தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள் விரைவில் பட்டுவாடா செய்யப்படும்

-அணா பாக்கியநாதன், மே 11, 2014.

tamilschool_in_malaysia கோல்பீல்ட்ஸ் தோட்டத்தில்  சிலாங்கூர் அரசால் கட்டப்படும்  மாணவர் தங்கும் விடுதி மற்றும் பள்ளிக்கு  உடனடியாக டெண்டர் சமர்ப்பிக்க வேண்டிய பணிகளைச்  செய்யச் சிலாங்கூர் மந்திரி புசார்  காலிட்  பின் இப்ராஹிம்  ஜே.கே .ஆர் என்னும்  பொதுப்பணி துறைக்குக் கட்டளையிட்டார்.

சுமார் 500 மாணவர்கள்  தங்கும் வசதிகளுடன்  50 லட்சம்  வெள்ளி செலவில் கட்டப் படவிருக்கும்  இவ்விடுதி 18 மாதங்களில்  கட்டி முடிக்கப்படும். இவ்விடுதி  அத்தோட்டத்தின்  முன்னாள் உரிமையாளரும்  அங்கு  நடைபெறும் மேம்பாட்டு திட்ட நிறுவனமான  கோலாலம்பூர் கெப்போங்  மற்றும்  மாநில அரசின்  கூட்டு  திட்டமாகும் என்றார்  மந்திரி புசார் காலிட்.

இவ்வாண்டுக்கான  தமிழ்ப்பள்ளிகளின்  மானியம் 40 லட்சம் வெள்ளிகள் கூடிய விரைவில் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பட்டுவாடா  செய்யப்படும்.  கடந்த 2008 ஆம் ஆண்டு  பக்காத்தான்  கட்சிகள் சிலாங்கூர் மாநிலத்தில்  ஆட்சியமைத்தபின்  உடனடியாகப் போட்ட திட்டங்களின்  ஒன்று இஸ்லாமிய, சீன, தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்குவது.

இதற்கு முன் இம்மாநிலத்தை  ஆண்ட பாரிசான் நேசனல்  அரசு,  தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளைச் சரியாகக் கவனிக்காததால்  தமிழ்ப்பள்ளிகளின்  நிலை மிக மோசமாக  இருந்தது.  அதனால், ஆண்டுதோறும்  தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும்  இந்த உதவித்தொகையின் வழி தமிழ்ப்பள்ளிகளின்  தரத்தை மேம்படுத்துவது நமது நோக்கம்.

இந்த திட்டத்தின் கீழ்  2009 ம் ஆண்டு தொடங்கி இதுவரை  2 கோடி 40 லட்சம் வெள்ளி மானியத்தை மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளின்  மேம்பாட்டுக்காக ஒதுக்கி உள்ளது. அதில் 2 கோடி வெள்ளிகள்  எல்லா 97 தமிழ்ப் பள்ளிகளுக்கும் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது.

இவ்வாண்டுக்கான  ஒதுக்கீட்டு தொகையான 40 லட்சம் வெள்ளிகளை வழங்கும் முன், இந்த நிதி  பரிந்துரை மற்றும் பட்டுவாடா செயற் குழு அதன்  ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாய்வறிக்கை  கிடைத்தபின், நிதி  வழங்குதல் நடைபெறும்.

கல்விக்குப் பொறுப்பான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் புவான்  அலிமா அலி, அதற்கான பணிகளைத் துரிதப்படுத்துவார்.  கல்வியின் வழி மக்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் பக்காத்தான் ராயாட்டின்  கடப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை என்றார் மந்திரிபுசார்.