெரும் கூச்சல் தள்ளுமுள்ளுக்கிடையில், சிப்பாங் பூசை மேடை உடைப்புக்கு கண்டனம் தெரிவுக்கும் வகையிலான மனு ஒன்றை மஇகா இளைஞர் பகுதி தலைவர் தி. மோகன், சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராஹிமின் செயலாளரிடம் வழங்கினார். எனினும், பூசை மேடை உடைக்கபட்ட வீட்டின் உரிமையாளரோ அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரோ அங்கு சமூகமளிக்கவில்லை என கூறப்படுகிறது.

வீட்டுக்கு வெளியில்  8 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட பூசை மேடைக்கு முறையான அங்கீகாரம் வாங்காதவர்,  நகராட்சி மன்றம்  அந்தக் கட்டுமானத்தை  அப்புறப்படுத்தச் சொல்லி நோட்டீஸ் கொடுத்தும்  அதனை மதிக்கவில்லை. அது சம்பந்தமாக மாநில அரசிடமோ, நகராட்சி மன்றத்திடமோ மேல் முறையீடு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

TAGS: