கரும்தங்கம் விளைந்த பூமி பத்து ஆராங் நூற்றாண்டு தினம்

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பத்து ஆராங் நகருக்கு சில சிறப்புகள் உண்டு. மலாயாவில் நிலக்கரி எடுக்கப்பட்ட ஒரே இடம் பத்து ஆராங். பிரிட்டீஷ் மலாயாவின் போக்குவரத்துதுறை, மின்சாரத்துறை மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு பத்து ஆராங் ஆற்றிய பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பத்து ஆராங் அக்டோபர் 16, 2011 இல் நூற்றாண்டு தினம் கொண்டாடுகிறது.

அன்று உயர்ந்து நின்றது பத்து ஆராங்; இன்று தாழ்ந்து கிடக்கிறது. அந்நகர் குறித்த சில தகவல்கள்.

பத்து ஆராங் யார் கையில் இருக்கிறதோ, அவர் நாட்டு நிருவாகத்தின் குரல்வளையை நெருக்க முடியும் என்ற ஓர் நிலை இருந்ததால், பிரிட்டீஷாரும், ஜப்பானியர்களும் பின்னர் கம்யூனிச கட்சியினரும் இந்நகரின் மீது தீவிர கவனம் செலுத்தினர் என்பதும் வரலாறு.

பிரிட்டீஷ் மற்றும் ஓரிரு சீனர்களின் முதலீட்டுடன் சீன, இந்திய தொழிலாளர்களின் கடும் உழைப்பால், நாளுக்கு 24 மணி நேரமும் மூன்று முறை மாற்று வேலை அடிப்படையில், நிலக்கரி உற்பத்தி பெருகி நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நாடித்துடிப்பாக பத்து ஆராங் மாறியது.

தொழிலாளர்களின் உழைப்பு திருடப்பட்டாலன்றி முதலாளித்துவம் ஏற்றம் காண இயலாது என்பதற்கு பத்து ஆராங் இன்னொரு சான்றாகியது.

சுரண்டப்பட்ட தொழிலாளர்கள்

சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வந்த தொழிலாளர்கள் குத்தகை அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். தொடக்க காலத்திலிருந்தே குறைந்த ஊதியம் பெற்ற, குத்தகை முறையால் சுரண்டப்பட்ட தொழிலாளர்கள், தங்களுடைய உழைப்புக்கு, தேவைக்கு ஏற்ற ஊதியம் பெற தங்களுடைய தாய்நாடுகளில் கேள்விப்பட்ட, தெரிந்து கொண்ட தொழிற்சங்க வழியிலான போராட்ட சிந்தனையில் ஆர்வம் கொண்டனர். அத்தொழிலாளர்களுக்கு பல வகையில் ஒத்துழைப்பு வழங்கியது அக்காலக்கட்டத்தில் தோன்றிய மலாயா கம்யூனிச கட்சி. பிற்காலத்தில் உருவாக்கப்பட அகில மலாயா தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர், பிரிட்டீஷாரால் புடுசிறையில் 1949 ஆம் வருடம் தூக்கிலிடப்பட்ட, எஸ்.எ.கணபதி அடிக்கடி பத்து ஆராங் செல்வது வழக்கமானதாகும்!

“சோவியத் ஆட்சி”

மலாயா என்ற நாடு பிரிட்டீஷ் ஆட்சியில் உருவானது (வரலாற்றுப் பேராசிரியர்கள் கிளிங்கும் கங்கோங்கும் பிரிட்டீஷார் மலாயாவை இப்படி ஆளவில்லை, அப்படி ஆளவில்லை என்று உளறியுள்ளனர்!). பிரிட்டீஷார் இந்நாட்டை ஆண்டனர். அதன் பின்னர், நமது ஆட்சியினர். இவை இரண்டிற்கும் இடையில் இந்நாட்டின் ஒரே ஒரு நகரில் மட்டும் இன்னொரு ஆட்சி அமைக்கப்பட்டது. அந்த நகர் பத்து ஆராங்.

நவம்பர் 1936 இல் வேலைநிறுத்தம் செய்த பத்து ஆராங் தொழிலாளர்கள் மீண்டும் மார்ச் 24, 1937 இல் 5,000 லிருந்து  7,000 க்கு மேற்பட்ட நிலக்கரி சுரங்க சீன, இந்திய, மலாய் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அவர்கள் பத்து ஆராங் நகரைக் கைப்பற்றி அங்கு ஒரு “சோவியத்  ஆட்சி” அமைத்து நவீன மலாயா மற்றும் சிங்கப்பூரில் வரலாறு படைத்தனர். 

