இந்தியர்களுக்கு துரோகம் இழைத்த நஜிப்பை பதவி துறக்கச் சொல்கிறார் வேதமூர்த்தி

 

இந்திய சமூகத்திற்கு அப்பட்டமான நம்பிக்கை துரோகம் இழைத்ததற்காக பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நஜிப்பிடம் மலேசிய இண்ட்ராப் மன்றத்தின் (பிஎச்எசம்) பி.வேதமூர்த்தி கூறினார்.

சுமா1 vedaர் ஒரு வாரத்திற்கு முன்பு தமது செனட்டர் மற்றும் துணை அமைச்சர் பதவியை விட்டு விலகிய வேதமூர்த்தி இன்று சுமார் 20 நிமிடங்களுக்கு நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இந்திய சமூகத்திற்கு துரோகம் இழைத்த நஜிப் அப்துல் ரசாக் ஒரு பொய்யர் என்றும் கூறினார்.

“இதை (நம்பிக்கை துரோகத்தை) செய்ததால், அவர் (நஜிப்) அனைத்து இந்திய மக்களுக்கும் வரலாற்று அளவில் நம்பிக்கை துரோகச் செயலை புரிந்துள்ளார்.

“பல தலைமுறை வரைக்கும் இதனை மறக்க இயலாது. இக்கதை மீண்டும் மீண்டும் கூறப்படும்”, என்று வேதமூர்த்தி விசனப்பட்டுக் கொண்டார்.

பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய வேதமூர்த்தி அவரது அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளை ஏற்க மறுத்து விட்டு அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

கடந்த ஆண்டில் மே 5 ஆம் தேதி நடைபெற்ற 13 ஆவது பொதுத் தேர்தல் நடப்பதற்கு ஐந்தே நாள்களுக்கு முன்பு பாரிசான் நேசனலுடன் சர்ச்சைக்குள்ளான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்ட வேதமூர்த்தி கடந்த திங்கள்கிழமை அவரது செனட்டர் மற்றும் துணை அமைச்சர் பதவிகளைத் துறந்தார்.

ஒப்பந்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்தியர்களை பாரிசானுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். 13 ஆவது தேர்தலுக்குப் பின்னர்  செனட்டராகவும் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட அவர் இந்தியர்களின் விவகாரங்களுக்கு பொறுப்பு ஏற்பார் என்ற தோற்றம் அளிக்கப்பட்டது.

ஆனால், அவர் எழுப்பிய போலீஸ் காவலில் மரணம் போன்ற சில பிரச்சனைகள் காரணமாக அவர் பதவி விலக வேண்டுமென்று உள்துறை அமைச்சர் அஹமட் ஹமிடி, இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் கரி ஜமாலுடின் மற்றும் தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடின் ஹுஸ்சின் போன்ற சிலர் கேட்டுக் கொண்டனர்.

வேதமூர்த்தி அரசாங்க செயல்பாடுகளுடன் ஒத்துப் போக வேண்டும் என்று பிரதமர் நஜிப்பும் கூறியிருந்தார்.

“நம்பிக்கையை குலைக்கும் முடிவு”

வேதமூர்த்தியின் பதவி விலகல் குறித்து கருத்துரைத்த நஜிப், அவரது முடிவு நம்பிக்கையை குலைப்பதாகும் என்று வர்ணித்ததோடு அவர்கள் அது குறித்து பேசி இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு பதில் அளித்த வேதமூர்த்தி தாங்கள் பல தடவைகளில் விவாதங்கள் நடத்தி இருக்கிறோம். ஆகவே, நஜிப் மலேசியர்களிடம் மேலும் பொய் சொல்கிறார் என்று வேதமூர்த்தி கூறினார்.

“கடந்த எட்டு மாதங்களில், நான் பிரதமரோடு அவரது புத்ராஜெயா அலுவலகத்தில் குறைந்தது16 கூட்டங்களை நடத்தியுள்ளேன்.

“இந்த கூட்டங்கள் ஒவ்வொன்றிலும், தாம் தலைமை ஏற்க விருப்பதாக அவர் உறுதியளித்த இப்புதிய பிரிவுக்கு பெயரிடுவதோடு ஒப்புக்கொள்ளப்பட்ட பட்ஜெட் குறித்தும் வலியுறுத்தி வந்தேன்”, என்று வேதமூர்த்தி விளக்கம் அளித்தார்.

மேலும், “தீர்மானங்கள் எடுப்பதற்கான அரசியல் திண்மை மற்றும் ஒப்புகொள்ளப்பட்டவற்றை அமலாக்கம் செய்வதற்கு அவரது அரசு ஊழியகளுக்கு அழுத்தம் கொடுக்க இயலாத” ஒரு பலவீனமான தலைவர் என்று நஜிப்பை அவர் கடுமையாக விமர்சித்தார்.

 

 

 

 

TAGS: