மெட்ரிகுலேசனில் இந்திய மாணவர்களுக்கு நாமம் !

-மு. குலசேகரன், ஆகஸ்ட் 3, 2013.

m-kulasegaran இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேசனில் வழங்கப்பட்ட வாய்புக்களை நிராகரித்ததனால்தான்  அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை பூர்த்திசெய்ய இயலவில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன் இன்று ஆங்கிலப் முபத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளார்.

 

மெட்ரிகுலேசன் இடம் கிடைத்து அதை சில பேர் ஒதுக்கியிருக்கலாம். ஆனால் பெரும்பாலான இந்திய மாணவர்கள் அந்த வாய்பினை ஒதுக்கக் கூடிய சாத்தியமில்லை. ஏனெனில் 20 முதல் 30 ஆயிரம் வெள்ளி வரைக் கொடுத்து பவுன்டேஷன் அல்லது A லெவல் படிப்பில் சேர்த்து தங்களின் பிள்ளகளை படிக்க வைக்க பெரும்பாலான இந்தியப் பெற்றோர்களுக்கு வசதியில்லை என்பதை கமலநாதன் உட்பட நாடே அறியும்!

 

1500 இடங்கள் கொடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாக கல்வி அமைச்சரே நாடளுமன்றத்தில் அறிவிப்பு செய்தார். ஆனால் கமலநாதனோ, அப்படி இல்லை கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொன்னது பொய், நான் இப்பொழுது சொல்வதுதான் உண்மை என்று பொருள்படும்படியாக, இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்தம் 1500 இடங்களில் முதல் நுழைவில் 892 மாணவர்கள் மட்டுமே பதிந்தார்கள். இரண்டாவதாக 350 மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருகின்றோம் என்று கூறுகிறார்.

 

1500 இடங்களில் 892 இடங்கள் போனால் மீதமுள்ள 608 இடங்களுக்கு மாணவர்களை அழைக்காமல் ஏன் வெறும் 350 இடங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்தீர்கள் என்ற என்னுடையே முந்தைய கேள்விக்கே இன்னும் பதில் கூறாத கமலநாதன் இன்று புதிதாக செய்தி சொல்வது போல் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கின்றார்.

 

2012/2013 மாணவர் சேர்க்கையில் 2096 இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் அதில் 1170 மாணவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும், 2013/14 சேர்க்கையில் 1,850 மாணவர்கள் அழைக்கப்பட்டதாவும் அதில் 1,142 மாணவர்கள் மட்டுமே அழைப்பை ஏற்றார்கள் என்றும் கூறுகிறார். இந்தத் தகவலை அவரால் எந்த ஒரு சமயத்திலும் நிரூபிக்க முடியவில்லை. அவர் சொல்வது உண்மையென்றால், அவரும் மலேசிய இந்தியக் கல்வி சமூக விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் திருவேங்கடமும் சேர்ந்து தயாரித்த மெட்ரிகுலேசனில் நுழைய முழு தகுதி பெற்ற இந்திய மாணவர்களின் பட்டியல் என்னவாயிற்று?

 

அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 350 மாணவர்களில் ஒருவருக்குக்கூட மெட்ரிகுலேசன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது துணக் கல்வி அமைச்சருக்கு தெரிந்திருந்தும் ஏன் இது போன்ற மக்களை ஏமாற்றும் செய்தியை வெளியிட்டுள்ளார்?

 

அந்தப் பட்டியலை கல்வி அமைச்சர் முகைதினும் அமைச்சின்  அதிகாரிகளும் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பும் தெரிவித்ததையும் அவர் அறிவார்.

 

சவாலை ஏற்கத் தயாரா?

 

அந்த 350 மாணவர்கள் அனைவருக்குமே இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும், 1,500 என்ற இலக்கை எட்டி இருக்கலாமே? அதை நிறைவேற்ற கமலாநாதனுக்கு ஏன் வக்கு இல்லாமல் போயிற்று ?  

 

பொது விவாத்திற்கு  வந்து தன் கூற்று உண்மை என்பதனை நிரூபிக்க கமலநாதன் முன் வருவார ? அவருடன் விவாதிக்க திருவேங்கடமும் தயாராக இருக்கின்றார் என்பதனை இதன் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி துணைக் கல்வி அமைச்சர் கல்வி அமைச்சின் பாரபட்சமற்ற நடத்தையை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி  என்னைப் போன்றவர்களின் முகத்தில் கரி பூசவேண்டும்? இந்தச் சவாலை ஏற்கும் தைரியம் கமலநாதனுக்கு உண்டா?

 

தூங்குபனை சுலபமாக எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்புவது கடினம் என்று சொல்வது போல, கமலாநாதன் தான் விடுக்கும் அறிக்கைகள் உண்மைக்குப் புறம்பான்மையானவை என்று தெரிந்தும் மக்களை ஏமாற்றுவதற்காகவும் அரசியலில் நிலைப்பதற்காகவும் தன் முதலாளி முகைதினின் அனுக்கிரகம் வேண்டியும், மீண்டும் மீண்டும் சொன்ன பொய்களையே சொல்லும் இயல்புடைய மனிதராக இருக்கிறார். இந்தத் துணை மந்திரியை அந்த கல்விக்கு அதிபதியான சரஸ்வதிதேவியும் மன்னிக்கமாட்டாள்.    

 

நோன்பு பெருநாள் முடிந்து மாணவர்கள் முதல் தவணைப் பரீட்சைக்கு தயாராகிக் கொன்டிருக்கும் இவ்வேளையில் மூன்றாவது நுழைவுக்கு கமலநாதன் முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றாரம். இதையும் நாம் நம்ப வேண்டுமாம். இன்னும் காதில் பூ சுற்றப் பார்க்கிறார்?

 

ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி கொடுத்து அதிகமான வாசகர்களுக்கு தெரியும்படியாக செய்து அதன் மூலம் இந்தியர்களுக்கு அரசாங்கம் பாரபட்சம் காட்டவில்லை, இந்திய மாணவர்கள்தான் அதற்கு முழுக்காரணம் என்றெல்லாம் சொல்லி உண்மையை மூடிமறைக்க முயற்சிக்க வேண்டாமென கமலநாதனை கேட்டுக் கொள்கிறேன்.

 

உங்கள் வண்ட வாளங்கள் தண்ட வாளத்தில் ஏறி நாளாகின்றன. ஆகவே இந்த அரை காசுக்கு பிரயோஜனமில்லாத செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்புவதாக எண்ணி தாங்கள் குழம்ப வேண்டாம். மக்கள் மிகவும் தெளிவாகவே இருக்கின்றார்கள்.

 

மெட்ரிகுலேசன் விவகாரத்தை இதோடு மூடிவிட்டு வேறு வேலை இருந்தால் பாருங்கள்.

 

 

TAGS: