அரசாங்க உதவிகள் கிடைத்தது உண்டு: பெர்காசா ஒப்புக்கொள்கிறது

 

Perkasa - Govt supportமலாய்க்காரர்களின் உரிமைகளுக்காகப் போராடும் இனவாத அமைப்பான பெர்காசா அரசாங்க இலாகாகளிடமிருந்து சில உதவிகளைப் பெற்று வருகிறது என்பதை அதன் தலைமைச் செயலாளர் சைட் ஹசான் சைட் அலி ஒப்புக்கொண்டுள்ளார்.

பிஎன்னுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு பெர்காசா உதவியிருக்கிறது. ஆகவே, அரசாங்க இலாகாகள் அளித்த உதவிகளை அவர் நியாயப்படுத்தினார்.

“தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கேஎன்), தேசிய குடியியல் துறை (பிடிஎன்) மற்றும் சிறப்பு விவகார இலாகா (ஜாசா) ஆகியவை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெர்காசா செயல்முறை திட்டங்களுக்கு உதவியுள்ளன என்பதை நாங்கள் மறுக்கவில்லை.

“ஆனால், வழங்கப்ட்ட உதவிகள் இதர அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு, சீன மற்றும் இந்திய அரசார்பற்ற அமைப்புகள் உட்பட, வழங்கப்பட்ட உதவிகளை விட கூடுதலானவை அல்ல”, என்று நேற்றிரவு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

எம்கேஎன் மற்றும் பிடிஎன் ஆகிய இரு அமைப்புகளும் பிரதமர் துறையைச் சேர்ந்தவை. ஜாசா, தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் ஒரு பிரிவாகும். பிடின்னும் ஜாசாவும் கொள்கை பரப்பும் பிரிவுகள் எனக் குற்றம் சாட்டப்பட்டவைகளாகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெர்காசாவின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் இப்ராகிம் அலி ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த பெல்டாவின் தலைவர் இசா சாமாட்டிற்கு பதில் அளித்த சைட் ஹசான் இவ்வாறு கூறினார்.

இசா சாமாட்டின் கருத்து பொறுப்பற்றது என்று கூறிய சைட் ஹசான், “எங்களுடைய செயல்திட்டங்கள் வெற்றியடைய பெர்காசாவுக்கு அளித்த உதவிகளை இசா பட்டியலிட வேண்டும். எவ்வளவு? மில்லியன்களா? பில்லியன்களா?”, என்று அவர் மேலும் வினவினார்.

“பிஎன்னுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு பெர்காசா என்ன செய்துள்ளது என்பதை அவர்களின் உதவியோடு ஒப்பிடுகையில், அது ஒன்றும் பெரியதல்ல”, என்றாரவர்.

 

 

 

 

 

 

 

 

TAGS: