அம்பிகா: நஜிப் “40,000 வங்காளதேசி வாக்குகள்” என்று கூறிக் கொண்டிருப்பது ஒரு திசை திருப்பும் நாடகம்

Ambiga - redherringகடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் 40,000 வங்காளதேசிகள் வாக்களித்திருந்தனர் என்பதை மீண்டும் மீண்டும் பிரதமர் நஜிப் மறுத்து வருவது பொதுத் தேர்தலின் போது நடந்த இதர தேர்தல் மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதைத் தவிர்ப்பதற்காக அவர் நடத்தும் திசை திருப்பும் நாடகம் என்று பெர்சே இணைத் தலைவர் அம்பிகா கூறினார்.

“இந்த ஒரு பிரச்னையை அவர்கள் ஏன் பெரிதுபடுத்துகின்றனர் என்பதில் எனக்கு பெரும் சந்தேகம் ஏற்படுகிறது. இது ஒரு திசை திருப்பும் செயல் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இதை வைத்து அவர்கள் இதர ஆதாரப்பூர்வமான தேர்தல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை”, என்று தொடர்பு கொண்ட போது அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

அக்டோபர் 31 இல், சிஎன்என்  நேர்காணலில் நஜிப்பிடம் தேர்தல் “மோசடி, வாக்குகள் வாங்கப்பட்டது, இரட்டை வாக்கு அளித்தல், ஆவி வாக்குகள், (மற்றும்) தொகுதி நிர்ணயப் பிரச்னைகள்” பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

அக்குற்றச்சாட்டுகள் “அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கும் போது … மொத்தத்தில் ஆதாரமற்றவை” என்று பதில் அளித்த நஜிப், Najib - CNNஎடுத்துக்காட்டாக, வாக்களிப்பதற்காக 40,000 வங்காளதேசிகள் கொண்டுவரப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கபடவே இல்லை என்பதை வலியுறுத்திக் கூறினார்.

மே பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்தப் பிரச்னை பக்கத்தான் ரக்யாட்டை ஏளனம் செய்வதற்காகவும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை நம்பாமல் செய்வதற்காகவும் எழுப்பப்படடது. கடந்த சில வாரங்களில் நஜிப்பின் அக்டோபர் 25 பட்ஜெட் உரையிலும், அக்டோபர் 28 கெராக்கான் தேசிய மாநாட்டிலும் மிக அண்மையில் சிஎன் என்னிலும் மீண்டும் எழுப்பப்பட்டது.

“சிஎன்என் நேர்காணலில் கேட்கப்பட்ட மோசடி, வாக்குகள் வாங்கப்பட்டது மற்றும் தொகுதி நிர்ணயம் போன்ற வேறு எந்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கவில்லை”, என்பதை அம்பிகா சுட்டிக் காட்டினார்.