ரபிடா அசீஸ்: ‘முதலில் மலாய்க்காரர்’ என்ற எண்ணத்துக்கு முடிவு கட்டுவீர்

rafமக்கள்  அனைவரும் மலேசியர்களாகத்தான்  தங்களை  அடையாளப்படுத்திக்  கொள்ள  வேண்டும்  என  முன்னாள்  அம்னோ  அமைச்சர்  ரபிடா  அசீஸ் வலியுறுத்தினார்.

குறிப்பாக  மலாய்க்காரர்கள்  தாங்கள்  முதலில்  மலாய்க்காரர்கள்  என்று  அடையாளப்படுத்திக்  கொள்வதை  நிறுத்த  வேண்டும்.  தேச  நிர்மாணிப்புக்கு  அது  அவசியம்  என்றாரவர்.

“நான்  மலாய்  இனத்தைச்  சேர்ந்தவள்  என்பதில்  பெருமை  கொள்கிறேன்.  ஆனால்,  முதலில்  நான்  ஒரு  மலேசியன்.  எதற்காக  அப்படிச்  சொல்கிறேன்? மலாய்  நாடு  என்ற  ஒன்று  இருக்கிறதா?”,  என  ஏர் ஏசியா X தலைவருமான  ரபிடா  வினவினார்.

“அரசியல்  ரீதியில்  சிலருக்கு  அப்படிச்  சொல்வது  பிடிக்காது  என்பதை  நானறிவேன்”, என்றாரவர்.

சாபா,  சரவாக்கைச்  சேர்த்துக்கொண்டு  மலேசியா  அமைந்தபோது  ‘தானா  மலாயு’  என்று  சொல்வது  நின்று  போனதை அவர்  சுட்டிக்காட்டினார்.

“எனவே,  முதலில்  மலேசியராக  இருப்போம். அதே  வேளை  வெற்றிபெற்ற  மலாய்க்காரராக,  சீனராக,   இபான்காரராக  இருப்பதில்  நீங்கள் பெருமிதம்  கொள்ளுங்கள்.  அது  உங்கள்  பாரம்பரியம்”, என  இரும்புப்  பெண்மணி  என்று  போற்றப்படும்  ரபிடா  கூறினார்.

இன்று  மலாயாப்  பல்கலைக்கழகத்தில், தேச  நிர்மாணிப்புக்கு  இளைஞர்களை  உருவாக்குவதில்  கல்வியின்  பங்கு’  என்ற  தலைப்பில்  ரபிடா  சொற்பொழிவாற்றினார்.