பிஏசி: 1எம்டிபி-இன் குறைகளுக்கு அதன் முன்னாள் தலைவரே பொறுப்பேற்க வேண்டும்

sha1எம்டிபியின்  கோளாறுகளுக்கு  அரசாங்கத்துக்குச்  சொந்தமான  அந்நிறுவனத்தின்  முன்னாள்  தலைமைச்  செயல்  அதிகாரி  ஷாரோல்  அஸ்ரால்  ஹல்மியும்  நிர்வாகத்தில்  இருந்த  மற்றவர்களும்தான்  பொறுப்பு  என்பது  பொதுக்  கணக்குக்  குழுவின்  முடிவாகும்.

“அந்த  வகையில்  சட்ட  அமலாக்கத்  தரப்பு  ஷாரோல்மீதும்  மற்ற  நிர்வாகிகள்மீதும்  விசாரணை  மேற்கொள்ள  வேண்டும்  என  வலியுறுத்துகிறோம்”, என  பிஏசி  அறிக்கை  கூறிற்று.

நீண்ட  நாள்களாக  எதிர்பார்க்கப்பட்ட  1எம்டிபி  மீதான  பிஏசி  அறிக்கை  நடப்பு  நாடாளுமன்றக்  கூட்டத்தொடரின்  இறுதி  நாளான  இன்று  தாக்கல்  செய்யப்பட்டது.

“ஒரு  நிறுவனம்  என்ற  முறையில்  1எம்டிபி  சிறந்த  நடைமுறைகளைக்  கொண்டிருக்க  வேண்டும்.  ஆனால், 1எம்டிபி நிர்வாகத்திலும்  இயக்குனர்  வாரியத்திலும்  சில  குறைபாடுகளைக்  காண  முடிகிறது”,  என  அது  கூறியது.

சில  நேரங்களில்  வாரியத்தின்  முடிவுகளையும்  ஆலோசனைகளையும்  மீறி  நிர்வாகம்  நடந்து  கொண்டதையும்  வாரியத்தின்  முடிவுக்குக்  காத்திராமல்  செயலில்  இறங்கியதையும்  அது  சுட்டிக்காட்டியது.
“முழுமையாக  மதிப்பீடு  செய்யப்படுவதற்கு  முன்பே  முதலீடுகள்  செய்திருக்கிறார்கள்,  கடன்கள்  வழங்கி  இருக்கிறார்கள்”, என்றும்  அந்த  அறிக்கை  கூறியது.

நிறுவனத்தை  நிறுவி  அதன்  ஆலோசனை  வாரியத்துக்கும்  தலைமையேற்றிருக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராக  நடவடிக்கை  எடுப்பதற்குப்  பொதுக்  கணக்குக்குழு  பரிந்துரைக்கவில்லை.