இதனை நிறுத்த வேண்டும் என்று பிரிட்டீஷ் ஹைகமிசனர் செண்டன் தோமஸ் நேரடியாக தலையிட்டு 250 போலீஸ்காரர்கள் மற்றும் 200 மலாய் ரெஜிமெண்ட் வீரர்களின் உதவியோடு ஏழு நாள்களுக்குப் பிறகு பத்து ஆராங் நகரையும் நிலக்கரி சுரங்கத் தொழிலையும் மீண்டும் கைப்பற்றினார்.

பத்து ஆராங் தொழிலாளர்களின் போராட்டம் இத்துடன் நிற்கவில்லை. 1947 ஆம் ஆண்டில் மீண்டும் வேலைநிறுத்தம் ஜனவரியில் தொடங்கி மார்ச் வரையில் நடந்தது.

தொழிலாளர்களின் வறுமை, அவர்களின் எதிர்ப்புகளுக்கிடையில் கடும் உழைப்பு, நிருவாகத்தினரின் அடாவடித்தனம், அதே நேரத்தில் சற்று விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கிடையில் பத்து ஆராங் வளர்ச்சி கண்டது. காடாக இருந்த இடம் 1940களில் சிலாங்கூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இடமாக வளர்ச்சி கண்டது.

பெரும் அளவிலான சீனர்களும் இந்தியர்களும் சில மலாய்க்காரர்களும் வாழ்ந்த பத்து ஆராங் போராட்டமும் அமைதியும் தவழும் இடமாக இருந்து வந்துள்ளது. “பத்து ஆராங் அமைதியின் ஊற்றாகவும் அதே நேரத்தில் புரட்சி உணர்வின் கொப்பரையாகவும் இருந்தது” என்று மலேசியாகினியின் ஒரு விமர்சகர் கருத்துரைத்தார்.

1915 ஆம் ஆண்டிலிருந்து 1960 ஆண்டு வரையில் 14 மில்லியன் டன்களுக்கு மேற்பட்ட நிலக்கரி எடுக்கப்பட்டு முதலில் மாட்டு வண்டிகளின் மூலமாகவும் பின்னர் மலாயன் ரயில்வே மூலமாகவும் விநியோகிக்கப்பட்டது. நிலக்கரியை முதலில் மாட்டு வண்டியில் நாராயணன் என்பவர் ஏற்றிச் சென்றார். நிலக்கரி சுரங்கத்திற்கு முட்டுக்கொடுப்பதற்கு வேண்டிய வெட்டுமரங்களை பத்து ஆராங்கை சுற்றியுள்ள காடுகளிலிருந்து வெட்டி விநியோகிக்கும் குத்தகையை முதன்முதலில் பெற்றவர் வேங்கடாசலம்.

சீன, இந்தியர்களின் உழைப்பு

அவசரகால பிரகடனத்திற்கு முன்பு பத்து ஆராங் நகரின் மக்கள்தொகை 18,600 ஆகும். ஆனால், 1950 இல் அது 9,479 ஆக குறைந்தது. அவர்களில் 6,799 பேர் சீனர்கள், 2,540 இந்தியர்கள், 130 ஜாவாக்காரர்கள் மற்றும் மலாய்க்காரர்கள் மற்றும் 50 மற்றவர்கள்.

1942 மற்றும் 1945 ஆம் ஆண்டுகளுக்கிடையில் மொத்தம் 8,000 தொழிலாளர்கள் நிலக்கரி சுரங்கத்திலும், நிருவாகத்திற்குச் சொந்தமான இதர தொழில்களிலும் பணியாற்றினர்.

1950 ஆம் ஆண்டில், 1,228 சீனர்களும், 1092 இந்தியர்களும், 70 ஜாவாக்காரர்களும் மலாய்க்காரர்களும் தொழிலாளர்களாக இருந்தனர். ஆனால், 1954 ஆண்டு வாக்கில் நிலைமை மாறியது. சீனர்கள் 640, இந்தியர்கள் 882, 28 ஜாவாக்காரர்கள் மற்றும் மலாய்க்காரர்கள், 51 மற்றவர்கள்.

