பிரதமருக்கு அல்டான்துயாவைத் தெரியாது: அல் ஜசீராவிடம் பிஎம்ஓ வலியுறுத்து

altan“பிரதமர்  நஜிப்  ரசாக்குக்  காலஞ்சென்ற அவரைத்  தெரியாது, அவரைப்  பார்த்ததில்லை,  பேசியதில்லை”

இது, இன்று அல் ஜசீரா  தொலைக்காட்சியில் ஒளியேறிய  மங்கோலிய  பெண்  அல்டான்துயா  ஷரீபுவின்  கொலையை  விவரிக்கும்  பரபரப்பூட்டும்  ஆவணப்படம்  மீது  பிரதமர்  அலுவலகத்தின்  அதிகாரப்பூர்வமான  எதிர்வினையாகும்.

“போலீஸ்  விசாரணை,   மலேசிய  உயர்  நீதிமன்றம்,  முறையீட்டு  நீதிமன்றம்,  கூட்டரசு  நீதிமன்றம்  ஆகியவற்றில்  வழக்கு  விசாரணைகள்  உள்பட  விரிவான சட்டமுறைமைகள்  சரியாகக்  கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.  குற்றமிழைத்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு,  தண்டனையும் கொடுத்தாயிற்று..  நீதிமன்ற  விசாரனைகளில்  எந்தக் கட்டத்திலும்  பிரதமருக்கும்  அக்குற்றச்செயலுக்கும்  தொடர்புண்டு  என்று  கூறப்பட்டதில்லை. மறைமுகமாகக்கூட  கூறப்பட்டதில்லை..

“அரசியல்  எதிரிகளும் அவர்களின்  ஊடகக்  கூட்டாளிகளும்தான்  இவ்விவகாரத்தை  வைத்து  பல  ஆண்டுகளாக  பிரதமரைத்  தாக்கி  வருகிறார்கள். ஆனால்,  அதற்கான  ஆதாரம்  ஏதுமில்லை. ஆதாரம்  கிடைக்கவும்  கிடைக்காது. இவை  எல்லாமே  அரசியல்  ஆதாயத்துக்காகக்  கூறப்படும்  பொய்யான  குற்றச்சாட்டுகள்”,  என்று  அது  கூறிற்று.

அல் ஜசீராவில்  அதன் ‘101 East’ என்ற  வாராந்திர  நிகழ்ச்சியில்  ‘Murder in Malaysia (மலேசியாவில்  கொலை)  என்னும்  ஆவணப்படம்  இன்று  காலை  மணி  6.30க்கு  ஒளியேறியது. அதன்  மறுஒளிபரப்பு  இன்று  மாலை 5.30க்கு. அல் ஜசீரா அகப் பக்கத்திலும்  இந்த  ஆவணப்  படத்தைப்  பார்க்கலாம்.