தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி திட்டத்தை இரத்து செய்ய கோரிக்கை!

DLP Pcஇருமொழித் திட்டத்தை தவறாக கையாண்ட தலைமையாசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மீது கல்வி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அந்த திட்டத்தை தமிழ்ப்பள்ளிகள் நடத்துவதை இரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இவ்வாறு  இன்று காலை  செந்துல் உணவகத்தின் செய்தியாளர் அரங்கில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. முப்பது சமூக இயக்கங்களைப் பிரதிநித்த குழுவினர் மேற்கண்ட கோரிக்கையை விடுத்தனர்.

மலேசியாவில் உள்ள 524 தமிழ்ப்பள்ளிகளில் நாற்பத்தேழு  (47)  தமிழ்ப்பள்ளிகள் டிஎல்பி எனப்படும் இருமொழித் திட்டத்தை அமலாக்கம் செய்ய அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இப்பள்ளிகள் அனைத்தும் முறையான வழியில் இந்த அனுமதியைப்  பெற்றனவா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

தலைமையாசிரியரின் ஆர்வத்தாலும் அல்லது பிடிஎஸ்டி(PTST) என்ற தமிழ்ப்பள்ளி திட்ட வரைவு  அளித்த அழுத்தத்தாலும் இந்தப் பள்ளிகள் கல்வி அமைச்சு வரையறுத்துள்ள கோட்பாடுகளுக்கு முரணான வகையில் இதில் பங்கெடுக்க விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தேசியப்பள்ளிகளில் இந்த இருமொழித் திட்ட அமலாக்கத்திற்கு சில அடிப்படை அடைவுகளை கல்வி அமைச்சு நிர்ணயம் செய்துள்ளது. அவற்றை பூர்த்தி செய்யும் பள்ளிகள் மட்டுமே இதில் பங்குகொள்ள அனுமதிக்கப்படும். ஆனால், இந்த அடிப்படை அடைவுநிலைகளை எட்டாத நிலையில் உள்ள 47 தமிழ்ப்பள்ளிகள் இதில் பங்கு பெற்றுள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு  கல்வி அமைச்சு எந்த அடிப்படையில் இந்த அனுமதியை வழங்கியது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

BANNER PC2.அதோடு, இந்தத் திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு உகந்தது அல்ல. தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 90  விழுக்காட்டிற்கு  அதிகமானோர் வீட்டில் தமிழ்மொழியைப்  பயன்படுத்துபவர்கள்.  இந்தத் திட்டத்தால் இந்த மாணவர்களின் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களின் திறன்கள் பாதிப்படையும். அப்படிப்பட்ட நிலை உருவாகும் போது அதற்கான பொறுப்பை யார் ஏற்பது என்ற வினாவும் எழுகிறது.

பெற்றோர்களின் அனுமதி உள்ளதாக பள்ளிகள் கூறினாலும், தலைமையாசிரியர்தான் இதற்கான முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். காரணம், தலைமையாசிரியருக்குத்தான் அந்த அடைவுநிலைகள், மாணவர்களின் தரம், ஆங்கிலமொழியில் அறிவியல் கணிதம் போன்ற பாடங்களை ஆங்கிலம் தெரியாத குழந்தைகளுக்குக்  கற்பித்தலுக்கான ஆற்றல் பள்ளிக்கு உள்ளதா என்பது போன்ற தகவல் தெரியும்.

DLP collageவெறுமனே ஆங்கிலமொழி மோகத்தில் ஆர்வம் கொண்டு குழந்தைகளின் மொழியாற்றலுக்கு அப்பாற்பட்ட வகையில், புரிந்துணர்வு தேவைப்படும் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை, புரியாத ஆங்கிலமொழி வழி போதிக்க முற்படுவது குழந்தைகளின் திறன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவே அமையும்.

கல்வி அமைச்சு நிர்ணயத்துள்ள அடைவுநிலைகள் வருமாறு:

முதலாவதாக, அந்தப் பள்ளியில் கற்றல் கற்பித்தலுக்கு உகந்த பாடப் புத்தகங்கள், துணை நூல்கள், மேற்கோள் நூல்கள் போன்ற வளங்கள் போதுமானதாக இருக்க வேண்டும்.

இவை மிகவும் முக்கியமானவை. தமிழ்ப்பள்ளிகளில் இந்த அளவுக்கான வசதிகள் கிடையாது. மேலும், போதுமான அளவு எவ்வளவு  என்பதும் தெரியாது.

இரண்டாவதாக, தலைமையாசிரியர்/ஆசிரியர் இந்த திட்ட அமலாக்கத்திற்கு தயாராக இருக்க வேண்டும். குறுகிய மற்றும் நீண்ட கால அளவிற்குப் போதுமான ஆசிரியர் தேவையை உறுதி செய்ய தலைமையாசிரியர் திட்டமிட வேண்டும்.