மலாயாவின் தொழிற்துறையின் உயிர்நாடியாக  விளங்கியது என்று கூறப்பட்ட பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத் தொழில் 1954 ஆம் ஆண்டிலிருந்து இறக்கம் கண்டது. இதற்குக் காரணம் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட டீசல் எண்ணெய் ஆகும். நிலக்கரியிலிருந்து டீசலுக்கு மாறியதால் மலேயன் ரயில்வே ஆண்டிற்கு $2 மில்லியன் மிச்சப்படுத்தியாக கூறப்படுகிறது.

நிலக்கரி உற்பத்தியைக் குறைக்க 1954 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து 1960 ஆம் ஆண்டில் நிலக்கரி சுரங்கத் தொழில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

நிலக்கரி மற்றும் இதர தொழில்களைச் சுற்றி சிறு கிராமமாக 9,000 ஏக்கர் நிலப்பரப்பில் தோன்றிய பத்து ஆராங் காலப்போக்கில் அங்குள்ள மக்களுக்குத் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் கொண்ட நகராக மாற்றம் கண்டது.

தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள், கடைகள், மருத்துவமனை, சினிமா, விளையாட்டு திடல் மற்றும் கிளப் இருந்தன. ரவாங் வழியாக கோலாலம்பூருக்கு சாலைப் போக்குவரத்தும், குண்டாங், குவாங் வழியாக ரயில் போக்குவரத்தும் இருந்தன. ஒரு சிறு விமானத்திடலும் இருந்தது. நகரைச் சுற்றி உள்ளூர் ரயில் வண்டிகள் எந்த நேரத்திலும் ஓடிக்கொண்டிருந்தன.

நகரின் மத்தியில் அமைந்திருக்கும் திடல் பல அரிய நிகழ்ச்சிகளை கண்டுள்ளது. பள்ளிக்கூடங்களின் விளையாட்டுகள், கால்பந்து போட்டி விளையாட்டுகள் (சிலாங்கூரின் பிரசித்தி பெற்ற சிலாங்கூர் இந்தியன் மன்றத்தின் முதல்தர காற்பந்து ஆட்டக்காரர்கள்கூட இங்கு விளையாடியதுண்டு).

இந்தத் திடல் இந்திய தேசிய இராணுவ வீரர்களின் கூட்டத்தையும் அவர்களின் உரைகளையும் கேட்டுள்ளது. இராஜகோபால் என்பவர் ஆற்றும் உரை இடிமுழக்கம் போல் இருக்கும்.

மே தினத்தன்று பத்து ஆராங் தொழிலாளர்கள் இத்திடலில் கூடி விளையாட்டு போட்டிகளில் பங்குபெறுவதுண்டு. மாலையில் தொழிற்சங்க தலைவர்கள் தொழிற்சங்க போராட்ட உரைகள் நிகழ்த்துவதுண்டு.

பத்து ஆராங் தொழிலாளர்கள் சங்கம் திடலுக்கு முன் அமைந்திருந்த கட்டடத்திலிருந்து செயல்பட்டது. 1954 ஆம் ஆண்டில் அதற்கு புதுக்கட்டடம் கட்டப்பட்டது. அதற்கு அடிக்கல் நாட்டியவர் என்.எம். வார்மிங்டன், கம்பெனியின் ஜெனரல் மேனேஜர்.

1950 ஆம் ஆண்டிலிருந்து பத்து ஆராங் தொழிலாளர்களுக்கு மே 1 ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக இருந்தது.

பத்து ஆராங் தொழிலாளர்கள் பத்து நாள்களுக்கு ஒரு முறை சம்பளம் பெற்றனர்.

இக்கட்டடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற பி.பி.நாராயணன், இந்நாட்டிலுள்ள தொழிற்சங்களில் சொந்தக் கட்டடத்தைக் கொண்ட இரண்டாவது சங்கம் பத்து ஆராங் தொழிலாளர் சங்கம் என்று கூறினார்.

பத்து ஆராங் தொழிலாளர்களின் தொழிற்சங்க ஈடுபாடு வலுவானது. பத்து ஆராங்கில் தொழிற்சங்க இயக்கம் 1930 களில் தொடங்கி விட்டது. ஆனால், தொழிற்சங்க சட்டத்தின் கீழ் பத்து ஆராங் தொழிலாளர் சங்கம் 16.10.1946 இல் பதிவு செய்யப்பட்டது. நிலக்கரி உற்பத்தி நிறுத்தப்பட்ட பின்னர் அத்தொழிற்சங்கத்தின் பதிவு 12.10.1960 இல் தொழிற்சங்க இலாகா பதிவேட்டிலிருந்து அகற்றப்பட்டது.

