மகாதீர்: சுல்தான்களிடம் முழு அதிகாரம் இருந்தபோது இலாபமடைந்தவர்கள் அந்நியர்களே

 

Mahathir-Sultanசுல்தான்கள் அரசாங்க விவகாரங்களில் தலையிடுவதைக் கடுமையாகச் சாடி வந்த முன்னாள் பிரதமர் மகாதீர், சுல்தான்கள் முழு அதிகாரத்தோடு ஆட்சி புரிந்த காலத்தில் பெருமளவிலான நிலங்களை அவர்கள் அந்நியர்களுக்கு கொடுத்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்ச்சைக்குள்ளான ஜோகூர் மசோதாவைப் பற்றி இதற்கு முன்னர் கருத்துரைத்த மகாதீர் அந்த மசோதாவில் அந்நியர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் எவரையும் குறிப்பிட்டு கூறாவிட்டாலும், அவர் குறிப்பிட்ட அந்நியர்கள் சிங்கப்பூரர்கள்தான் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். சிங்கப்பூரர்கள் பெருமளவில் நிலங்களையும் சொத்துகளையும் ஜோகூரில் வைத்துள்ளனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்ட முடியரசருக்கு செயலாட்சிதுறை அதிகாரம் கிடையாது. ஆகவே, அவர் நாட்டின் நிருவாகத்தில் தம்மை உட்படுத்திக்கொள்ள முடியாது.

“இது தேவை என்று கருதப்பட்டது ஏனென்றால் கடந்த காலத்தில் மலாய் மாநிலங்களை ஆண்டவர்கள் முழு அதிகாரங்களைக் கொண்டிருந்தனர். மக்கள் அரசியலில் ஈடுபடுவதிலிருந்து தடைசெய்யப்பட்டிருந்தனர்.

“இதன் விளைவாக பெருமளவிலான நிலங்கள் அந்நிய நாட்டினருக்கு கொடுக்கப்பட்டது. வாணிப சலுகைகள் அந்நியர்களுக்கு கொடுக்கப்பட்டது. இறுதியில், சுதந்திரமும் ஒப்பந்தப்படி பிரிட்டீஷ்சாரிடம் சூரியனும் சந்திரனும் இருக்கும் காலம் வரையில் தாரைவார்க்கப்பட்டது”, என்று மகாதீர் இன்று அவருடைய வலைதளத்தில் எழுதியுள்ளார்.

மலேயன் யூனியன் உருவாக்கப்படுவதற்காக மலாய் ஆட்சியாளர்கள் பிரிட்டீஸ் ஆட்சிப்பொறுப்பாளர் ஹெரோல்ட் மேக்மைக்கலின் கோரிக்கைக்கு பணிந்து அவர்களுடைய மாநிலங்களை பிரிட்டீஷ்சாரிடம் ஒப்படைத்ததையும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ராஜாக்களும் மகாராஜாக்களும் இந்தோனேசியாவில் சுல்தான்களும் அவர்களுடைய் அரியணைகளிலிருந்து இறக்கப்பட்ட காலத்தில் இது இங்கு நடந்துள்ளது என்பதை மகாதீர் உண்மை என்று ஏற்றுக்கொண்டார்.

இருப்பினும், அவர்களுடைய அதிகாரங்கள் அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பெடரல் அரசமைப்புச் சட்டத்தையும் மக்களையும் தற்காப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்றாரவர்.

“குறிப்பாக பிரதம மந்திரி உறுதியாக இருப்பதோடு பாரம்பரிய பழக்கவழக்கங்கள் அல்லது பணிவு ஆகியவற்றால் ஆட்கொள்ளப்பட்டுவிடக்கூடாது”, என்று மகாதீர் மேலும் கூறினார்.

ஆட்சியாளர்களுக்கு தாராளமான பென்சன் வழங்கப்படுகிறது. ஆகவே, அவர்கள் வாணிபத்தில் ஈடுபடக்கூடாது ஏனென்றால் அரசு அதிகாரிகள் அவர்களுக்கு மறுப்பு கூற சிரமப்படுவர் என்றும் அவர் கூறினார்.

“பழிபாவத்துக்கு அஞ்சாத வணிகர்கள் அவர்களுடைய காரியத்தைச் சாதிப்பதற்காக சுல்தான்களை பயன்படுத்திக்கொள்வதோடு சட்டம் மற்றும் கொள்கைகளிலிருந்து தப்பித்துக்கொள்வர்”, என்று மகாதீர் மேலும் கூறினார்.

 

TAGS: