தமிழ்மொழி அரசு மொழிகளில் ஒன்றாக வேண்டும் – தமிழ் அறவாரியம்

mld1இந்நாட்டு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் அவற்றின் எதிர்காலம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வரும் தமிழ் அறவாரியம்,  லிம் லியன் கியோக் கலாச்சார மேம்பாட்டு மையம்,  கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபம், இக்ராம் என்ற மலேசிய இஸ்லாமிய அமைப்பு, பூர்வீக குடிகள் அமைப்பு, மைஸ்கில்ஸ் அறவாரியம்  மற்றும் இதர அமைப்புகளும்  கூட்டாக இணைந்து இவ்வாண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை நேற்றிரவு கோலாகலமாகக் கொண்டாடின.

பெட்டாவிங் ஜெயா பிஏசி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் இருநூறு பேராளர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

அரங்கம் நிறைந்து கரவோசைகள் எதிரொலிக்க, தமிழ்மொழி அரசு மொழிகளில் ஒன்றாக வேண்டும் என்ற வேண்டுகோளை தமிழ் அறவாரியத்தின் தலைவர் தனது கொள்கையுரையில் முன்வைத்தார்.

mld group“நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகள் எட்டி விட்டன, பல்லினப் பண்பாடு, பன்மொழிக் கொள்கையில் உலக அளவில் நமது நிலை உயர வேண்டும். அனவரும் தேசிய உணர்வு கொண்ட சூழலில், தாய்மொழிக்  கல்வியின் மேன்மைக்கு அடுத்த கட்ட நகர்வு அவசியமாகிறது. தமிழ் மற்றும் சீனம் ஆகிய இரண்டு மொழிகளும் அரசு மொழிகளாக உருவாக வேண்டும்”, என்றார் இராகவன் அண்ணாமலை.

இது சார்பாக கருத்துரைத்த தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற முனைப்புகள் இருந்தன. ஆனால், மலாய் தேசியவாதிகள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். தேசிய மொழியாகவும் அரசு மொழியாகவும் மலாய்மொழிதான் இருக்க வேண்டும் என்ற ஆழமான அரசியல் பின்னணி, தாய்மொழிக் கொள்கையைப்  பின்தள்ளியது என்றார்.

“இன்று உலகமயமாதல் அரசாங்கத்தின் கல்விக்கொள்கையில் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. பலமொழிகளைப் பயில அரசாங்கம் ஊக்குவிக்கிறது, இதை மலேசியக் கல்விப் பெருந்திட்டம் (2013 – 2025) இல் காணலாம்.

“எனவே, பிற மொழிகளின் தாக்கம் தேசிய ஒற்றுமைக்கு மிரட்டலாக அமையும் என்ற ஐயம், உலகமயமாகும் பொருளாதாரக் கொள்கையாலும் அதிநவீன தொழிழ்நுட்ப வளர்ச்சியாலும் விழுங்கப்பட்டு வருவதை உணரலாம்.

“பிரச்சனையற்ற  நிலையில் மேம்பாடு அடைந்த அண்டை நாடான சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்து போன்றவற்றில் நான்கு மொழிகள் அரசு மொழிகளாக உள்ளன. மேலும் யுனஸ்கோ அமைப்பு தாய்மொழிகளை அரசு மொழிகளில் ஒன்றாக்குவது பல்லினப் பண்பாட்டு வளர்ச்சிக்கு வித்திடும் என்று கூறுகிறது”, என்று கா. ஆறுமுகம் மேலும் கூறினார்.