பத்து ஆராங்கில் தொழிற்சங்க நடவடிக்கைகள் தவிர பல்வேறு சீன, இந்திய சமூக அமைப்புகளும் இருந்தன. அவற்றில் திமுக அமைப்பும் ஒன்று. தமிழர் திருநாள் நிகழ்ச்சி தவறாமல் நடைபெறுவதுண்டு. அந்நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களுக்கான முதல் பரிசை ச.சாமுவேலுவின் நண்பர் ரஹிம் தவறாமல் தட்டிச்சென்று விடுவார்.

தமிழக முதலமைச்சர் காமராஜ்

பத்து ஆராங் திமுக பிரமுகர்களில் முக்கியமானவர் பிச்சை என்பவர். தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் கு.காமராஜ் தமிழக முதலமைச்சராவதற்கு முன்பு மலாயாவுக்கு வருகை மேற்கொண்டிருந்தார். அப்போது பத்து ஆராங்கிற்கும் வந்தார்.

அவர் பேசுவதற்காக பத்து ஆராங் தொழிற்சங்கத்தின் பழைய கட்டடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காமராஜ் வந்தார். பேசினார். ஆனால், பிச்சை தொடுத்த கேள்விக்கணையால் கடும் சீற்றமுற்ற காமராஜ் அவரது துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு அங்கிருந்து வெளியேறி ரவாங்கில் நடைபெற்ற அடுத்த கூட்டத்திற்கு சென்று விட்டார்.

பத்து ஆராங்கில் 1940களிலேயே பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டு விட்டதாக தெரிகிறது. தமிழ், சீன மற்றும் ஆங்கிலப்பள்ளிகள் இருந்தன.

தாம் 1942 ஆம் ஆண்டு பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியில் படித்ததாக பின்னர் அப்பள்ளியில் ஆசிரியாக பணியாற்றியதாக ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர் பி. சுப்பையா, (வயது 84) கடந்த வாரம் தெரிவித்தார். இவரிடம் கல்வி பயின்றவர் ச.சாமிவேலு.

சீன மற்றும் ஆங்கிலப்பள்ளிகள் மிகச் சிறப்பாக இயங்கின. இப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் பலர் வழக்குரைஞகள் போன்ற பல தொழில்களில் பணியாற்றி வருகின்றனர். மசீசவின் புகார் பிரிவின் தலைவராக இருக்கும் மைக்கல் சோங் பத்து ஆராங் மாணவராவார்.

தொழிற்சங்க ஈடுபாட்டைப்போல், பத்து ஆராங் இந்தியர்கள் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபாடு கொண்டிருந்தனர். இந்து கோயில்கள் இருக்கின்றன. சீக்கிய கோயிலும் இருந்தது. சீனர்களின் சிறு கோயில்களும் தேவாலயங்களும் இருக்கின்றன. பள்ளிவாசலும் இருக்கிறது.

1948 ஜனவரி 30 இல்,மகாத்மா காந்தி கொல்லப்பட்ட செய்தியால் அதிர்ச்சி அடைந்த பத்து ஆராங் இந்தியர்கள் 16 நாள் துக்கம் அனுசரித்தனர். யாரும் மது அருந்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது.  அவ்வுத்தரவை மீறிய மூவர் பிள்ளையார் கோயிலின் முன் மூன்று தூண்களில் கட்டி வைக்கப்பட்டனர். அங்கு ஒரு போலீஸ்காரரும் காவலுக்கு இருந்தார்!

மலேசிய வரலாற்றில் சிறப்பு மிக்க இடத்தைப் பிடித்துள்ள பத்து ஆராங்கில் 1908 ஆம் ஆண்டில் ஒரு துண்டு நிலக்கரியை எதிர்பாராத சூழ்நிலையில் ஹாஜி அப்துல் ஹாடி என்ற மலாய்க்காரர் கண்டார். சம்பந்தப்பட்ட அரசாங்க இலாகாகள் மேற்கொண்ட சோதணைகள் அது நிலக்கரி என்பதை உறுதிப்படுத்தின.

