இன்று அனைத்துலகத் தாய்மொழி நாள் – நாம் இருப்பதையும் இழக்க வேண்டுமா? – கா. ஆறுமுகம்

Arumugamஉலக மக்களின் தாய்மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்து அவற்றை மாணவர்களின் முதல் போதனை மொழியாகப் பயன்படுத்தப்படுவதற்கும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கும், தாய்மொழி அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் ஐக்கிய நாட்டு மன்றம் பெப்ரவரி 21 ஆம் தேதியை அனைத்துலகத் தாய்மொழி நாள் என்று அறிவித்தது.

உலக மக்கள் பயன்படுத்தும் அனைத்து தாய்மொழிகளையும் அழிவிலிருந்து காப்பாற்றி அவற்றை பாதுகாக்க வேண்டிய கடமையை ஐநா அதன் உறுப்பிய நாடுகளிடம் அளித்துள்ளது. அந்நாடுகளில் மலேசியாவும் அடங்கும்.

மலேசிய அரசாங்கம் அனைத்துலகத் தாய்மொழி  நாள் பற்றி அக்கறை காட்டவில்லை. ஆனால், தாய்மொழியின் முக்கியத்துவம், அதன் பாதுகாப்பு மற்றும் அதன் பயன் ஆகியவற்றில் அக்கறை கொண்டுள்ள தமிழ் அறவாரியம் போன்ற அரசு சார்பற்ற அமைப்புகள் அனைத்துலகத் தாய்மொழி நாளை  கொண்டாடி அதனை நாட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.  அதோடு போராடியும் வருகின்றனர். அவர்களுக்கு பாராட்டுகள்.

IMG-20170221-WA00142002 ஆம் ஆண்டு முதல் ஆரம்பப்பள்ளிகளில் தாய்மொழியில் கணிதமும்   அறிவியலும் போதிக்க வேண்டியதின் கட்டாயத்தை வலியுறுத்திய போராட்டம் நடத்தி 2012 இல் வெற்றி பெற்றோம். ஆனால், இன்று மற்றொரு உருவில் அந்தப் பிரச்சனை தலைதூக்கியுள்ளது. ஆங்கிலமொழி மோகமும் தாய்மொழியில் கணிதமும் அறிவியலும் கற்க இயலும் என்ற நம்பிக்கை அற்றவர்களும் இன்று மல்லுக்கட்டிக்கொண்டு தாய்மொழிக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுவது வேதனையாக உள்ளது.

அதோடு தமிழ்க் கல்வி பயின்று, அதன் வழி தமிழ்ப்பள்ளிக்கு வரப்பிரசாதமாக  செயலாற்றி அதை மேலும் வலுப்பெறச்செய்யும் சூழலில் உள்ள சில தலைமை ஆசிரியர்கள், கணிதம்  அறிவியல் பாடங்கள் ஆங்கிலமொழியில் வேண்டும் என வாதிடுவது அதிர்ச்சி அளிக்கிறது.

இவர்களுக்கு என்ன வந்தது என்றுதான் வினவத்தோன்றுகிறது. தமிழ்மொழி மீது நம்பிக்கையற்று விட்டதா? அதில் ஆற்றல் இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்களா? இவர்கள் இந்தச் சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான்  தமிழ்க் கல்விக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

1980-களில் சீன அமைப்புகளின் கட்டமைப்பில் உள்ள அரசாங்க இடைநிலைப்பள்ளிகளுக்கு சீனமொழி கற்காத சீனர்களைத் தலைமை ஆசிரியர்களாக ஏற்க அந்தச் சமூகம் மறுத்தது. அவர்கள் வெகுண்டெழுந்தனர்.  ஆனால், நமது நிலைமை கோடாரியே காம்பை வெட்டிய நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது.

Tamil school our choice in Tamilஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை முதலில் அழிக்க வேண்டும். தன் காலத்தில் ஆங்கிலேய ஆதிக்கத்தை பார்த்த மகாகவி பாரதியார் ஒரு பாடலில் “மெல்ல தமிழ் இனி சாகும் என ஒரு பேதை கூறுகிறான்” என்று தனது கலக்கத்தை வெளிப்படுத்தினார்.

அதைத் தடுப்பதற்கான வழிமுறையாக, “எட்டுத் திக்கும் செல்வோம் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்போம்!” என்று தமிழில் ஆற்றல் கொண்ட படைப்புகளும் சிந்தனைகளும் உருவாக்கப்பட வேண்டும் என்ற ஆவேசத்தை  தமிழ் மக்களுக்கு விட்டுச் சென்றார்.

மொழிதான் கடந்தகால உலகத்தை நம் கைகளில் தந்துள்ளது; நமது உலகை வருங்கால சந்ததிகளிடமும் சேர்க்க உள்ளது. எனவே, நாம் இருப்பதையும் இழப்பது மடமையாகும். இருப்பதைக் கொண்டு மேன்மைக்கு வித்திடும் ஆற்றல்களுக்காகச் செயல்படுவதே தமிழுக்குச் செய்யும் தொண்டாகும்.