மலேசியாகினி இல்லம்: ஒரு செங்கல் வாங்கி உதவுங்கள்

Mkini - Building 1கடந்த 14 வருடங்களாகப் பல போராட்டங்களுக்கிடையில் செயல்பட்டு வந்த மலேசியாகினி அதற்கென ஒரு நிரந்தர இல்லத்தை வாங்கியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அவ்வில்லம் அதன் புதிய செயலாகமாக இயங்கும்.

அக்கட்டடம் பெட்டாலிங் ஜெயா, செக்சன் 51, பிஜே51 பிஸ்னெஸ் பார்க் என்ற இடத்தில் இருக்கிறது. அங்கிருந்து மலேசியர்களுக்கு இணையதளம் வழி இன்னும் சிறப்பான வகையில் செய்திகள் வழங்கும் அடுத்த கட்டத்தை அது எட்டும்.

மலேசியாகினி மேலும் சிறப்பாகச் செயல்பட வலுவான அடித்தளம் தேவைப்படுகிறது என்று அதன் தலைமை நிருவாகி பிரமேஷ் சந்திரன் கூறினார்.

@Kini என்ற பெயர் கொண்ட அக்கட்டடதில் செய்தி வழங்கும் நிறுவனத்திற்கு தேவைப்படும் இட வசதிகள், பயிற்சி அறைகள் மற்றும் வீடியோ ஸ்டூடியோ  போன்ற இதர வசதிகள் அனைத்தும் அதில் இருக்கும்.

“கடுமையாக உழைத்து முக்கியமான செய்திகளையும் கருத்துகளையும் வழங்க உதவும் மலேசியாகினியின் உண்மையான ஹீரோக்களான அதன் பணியாளர்களுக்கு தேவைப்படும் இடவசதி அதில் இருக்கும்”, என்று அதன் முதன்மை ஆசிரியர் ஸ்டீபன் கான் கூறினார்.

இதன் வழி மலேசியாகினி அதிகாரிகளின் தூண்டுதலால் அடிக்கடி கட்டட உரிமையாளர்களால் வெளியேற்றப்படும் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க இயலும் என்றும் அவர் கூறினார்.

2004 ஆண்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் தாக்குதலைத் தொடர்ந்து பங்சார் உத்தாமாவில் இயங்கி வந்த மலேசியாகினி அங்கிருந்து விரட்டப்பட கதையை ஸ்டீபன் விபரித்தார்.

மலேசியாகினியின் புதிய கட்டடத்தில் ஓர் இணையதளத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும் என்று பிரமேஷ் சந்திரன் மேலும் கூறினார்.

வாசகர்களின் ஆதரவு தேவைப்படுகிறது

மலேசியாகினி வாங்கிய கட்டடத்தின் விலை ரிம6.1 மில்லியன். இதர செலவுகளையும் சேர்த்து அதன் மொத்த விலை ரிம7 மில்லியன் ஆகும்.Mkini - Building 2

கட்டடத்திற்கு முன்பணமாக ரிம1 மில்லியன் கொடுக்கப்படும். ரிம3 மில்லியன் வங்கியில் கடனாகப் பெறப்படும்.

எஞ்சியுள்ள ரிம3 மில்லியன் சுமையைத் தீர்க்க மலேசியாகினி அதன் வாசகர்களின், ஆதரவாளர்களின் உதவியை நாடுகிறது.

அடுத்த இரு மாதங்களில் ரிம3 மில்லியனைத் திரட்டும் நோக்கத்தில் “ஒரு செங்கல் வாங்குங்கள்” (“Buy a brick”) என்ற திட்டத்தை மலேசியாகினி அறிமுகப்படுத்துகிறது.

அளிக்கப்படும் தொகை எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். ரிம1000 வழங்குபவர்களுக்கு அதற்குச் சமமான சந்தா மற்றும் விளம்பரத்திற்கான வசதிகள் அளிக்கப்படும். அவர்களின் பெயர் அச்செங்கல்லில் பொரிக்கப்பட்டு நிரந்தமாக ஒரு சுவரில் பதிக்கப்படும்.

இதற்கான பரப்புரை நேற்றே தொடங்கப்பட்டு விட்டது. மலேசியாகினியின் பணியாளர்களும் அவர்களது நண்பர்களும் ரிம42,000 ஐ திரட்டி விட்டனர்.

“சுயேட்சையான ஊடகத்திற்கு ஓர் இல்லத்தை உருவாக்க ஒரு செங்கல் வாங்கி உதவுங்கள்” என்று முதன்மை ஆசிரியர் ஸ்டீபன் கான் கேட்டுக் கொண்டார்.

இக்கட்டடம் குறித்த மேல்விபரங்களுக்கு malaysiakini.com ஐ வலம் வாருங்கள். தொலைபேசி எண் 03-2284 3367.