அதனைத் தொடர்ந்து பலர் அங்கு நிலக்கரி எடுப்பதற்கான குத்தகைக்கு மனு செய்தனர். அவர்களில் ஒருவர் ஜெ.எ.ரஸ்ஸல் என்பவர். அந்த முயற்சியில் அவருக்கு வெற்றி கிட்டவில்லை. மேலும் பலர் முயன்றனர். இன்னொருவருக்கு குத்தகை அளிக்கப்பட்டது. அவரும் அதனை பின்னர் இன்னொரு RFMSCS என்ற நிறுவனத்திடம் விற்று விட்டார். அந்நிறுவனம் இரு ஆண்டுகளுக்கு மேல் பல சோதணைகளை நடத்திய பின்னர் இது இலாபகரமானதல்ல என்று அத்திட்டத்தை கைவிட்டது.

அதன் பின்னர், ஒரு நண்பரின் உதவியோடு RFMSCSக்கு வழங்கப்பட்டிருந்த உரிமத்தை ஜெ.எ.ரஸ்ஸால் வாங்கினார்.

லண்டனிலிருந்து மலாயாவுக்கு 1913 ஆம் ஆண்டு திரும்பி வந்த ஜெ.எ.ரஸ்ஸல் 20.6.1913 இல் மலேயன் கோல்லியரிஸ் லிமிடெட் (MCL) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

அந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக ரஸ்ஸலுடன் லோக் இயு, பூ சூ சூன் ஆகியோருடன் இன்னும் பலரும் இருந்தனர். பங்குதாரர்களான பல சீனர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் எம்சிஎல்லின் ஆண்டறிக்கை மாண்டரின் மொழியில் அச்சடிக்கப்பட்டது!

1915 ஆம் ஆண்டில் நிலக்கரி உற்பத்தி தொடங்கியது. அந்த ஆண்டில் மொத்தம் 10,725 டன் நிலக்கரி எடுக்கப்பட்டது. அதன் மதிப்பு மலாயா$53,046. உற்பத்தி படிப்படியாக உயர்ந்து அதன் உச்சகட்டத்தை 1950 ஆம் ஆண்டில் அடைந்தது. அந்த ஆண்டின் உற்பத்தி 415,777 டன்களாகும். மதிப்பு மலாயா$8,523,429. அதன் பின்னர் உற்பத்தி குறையத் தொடங்கி நிலக்கரி சுரங்கம் மூடப்பட்ட 1960 ஆம் ஆண்டில் 6,847 டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. மதிப்பு மலாயா$239,645.

மலேயன் கோல்லியரிஸ் லிமிடெட் 15.6.1968 இல் அதன் பெயரை ஒரு சிறப்பு தீர்மானத்தின் மூலம் மாற்றியது. அத்துடன் அதன் வரலாறும் முடிவுற்றது.

படு சுறுசுறுப்பான பத்து ஆராங் அதன் வேகத்தை இழந்தது. பலர் வெளியேறினர். ஆனால், இன்னும் பலர் வயதாகி விட்டபோதிலும் இன்னும் அங்கேயே வாழ்கின்றனர். இதில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றம்: இப்போது அதிகமான மலாய்க்காரர்கள் அங்கு குடியேறியுள்ளனர்.

எடுபடாதத் திட்டங்கள்

பத்து ஆராங்கில் ஒரு வெடிகுண்டு தொழிற்சாலை இருக்கிறது. அது அந்நகருக்கு புத்துயிர் அளிக்கக்கூடியதாக இல்லை. வழக்கம்போல், டெக்னோலஜி பார்க், எக்கோ பார்க் போன்ற அமைப்புகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவரலாம் என்ற கனவுத் திட்டங்களாக உருவாக்கப்பட்டன. அவ்வளவுதான்.

நூற்றாண்டு கொண்டாட்டம்

கடந்த ஓரிரு மாதங்களாக பத்து ஆராங் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவது பற்றி பேசப்பட்டது. அதன் நோக்கம் வரலாற்றுக்கு அங்கீகாரம் அளிப்பதோடு, பத்து ஆராங்கை பாரம்பரிய பட்டனமாக அறிவித்து சுற்றுலா  பயணிகளைக் கவர்வதற்கு சிறு தொழில்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்றும் கூறப்பட்டது.

இம்முயற்சிகளுக்கு சிலாங்கூர் மாநில மற்றும் மத்திய அரசுகளின் ஆதரவு  நிச்சயம் உண்டு என்றும் கூறப்பட்டது.

