விவசாயிகளின் தற்கொலைக்கு அரசுதான் காரணம்.. அறிக்கை கூட இதுவரை இல்லை: பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு

pandian-prசென்னை: தண்ணீர் இன்றி கருகும் பயிர்களைப் பார்த்து உயிரிழக்கும் விவசாயிகளின் மரணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதுகுறித்து ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்றும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கோரியுள்ளார்.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி வரும் 5ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சாலை மறியல் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை பி.ஆர். பாண்டியன் சந்தித்துப் பேசினார்.

சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. 33 சதவீதத்திற்கும் குறைவாக மழை பெய்தால் வறட்சி மாநிலமாகத்தான் அறிவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

மேலும், காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடாமல் இருக்கிறது. அதுகுறித்த சிக்கல்கள் இன்னும் நீடித்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து நீரின்றி கருகும் பயிர்களால் விவசாயிகளின் மரணம் தொடர்கதையாகிவிட்டது.

எனவே, தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளின் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க அரசு குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும். தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். அதற்கான நெருக்கடியை மாநில அரசு வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆதரவைக் கேட்டோம். போராட்டத்திற்கு திமுக ஆதரவு தருவது பற்றி ஆலோசித்து கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார் என்று பி. ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: