சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளை ஓரங்கட்டியது ஏன்?

 

Gunarajகடந்த ஐந்து ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 97 தமிழ்ப்பள்ளிகளும் கணிசமான நிதி உதவியைப் பெற்றுள்ளன. அந்நிதி உதவியைக் கொண்டு சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள், கணினி மையங்கள் அமைக்கப்பட்டதோடு இன்னும் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

சிலாங்கூர் மாநில அரசால் வழங்கப்பட்ட இந்த நிதி உதவியின் பயனை மாநில இந்தியர்கள் கண்கூடாகக் கண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டி அவ்வாறான நிதி உதவி ஏன் இவ்வாண்டிலும் தொடரப்படவில்லை என்று செலயாங் பிகேஆர் தலைவர் கே. குணராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு பிறந்து ஐந்து மாதங்களாகி விட்டன. தமிழ்ப்பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு வரையில் வழங்கப்பட்ட நிதி உதவியின் வழி தமிழ்ப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களால் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இவ்வாண்டு இதுவரையில் எதுவும் நடைபெற்றவில்லை என்று கூறிய குணராஜ், “யுஎஸ்ஆர் தேர்தல் சம்பந்தமான பல பயிற்சி திட்டங்கள் முடங்கிக்கிடக்கின்றன”, என்றார்.

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி உதவி அளிப்பதற்கு பொறுப்புடைய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் அவ்விவகாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இவ்வாண்டில் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தமிழ்ப்பள்ளிகளுக்கும் அவற்றின்Tamil school - finance4 மாணவர்களுக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வாரியத்தின் தலைவர் க. உதயசூரியன் தொடர்பு கொண்ட போது கூறினார்.

“சிலாங்கூர் மாநில அரசின் தற்போதைய போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு பொறுப்பானவர்கள் தங்களுடைய வஞ்சகப் போக்கை உடனடியாக மாற்றிக்கொண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி உதவியை மேலும் தாமதப்படுத்தாமல் உடனே அளிக்க வேண்டும்”, என்றார் உதயசூரியன்.

தமிழ்ப்பள்ளிகளை மட்டும் …

இவ்வாண்டில், இதுவரையில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி உதவி அளிக்காமல் இருந்து வரும் சிலாங்கூர் மாநில அரசின் போக்கில் மிகக் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது தமிழ்ப்பள்ளிக்களுக்கு வழங்க வேண்டிய நிதி உதவியை மட்டும் நிறுத்தி வைத்திருப்பதாகும். மலாய், சீன மற்றும் சமயப்பள்ளிகளுக்கான நிதி உதவி வழங்கப்பட்டு விட்டது என்பதை வெளியிட்ட குணராஜ், “தமிழ்ப்பள்ளிகளை மட்டும் ஒதுக்கி வைத்திருப்பது ஏன்?”, என்று வினவினார்.