அந்நகரில் வாழும் மக்களின் ஆதரவோடு அமைக்கப்பட்டதாக கூறப்படும் குழு இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முற்பட்டது. இக்குழுவில் பத்து ஆராங்கிற்கு வெளியில் வாழும் முன்னாள் பத்து ஆராங் வாசிகளில் சிலர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். கடந்த இரு மாதங்களில் நடந்த அக்குழுவின் கூட்டத்தில் நூற்றாண்டு தினம் 2011 கொண்டாடுவதற்கான சரியான ஆதாரங்கள் பற்றி வினவப்பட்டது.

ஹாஜி அப்துல் ஹாடி ஒரு நிலக்கரி துண்டைக் கண்ட 1908 ஆம் ஆண்டுதான் நூற்றாண்டு தினத்தின் தொடக்க ஆண்டு என்றால், காலங்கடந்து நூற்றாண்டு தினம் கொண்டாடப்படுகிறது.

ஜெ.எ.ரஸ்ஸல் எம்சிஎல் நிறுவனத்தை தொடங்கிய 20.6.1913 தான் தொடக்க ஆண்டு என்றால், நூற்றாண்டிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன.

விவாதத்தின் ஒரு கட்டத்தில், நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கான “கார்னிவெல்” இப்போது தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகள் வரையில் தொடரும். அப்போது நகரின் மத்தியில் ஒரு “வாரிசான்” ஞாபகச்சின்னம் அமைக்கப்படும். அதனை சிலாங்கூர் சுல்தான் திறந்து வைத்து பத்து ஆராங்கை ஒரு பாரம்பரிய பட்டனமாக (பெக்கான்) பிரகடனம் செய்வார் என்றும் கூறப்பட்டது.

இத்தகவல் மஇகாவின் முன்னாள் தலைவர், பத்து ஆராங்கின் புகழ் பெற்றவர்களில் ஒருவர் என்ற முறையில், ச.சாமிவேலுவிடம் கூறப்பட்டது. அதனைச் செவிமடுத்த அவர், “ஏன் பெக்கான்?, பண்டார் என்று அறிவிக்கலாமே” என்று ஆலோசனை தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (9.10.2011) நடந்த அக்குழுவின் கூட்டத்தில் இந்த நூற்றாண்டு “கார்னிவல்” இப்போது தொடங்கி 2013 வரையில் தொடரும் என்று சுட்டிக் காட்டப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களின் புன்னகை காணப்பட்டது. ஆனால், உறுதிப்படுத்தும் பதில் கூறப்படவில்லை.

மேலும், பத்து ஆராங்கை வாரிசான் “மெலாயு” அல்லது வாரிசான் “சீனா” அல்லது வாரிசான் “இந்தியா” என்று பிரகடனம் செய்வதை விட, வாரிசான் “பெகெர்ஜா” என்று அறிவிப்பது மலேசிய தொழிற்சங்க போராட்ட வரலாறு பத்து ஆராங் தொழிலாளர்களின் போராட்டத்தைக் குறிப்பிடாமல் எழுத முடியாது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதை அங்கீகரிப்பதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பத்து ஆராங் நூற்றாண்டு கொண்டாட்டம் பத்து ஆராங் மக்களின், அரசியல் வேறுபாடற்ற, கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

நாளை நடைபெறவிருக்கும் அதிகாரப்பூர்வமான கொண்டாட்ட நிகழ்வில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் பங்கேற்கிறார் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் சரியான முறையாகும்.

ஆனால், இந்நிகழ்வில் பங்கேற்கும் இதர பெருமக்கள் யார்? பத்து ஆராங் மக்களின் பங்கேற்பு என்ன? பத்து ஆராங் பள்ளி மாணவர்களின் பங்கேற்பு உண்டா? அங்கு வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதா?

போராட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் பெயர்பெற்ற பத்து ஆராங், அதன் நூற்றாண்டு கொண்டாட்டத்தை குதூகலத்துடன் வரவேற்கிறதா? அல்லது முனுமுனுக்கிறதா?

அரசியல் கட்சி சார்பற்ற மக்கள் கொண்டாட்டமா? அல்லது ஓர் அரசியல் கட்சியின் நோக்கத்தை அடைவதற்கான கொண்டாட்டமா?

பத்து ஆராங் மக்கள் வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டு கேட்கிறார்கள். எங்களுக்கு என்ன செய்வது என்றும் தெரியும் என்கின்றனர்.