இதற்கு ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதம் போதிக்கும் திறன் மிகுந்த ஆசிரியர்கள் வேண்டும். PPSMI இரத்து செய்ததற்கான காரணங்களில் ஒன்று இவ்வகையான ஆசிரியர்கள் இல்லாததாகும். தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தமட்டில் இவ்வகையான ஆசிரியர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், தமிழில் அறிவியல் மற்றும் கணிதம் போதிக்க தமிழ் ஆசிரியர்கள் உண்டு.

மூன்றாவதாக, பெற்றோர்கள் எழுத்துமூலமாக இந்தத் திட்டத்தில் பங்கெடுப்பதை உறுதி செய்ய வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம் இதற்கு ஒப்புதலும் ஆதரவும் நல்க வேண்டும்.

tamil_schoolஉண்மையான விளக்கம் பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. உதாரணமாக, அறிவியல் பாடத்தை கேள்வி அறிவின் வழிதான் மேம்படுத்த இயலும். ஏன்? எப்படி? எதனால்? போன்ற வினாக்களை குழந்தைகள் கேட்க வேண்டுமானால் அவர்களுக்கு முதலில் என்ன பயில்கிறோம் என்பது  புரிய வேண்டும். தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் புரியாத மொழி. அதை அவர்களால் கிரகிக்க இயலாது. எனவே கேள்விகளின் வழி அறிவாற்றலை அதிகரிக்க இயலாத சூழழில் மனனம் மட்டுமே வழிமுறையாகிவிடும்.

நான்காவதாக, முந்திய ஆண்டின் யுபிஎஸ்ஆர்  தேர்வில்  அந்தப் பள்ளியின் மலாய்மொழி பாடத்தின் தேர்ச்சி விகிதம், தேசிய தேர்ச்சி விகிதத்தை எட்டியிருக்க வேண்டும் அல்லது அதைவிட கூடுதலாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஜிபிஎஸ் (GPS) 1.85 ஆக இருக்க வேண்டும்.

எந்தத் தமிழ்ப்பள்ளியும் இந்த அடைவுநிலையை எட்டவில்லை.

ஐந்தாவதாக, முழுமையான தகவலுடனும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒப்புதல் கடிதத்துடனும் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இதில் எந்த அளவு பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஈடுபட்டது என்பது ஐயப்பாடாகும். தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு, மேற்குறிப்பிட்ட அடைவுநிலைகள் சீர்தூக்கி பார்க்கப்பட்ட பின்னர்  இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. வீட்டில் ஆங்கிலம் பேசும் சில பட்டதாரி பெற்றோர்களின் சுயநலப்போக்கால் அவசரப்பட்டு இந்த முடிவை  தலைமையாசிரியர் எடுத்திருக்கக்கூடிய வாய்ப்புண்டு, அல்லது மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக அவர் இப்படிச் செய்திருக்கலாம்.

எங்களின் கோரிக்கை:

இந்த இருமொழித் திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு உகந்ததல்ல. தமிழ்ப்பள்ளியில் பயிலும் பெரும்பான்மையான (90 விழுக்காட்டிற்கும் அதிகமான) மாணவர்கள் இந்தத் திட்டத்தின் அமலாக்கத்தால் பாதிப்படைவர். குறிப்பாக தமிழ் பேசும் கீழ்தட்டு 40 (B40) மக்களின் குழந்தைகள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி பின் தள்ளப்படுவர். பிபிஎஸ்எம்ஐ (PPSMI) அமலாக்கத்தின் மீளாய்வு (2008) இதைத்தான் பரிந்திரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1. கல்வி அமைச்சு உடனடியாக தமிழ்ப்பள்ளிகளுக்கு அளித்திருக்கும் டிஎல்பி (DLP) திட்டத்திற்கான அனுமதிகளை இரத்து செய்ய வேண்டும்.

2. இதில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களையும்,  பெற்றோர் ஆசிரியர் சங்கங்களையும் விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

3. இருமொழித் திட்டம் வேண்டும் என கோரும் பெற்றோர்களுக்கு பல்லின மாணவர்கள் பயிலும் வகையில் தேசியப்பள்ளிகளை உருவாக்க வேண்டும். அதில் தமிழ்மொழியை ஒரு தேர்வு மொழியாக வழங்க வேண்டும்.

4. அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கை வழி அறிமுகப்படுத்தியுள்ள MBMMBI என்ற மலாய் மற்றும் ஆங்கில மொழிகளை வளப்படுத்தும் கொள்கையை தமிழ்ப்பள்ளிகளில் அமலாக்கம் செய்ய வேண்டும்.

இது சார்பான ஒரு குறிப்பானை கல்வி அமைச்சிடம் சமர்பிக்கப்படும் என்றார் இந்த நிகழ்ச்சியை வழி நடத்திய வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.