குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஷ்வரஹ…! இதைப் படிச்சித்தான் பாருங்களேன்!

sadhuகுரு வழிபாட்டாளர்களே, அதை ஏற்றுக் கொள்பவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி? இந்து மதத்தில் தங்கள் குருவையே முழு வழிபாட்டுக்குறியவராக (கடவுள், பரம் பொருள், வழிபாட்டு தெய்வங்கள் இவைகலெல்லாம் இருக்கும் போது, அவைகளை தவிர்த்து விட்டு) ஆக்கிக் கொள்ளலாம் என்று எந்த வேதத்தில், எந்த சாஸ்த்திரத்தில், எந்த இந்து மத ஆதார நூலில் குறிக்கப்பட்டுள்ளது என்று சொல்ல முடியுமா?

ஆனால் இங்கு பல குருமார் வழிபாட்டு பக்தர்கள் தங்கள் குருவையே முழு வழிபாட்டுக்குறியவராக ஏற்று அவரையே முழு நேரமாக வழிபடுகின்றனரே? அப்படி என்றால் கடவுள், பரம் பொருள், வழிபாட்டு தெய்வங்கள் இவைகளெல்லாம் எதற்கு? பல அருள் மறைகளும் அருள் பாக்களும் தேவார திருமுறைகளும் எதற்க்கு?

இன்று மலேசியாவில் பல கோயில்களில் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பூசை முடிந்தவுடன் பஜனைகள்தான்(அதுவும் பெரும்பாலும் சமஸ்கிருத பாடல்கள்) பாடப்படுகிறது! தேவார திருவாசக திருமுறைகள் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டுவிட்டது! இந்த பஜனைகளை கோயில்களில் வந்து பாடி நம் தமிழ் திருமுறைகளுக்கு ஆப்பு வைத்ததும் இந்த குருமார் வழிபாட்டாளர்களே!

வள்ளலார் கடவுளை அருட் பெரும் ஜோதி வடிவில் வணங்கச் சொன்னார், ஆனால் இன்று இந்த குரு வழிபாட்டாளர்கள் வள்ளலாரையும்(அவர் உருவத்தையும்) ஒரு வழிபாட்டுக்குறியவராக வழிபாட்டுப் பொருளாக ஆக்கி விட்டனர்! இதை நீங்கள் பல வள்ளலார் நிலையங்களில் இங்கு மட்டுமல்ல இந்தியாவிலும் கூட காணலாம்! இதுதான் நீங்கள் உங்களின் குருமாரின் போதனையை பின்பற்றும் லட்சனமா?

இது போன்றுதான் பல குருமார்களின் அருளாலர்களின் சித்தர்களின் உண்மை போதனைகளை விடுத்து அவர்களையே ஒரு வழிபாட்டுக்குறியவராக வழிபாட்டுப் பொருளாக ஆக்கித் திரியுது இந்த குரு வழிபாட்டுக் கூட்டம்!

ஒரு சில குருமார் வழிபாட்டு மையங்களில் தங்கள் குருவின் பாதுகையையே(செருப்பு) வழிபாட்டு பொருளாக்கி அதையே கடவுளுக்கு நிகராக சகல பூசை புனஸ்காரங்களோடு வழிபடுவதை நான் நேரடியாக கண்டுள்ளேன்! இவைகளை எல்லாம் வளரவிட்டால் காலப்போக்கில் நம் இந்து மதம் எங்கே போய் நிற்கும்?

குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வரஹ…! இந்த வசனம் குருநாதரின் மேன்மையையும் அவரின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்குதே அன்றி குருவை கடவுள் என்ற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை!

நான் குருமார்களுக்கோ அருளாலர்களுக்கோ சித்தர்களுக்கோ எதிரானவன் அல்ல! மாறாக பாமர மக்களை குறிப்பாக தமிழர்களை இந்த குருமார் வழிபாட்டுக் கூட்டம் (அரம்பத்தில் இந்த குருமார் வழிபாடு மற்றும் பல்வேறு யோகா தியான பயிற்சிகளை இந்நாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழரல்லாத உயர்தட்டு இந்தியர்களே!) பலிகடாவாக்கி தமிழர்களின் சமய இன அடையாளத்திற்கு அச்சுறுத்தலாகிவிட்டது!

இன்று மலேசியாவில் வாழும் தமிழ் இந்துக்களில் பெரும்பான்மையினர் எதாவது ஒரு குரு வழிபாட்டுக் கூட்டத்திலோ அல்லது யோகா தியான அமைப்புகளிலோ அதுவும் இல்லைனா ஐயா என்ற சிறு தெய்வ வழிபாட்டிலோ மலையாளிகளின் ஐயப்பன் பூஜைகளிலோ ஈடுபட்டுள்ளனர்!

இந்த குரு வழிபாட்டுக் கூட்டத்தினாலும் தமிழ் சினிமா தாக்கத்தினாலும் மலேசிய தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, பெயர்சூட்டும் முறை(தமிழ் பெயர்கள் மாறி டஷ், புஷ் என்ற சமஸ்கிருத மற்றும் அர்த்தமே இல்லாத பெயர் வைப்பது) போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர்!

இப்படியே போய் கொண்டிருந்தால் நம் தமிழர் சமயமாம் சைவ சமயத்திற்கும் தமிழர் இன அடையாளத்திற்கும் மிகப் பெரிய பின்னடைவு காத்துக் கொண்டிருக்கிறது!

அதனால் தான் நான் தொடர்ந்து என் கட்டுரைகளில் திரும்பத் திரும்ப இதே கருத்துகளை வழியுறுத்துகிறேன்!

தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்! நம் சமயத்தையும்(சைவசமயம்) இன அடையாளத்தையும் அடகு வைத்துவிடாதீர்!

இந்து சங்கம் இதற்கெல்லாம் ஒரு நாளும் தீர்வு காண முன்வராது! அவர்களுக்கு ஆரியத்தை தூக்கிப் பிடிக்கவே நேரம் போதாது!

ஆகவே சைவசமயம் சார்ந்த அமைப்புகள் இயக்கங்கள், ஐயா ஆறு நாகப்பன், ஐயா தர்மலிங்கம், சைவசமய அறிஞர்கள், தமிழ் பற்றாளர்கள் அனைவரும் களத்தில் இறங்கி உங்களின் முயற்சிகளையும் உழைப்பையும் இன்னும் அதிகரியுங்கள்! இது எனது தாழ்மையான வேண்டுகோள்!

-கதிர்