முஸ்லிம்-அல்லாதார் சிவப்புச் சட்டைப் பேரணியைத் தவிர்ப்பது நல்லது

avoidபெர்சே  பேரணிக்கு  எதிர்ப்பாக   செப்டம்பர்  16-இல்  நடைபெறும்  பேரணியின்போது   முஸ்லிம்- அல்லாதார்  கோலாலும்பூரில்  இல்லாமலிருப்பது  நல்லது  என  மலாய்  என்ஜி-கள்   கூட்டமைப்பின்  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்  கூறினார்.

குறிப்பிட்ட  தேதியில்  முஸ்லிம்- அல்லாதார்  மாநகர்  மையப்  பகுதியைவிட்டு  விலகி  இருக்க  வேண்டும்   என்று  கூறும்  செய்திகள்  வலம்  வந்து  கொண்டிருப்பது  பற்றிக்  கருத்துரைக்குமாறு  கேட்டுக்  கொண்டதற்கு  ஜமால்  இவ்வாறு  சொன்னார்.

“அதுதான் மிகவும்  நல்லது”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

பெர்சே  பேரணியின்போது  தாங்கள் ஒதுங்கி  இருந்ததற்கான  காரணத்தையும்  அவர்  விளக்கினார்.

“பேரணிகளில்  ஆர்ப்பாட்டங்கள்  நடக்கும். அதில்  கலந்துகொள்பவர்கள்  எளிதில்  உணர்ச்சிவசப்பட்டு   விடுவார்கள்.

“பகை  அணி  ஒன்றைக்  கண்டுவிட்டால்  சினமுண்டாகும்.

“சினம் கொளும்படியான  தூண்டுதல்கள்  இருக்குமானால்   விரும்பத்தகாத  சம்பவங்கள்  நிகழலாம்”, என்றாரவர்.

பேரணி  அமைதியானதுதான்  என்பதையும்  அவர்  வலியுறுத்தினார்.

“ஆயுதங்கள், வெட்டுக் கத்திகள்  கொண்டுவருவதை  நாங்கள்  ஊக்குவிக்கவில்லை.

“சீனர்களின்  இரத்தம்  பெருக்கெடுத்தோடும்  என்று  கூறும்  சுவரொட்டிகள்  எங்களுடையவை  அல்ல. தீய  நோக்கம்  கொண்டவர்கள் சீண்டிவிடும்  நோக்கில்  அப்படிச்  செய்திருக்கலாம்:”, என  ஜமால்  கூறினார்.