இரு மொழித்திட்டம் ஒரு வரலாற்றுத்தவறு! – கா. ஆறுமுகம்

Arumugamஇரு மொழித்திட்டம் என்பது அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை விரும்பும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலமொழியில் வழங்குவதாகும். இந்தத் திட்டம் குறிப்பாக பெரும்பான்மை ஏழ்மை மாணவர்கள் பயிலும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்புடையதல்ல என்கிறார் வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.

தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பகாலம் தொட்டே வறுமை நிலை குழந்தைகளின் சரணாலயமாகவே இருந்து வருகின்றன. அவற்றின் ஏழ்மை நிலை குறித்து பல விவாதங்கள் எழுந்த போது அதற்கு தீர்வாக பல காலகட்டங்களில் அவை மூடப்பட வேண்டும் என்பது மேல்குடி மக்களின் விவாதமாக இருந்தது. இருந்தும் கடந்த 200 ஆண்டுகளாக இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்க காரணம் தமிழ்மொழியை உணர்வுப்பூர்வமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் உள்வாங்கிய மக்கள் மேற்கொண்ட போராட்டமாகும்.

இதற்கிடையில், தற்போது பெற்றோர்கள் விரும்பினால் இந்தத் திட்டத்தை பள்ளிகளில் அமலாக்கம் செய்யலாம் என்ற கருத்து ஏற்புடையதல்ல என்கிறார் தமிழ் அறவாரியத்தின் ஆலோசகருமான ஆறுமுகம்.

DLP collageதமிழ்ப்பள்ளிகள் அரசாங்கக் கொள்கைகளுக்கு உட்பட்டவையாக இருப்பினும் அவை நமது பண்பாட்டு மொழி சார்ந்த இன அடையாளமாகும். அதற்கான போரட்டம் அரசியல் தன்மை கொண்டது. அதை மேற்கொண்டவர்கள் தமிழ்மொழி வழி தமிழ்க்கல்வியை இந்த நாட்டில் நிலைத்திருக்க வேண்டும் என்ற வேட்கையால் வெகுண்டவர்கள்.

எனவே இந்த நாட்டில் உள்ள தமிழ்க்கல்விக்கு மக்கள் வழி உருவான ஒரு போராட்ட வரலாறு உள்ளது என்பதை யாரும் மறக்கவும் மறுக்கவும் இயலாது. 2007 ஆம் ஆண்டு நாடு தழுவிய அளவில் இருந்து பங்கேற்ற சுமார் இராண்டாயிரம் மக்களுக்கு தலைமையேற்று ஊர்வலமாக நாடளுமன்றதின் முன் மறியலில் ஈடுபட்டதை அவர் நினைவு கூறுகிறார்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழ்ப்பள்ளியில் இந்த இரு மொழித்திட்டம் வழி ஓர் உருமாற்றத்தை கொண்டு வர பெற்றோர்கள் விரும்பினால் முடியும் என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.

மாறாக, தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த முடிவுகளை சமுதாயம் அதன் ஒட்டு மொத்த ஈடுபாட்டால்தான் முடிவு செய்ய இயலும். அதை விடுத்து, ஆங்கிலத்தில் அறிவியலும் கணிதமும் இருந்தால்தான் தமிழ்பள்ளிகள் பக்கம் தலை வைத்துப் படுப்பேன் என வந்து போகும் சுயநலம் கொண்ட பெற்றோர்களிடம் தமிழ்க்கல்வியின் எதிர்காலத்தை ஒப்டைக்க இயலாது.

ஆங்கிலத்தின் முக்கியதுவம் என்பது அந்த மொழியை எப்படி கற்பது என்ற வழிமுறைகளில் காண வேண்டும். அதை விடுத்து, தமிழ்ப்பள்ளிகளின் தன்மையையும் பெரும்பான்மை மாணவர்களின் வளர்ச்சியையும் பாதிக்கும் இரு மொழிக் கொள்கையை  நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது.

இந்த இரு மொழித்திட்டதிற்காக போராடுபவர்கள் பல வகையான காரணங்களை முன்வைத்துள்ளனர். குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இயலும் என்பது ஒன்றாகும்.  இது ஆங்கில மோகத்தால் அடிப்படையற்ற வகையில் உருவான கருத்தாகும்.

najib_tamil_schoolதமிழ்ப்பள்ளியில் பயின்றால் தனது குழந்தையின் தரம் உயரும் என்ற வேட்கையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி சாதனை படைத்த பலர் இன்று நம்பிக்கை நடசத்திரமாக இருப்பதை பார்க்க இவர்கள் மறுக்கிறார்கள். இந்த நம்பிக்கையற்ற பெற்றோர்களுக்கு தமிழ்ப்பள்ளிகள் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் முடிவெடுக்கும் அருகதை கிடையாது.

இன்று சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழ்ப்பள்ளிகளில் இரு மொழித்திட்டம் அமலாக்கம் செய்வது பற்றி முடிவெடுப்பதில் ஒட்டுமொத்த சமூகத்தின் ஈடுபாடும் அவசியமாகிறது. அதை விடுத்து இது சார்பாக பெற்றோர்கள் விரும்பினால் அமலாக்காம் செய்யலாம் என்பதை அனைவரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறுவது ஒரு வரலாற்றுத்தவறாக அமையும் என எச்சரிகிறார் ஆறுமுகம்.