சிறீ லங்கா:பிரதமரின் செயல் நாட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும்.

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர், நவம்பர் 13, 2013.

 

Dr-Xavier-Jeyakumarமலேசியப் பிரதமர் நஜிப் துன் ராசாக் இலங்கையில் நடைபெறும்  காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டு அடையாளத்திற்கு நாட்டைப் பிரதிநிதிப்பதை விட நாட்டு மக்களின் எண்ணங்களைப் பிரதிநிதிக்கும் வண்ணம் அம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே, மலேசியர்களுக்கு, குறிப்பாக மலேசிய இந்தியர்களுக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகும். பட்ஜெட் உரையில் நன்றி என்ற வார்த்தையை உதிர்ப்பதன் வழி மட்டும் நன்றிக் கடன் தீராது.

 

மலேசியா  அதன் ஆரம்பக் காலத்திலேயே  இனவாதத்திற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு முக்கிய ஆசிய நாடாக விளங்கியதுண்டு. இனவாதத் தென் ஆப்ரிக்க மற்றும் ரொடிசியா ஆகியவற்றைத் தனிமை படுத்துவதிலும், அரசியல், பொருளாதார உறவுகளையும் துண்டிக்கவும் தயங்காத நாடாக அன்றைய பிரதமர் துங்கு அப்துல் ராஹ்மான் மலேசியாவை உருவாக்கியிருந்தார். அன்று இவ்விவகாரங்களில் துங்குவுடன் இன்றைய பிரதமரின் தந்தையான துன் அப்துல் ரசாக் நிறைவான பங்களிப்பை வழங்கியுள்ளதை இன்றைய பிரதமர் உணர வேண்டும்.

 

அதே போன்று, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களிலும், போஸ்னியா- எஸகோபீனா மனித உரிமை மீறல்கள் குறித்த போராட்டங்களிலும் Sri lanka - najib's promiseமுக்கியப் பங்காற்றிய மலேசிய தலைவர்கள், அருகிலுள்ள இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் காட்டிய அலட்சியப் போக்கு, இன்றைய மலேசியாவின் அரசியல் தலைமைத்துவத்தின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

 

கடந்த பொதுத்தேர்தலுக்கு முன், மலேசிய இந்தியர்களின் வற்புறுத்தலையும் மீறி  இலங்கை மீது அமெரிக்கக் கொண்டு வந்த ஐ நா மனித உரிமை ஆணையத்தின் 13 வது தீர்மானத்தின் மீது, வாக்களிக்காமல்  ஒதுங்கிக் கொண்ட நஜிப்பின் அரசாங்கம், இந்நாட்டின் 18 இலட்சம் இந்தியர்களை அவமதித்ததை  இந்தியர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதனைப் பிரதமர் நினைவில் கொள்ள வேண்டும்.

 

மலேசியாவின் முன்னாள் தலைவர்கள், இன்றைய பிரதமரின்  தந்தை உட்பட, மனித உரிமைக்கு துணிந்து குரல்  கொடுக்கும் நாடாக இந்நாட்டை உருவாக்கி இருந்தனர். அவ்வகையில்  நீண்ட நாட்களுக்கு முன்பே இலங்கை இனப் படுகொலையை கண்டித்திருக்க வேண்டும் மலேசியா, ஆனால் இன்றைய மலேசிய தலைவர்கள் அந்த வாய்ப்பினை தவற விட்டு விட்டனர்.

 

இன்று ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்ற பேதமின்றி அனைத்து இந்தியர்களும் ஒருமித்த குரலில் விடும் கோரிக்கை பிரதமர் இலங்கை காமன்வெல்த் மாநாட்டுக்கு செல்லக் கூடாது என்பதே!   இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு பிரதமராக இருந்தால், பிரதமர் நஜிப் இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு   இந்தியர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். இம்மாநாட்டில் நாட்டை பிரதிநிதிப்பதை விட, நல்ல ஒரு பிரதமராக நாட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும் பிரதமர் நஜிப்பின் செயல்.

 

 

TAGS: