ஸாஹிட் ‘ஆணவம் பிடித்த முட்டாள்’ என அஸ்மின் வருணனை

azminதேர்தல் முறையில் மகிழ்ச்சி அடையாதவர்கள் வேற்று நாடுகளுக்குக் குடியேறலாம் எனச் சொன்ன  புதிய உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடியை பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி  இன்று சாடியிருக்கிறார்.

ஸாஹிட்டின் அறிக்கை, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உருமாற்றத் திட்டங்கள் எனக்  கூறப்படுகின்றவை ‘முற்றிலும் போலியானவை’ என்பதை நிரூபித்துள்ளதாக அஸ்மின் இன்று விடுத்த  அறிக்கை தெரிவித்தது.

“இது தான் நஜிப் தமது ‘புதிய உருமாற்ற அமைச்சரவை’ எனச் சொல்லிக் கொள்வதை காட்டும் விதமா?”

“ஸாஹிட், வாழ்த்துக்கள் ! உங்கள் அமைச்சர் அதிகாரத்தின் முதல் பிரகடனமாக இந்த உயரிய வலுவான நிலையை எடுத்துள்ளதின் மூலம் நீங்கள் உங்கள் ஆணவத்தையும் முட்டாள்தனத்தையும்
வெளிப்படுத்தியுள்ளீர்கள்.”

“இது எங்கள் மண். அதனால் இந்த நாட்டுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையோ, தகராறோ இல்லை.
இது உங்கள் நாடும் கூட. ஆனால் இது உங்களுக்கும் அம்னோவுக்கும் மட்டுமே சொந்தம் எனப் பேச
வேண்டாம். மலேசியக் குழந்தைகளான நம் அனைவருக்கும் இந்த நாடு சொந்தம். நாங்கள்
அகோங்கிற்கும் நாட்டுக்கும் விசுவாசமானவர்கள்,” என்றார் அஸ்மின்.

azmin1தூய்மையாகவும் நியாயமாகவும் நடத்தப்படாத ஒரு தேர்தல் குறித்த தங்கள் ஏமாற்றத்தையும்  ஆத்திரத்தையும் வெளிப்படுத்துவதற்கு மலேசிய மக்களுக்கு அரசமைப்பு உரிமை உண்டு என்றார் அவர்.

“நாங்கள் இங்கு தேர்தல் குளறுபடிகள் பற்றிப் பேசவில்லை. விரிவாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும்  மோசடிகளையே நாங்கள் குறை கூறுகிறோம்.”

“அதற்கு நீங்களோ, நஜிப்போ அல்லது அம்னோவில் உள்ள உங்கள் சகாக்களோ பொறுப்பேற்பார்கள்  என நாங்கள் எண்ணவில்லை. என்றாலும் நீங்கள் உருப்படியான விவாதத்தில் ஈடுபட வேண்டும்  அல்லது வாயை மூடிக் கொள்ள வேண்டும்,” என்றார் அஸ்மின்.

வெஸ்ட்மினிஸ்டர் முறை (பிரிட்டிஷ் பாணி) என்றால் என்ன என்பதே ஸாஹிட்டுக்குத் தெரியவில்லை

தேர்தல் முறை நியாயமானது என விளக்கி ஸாஹிட் மே 16ம் தேதி உத்துசான் மலேசியாவில் எழுதிய
கட்டுரை பற்றி அஸ்மின் கருத்துரைத்தார்.

azmin2உண்மையில் அந்த வெஸ்ட்மினிஸ்டர் முறை குறித்து ஸாஹிட் ஏதும் அறியாதவர் எனத் தோன்றுகிறது  என அவர் சொன்னார்.

அந்த முறையில் ‘ஆவி வாக்காளர்கள்’ இல்லை. வாக்குகள் எண்ணப்படும் போது விளக்குகள்  அணைவது இல்லை. சுதந்திரமான நேர்மையான ஊடகங்களை வழங்குகின்றது என்றும் அஸ்மின்  குறிப்பிட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் தொகுதி எல்லைகள் மறு சீரமைப்புச் செய்யப்படும் போது  தில்லுமுல்லு வேலைகளுக்கு அந்த முறை இடம் கொடுப்பதில்லை என்றும் அவர் சொன்னார்.

“கடந்த ஐந்து தசாப்தங்களாக அம்னோ/பிஎன் தேர்தல் தொகுதி எல்லைகள் மறுசீரமைப்புச்  செய்யப்படும் போது செய்யப்படும் தில்லுமுல்லுகள் வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான ஜனநாயகத்தையே  கேலிக் கூத்தாக்கியுள்ளது.”

அந்த வெஸ்ட்மினிஸ்டர் முறை வெற்றி பெற்ற தொகுதிகளைக் கருத்தில் கொள்கிறதே தவிர  செலுத்தப்பட்ட வாக்குகளை கவனத்தில் கொள்வதில்லை என ஸாஹிட் தமது கட்டுரையில்  வலியுறுத்தியிருந்தார்.