‘டோங் ஜோங் ஏமாற்றமடையவில்லை, பிரதமரை அது விரைவில் சந்திக்கும்’

najibஇன்று டோங் ஜோங் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சீனக் கல்விக்கு நல்ல செய்தி எதனையும் தெரிவிக்கவில்லை என்றாலும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் அதன் கோரிக்கைகளை பற்றி விவாதிக்கத் தாம் தயாராக இருப்பதாக நஜிப் அந்த அமைப்பிடம் சொல்லியிருக்கிறார்.

அந்தத் தகவலை டோங் ஜோங் (ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம்) தலைவர் யாப் சின் தியான் வெளியிட்டார்.

“சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குப் பின்னர் தம்மைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நஜிப் என்னைக் கேட்டுக் கொண்டார்,” என அவர் சொன்னார்.

najib1“அது எப்போது நிகழும் என்பது பிரதமர் தேதியை நிர்ணயிப்பதைப் பொறுத்துள்ளது. சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் எங்களுடன் தொடர்பு கொள்வதாக அவர் தெரிவித்தார்,” என காஜாங்கில் நிகழ்ந்த அந்த உபசரிப்பின் போது யாப் நிருபர்களிடம் கூறினார்.

அந்த நிகழ்வின் போது சீனக் கல்விக்கு அன்பளிப்புக்கள் எதனையும் பிரதமர் அறிவிக்காதது குறித்து அவர் ஏமாற்றம் அடைந்துள்ளாரா என அவரிடம் வினவப்பட்டது.

அதற்கு புன்னகையுடன் பதில் அளித்த யாப்,” நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?” என்றார்.

என்றாலும் டோங் ஜோங் துணைத் தலைவர் சாவ் சியூ ஹோன் நஜிப் வருகை நன்மையைக் கொண்டு வரும் என நம்புகிறார்.

அந்தச் சீனக் கல்வி போராட்ட அமைப்பைப் பொறுத்த வரையில் அது ஏமாற்றத்தைத் தரவில்லை என்றார் அவர்.

“அவர் இன்று அன்பளிப்பு எதனையும் கொண்டு வரவில்லை என்றாலும் எதிர்காலத்தில் எந்த அன்பளிப்பும் இருக்காது என்பது அதன் பொருள் அல்ல,” என்றும் சாவ் குறிப்பிட்டார்.

டோங் ஜோங் தனது சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு பிரதமரை அழைத்த பின்னர் நஜிப் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

டோங் ஜோங் விடுத்த அழைப்பில் அதனுடைய மூன்று நீண்ட காலக் கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

UEC என்ற ஐக்கிய தேர்வுச் சான்றிதழை அங்கீகரிப்பது, கூடுதலாக சீன சுயேச்சைப் பள்ளிகளை அமைக்க அனுமதிப்பது, தேசியக் கல்விப் பெருந்திட்டத்தை மறு ஆய்வு செய்வது ஆகியவை அந்தக் கோரிக்கைகளாகும்.