இருமொழித் திட்டத்தை உடனடியாக இரத்து செய்வீர், கல்வி அமைச்சுக்கு தமிழ் அறவாரியத் தலைவரின் இறுதிக்கோரிக்கை

 

மலேசியத் தமிழ் அறவாரியம் இருமொழித் திட்டத்தை ஏற்கனவே நிராகரித்து விட்டது. அதன் காரணமாக, கல்வி அமைச்சு இருமொழித்DSC_6063 திட்டத்தை வெற்று ஆரவாரம் எதுவும் செய்யாமல் உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்ற இறுதிக்கோரிக்கையை அதன் தலைவர் அ. இராகவன் இன்று விடுத்தார்.

இன்று கோலாலம்பூரில்   தமிழ் அறவாரியம் ஏற்பாடு செய்திருந்த வட்ட மேசை கருத்தரங்கில் ஆங்கிலத்தில் தொடக்க உரையாற்றிய இராகவன், இக்கருத்தரங்கு கூட்டப்பட்டிருப்பதின் முக்கிய நோக்கம் நாட்டிலுள்ள 49 தமிழ் தொடக்கப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டிருப்பதை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்பதற்கான இறுதிக்கோரிக்கையை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவதாகும் என்றார்.

இந்த வட்ட மேசை கருத்தரங்களில் பங்கேற்க வருகையளித்துள்ள காபெனாவின் தலைவர் ஸைனால் அபிடின் போர்ஹானை வரவேற்பதில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், காபெனாவும் இருமொழித் திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்தார்.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், தொடர்புத்துறை தொழில் நுட்பம், பொறியமைப்புத்துறை மற்றும் கணிதம் ஆகியவற்றை அந்நிய மொழியில் கற்பிப்பதற்கு உலகெங்குமுள்ள, மலேசியா உட்பட, உள்ளார்வமிக்க அறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யுனெஸ்கோ அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்..

நமது மாணவர்களுக்கு ஆங்கிலமொழி கற்பித்தலை தமிழ் அறவாரியம் எதிர்க்கவில்லை என்பதை வலியுறுத்திய இராகவன், முதலில் ஆங்கிலமொழியைக் கற்பிக்க வேண்டும் என்றார். மாணவர்களை ஆங்கிலமொழியில் திறமை பெறச் செய்ய வேண்டும்.

தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலமொழி எழுத்துகளைக் கற்றுக்கொள்வதற்கு முன்னர் அறிவியல், கணிதம், தொடர்புத்துறை தொழில் நுட்பம் மற்றும் பொறியமைப்புத்துறை ஆகியவற்றை ஆங்கிலத்தில் கற்பிப்பது குதிரைக்குமுன் வண்டியை நிறுத்துவதற்குச் சமமாகும் என்றாரவர்.

மலேசியா, தஞ்சோங் மாலிம் உப்சி (Universiti Pedidikan Sultan Idris) பல்கலைக்கழகத்தின் அறிஞர்களில் சிலர் நிறைநிலைப் பேராசிரியர் இசாக் ஹருன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 2008 ஆம் ஆண்டில் இவ்வாறு கூறினர்: “ஆங்கிலமொழி திறமையை மேம்படுத்த அரசாங்கம் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலமொழியைக் கற்பிக்க அதிகமான நேரத்தை ஒதுக்க வேண்டும், நிலையான ஒரே அளவுப்படி முறைக்குப் பதிலாக மாற்று முறைகளை ஊக்குவிக்க வேண்டும். பல்வேறான மூலப்பொருள்களைப் பயன்படுத்தி, பொருத்தமான இலக்கியம், அறிவியல், வரலாறு மற்றும் பூகோளம் ஆகிய படித்தல்கள் உட்பட, பல்வேறான பின்னணிகளைக் கொண்ட மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க வேண்டும், குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு. இது ஆங்கிலத்தில் வாசித்தல் மற்றும் எழுதல் ஆகியவற்றில் மாணவர்கள் சிறப்பான நிலையை அடைய மிகப் பொருத்தமானதாகும் என்பதோடு வளமான இலக்கியம், அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சமூகவியல் ஆகியவற்றில் காணப்படும் தகவல் ஆகியவற்றால் அவர்கள் பலனும் அடைவர்.”

மிகச் சரியான இதுதான் நமக்கு வேண்டும். காபெனாவும் இதே கருத்தைக் கொண்டுள்ளது என்று கூறுவதில் மகிழ்ச்சியடைவதாக இராகவன் தெரிவித்தார்.

விவேகமான குரல்களுக்கு நியாயமான மதிப்பளிக்காமல் அரசாங்கம் தன்மூப்பாக இருமொழித் திட்டத்தை அமல்படுத்தியது மிக வருத்தத்திற்குரிய விவகாரமாகும். இது அனைத்து மலேசிய மாணவர்களையும் பாதிக்கப் போகிறது என்பது நிச்சயம். இந்த இருமொழித் திட்டம் தமிழ்ப்பள்ளிகளிலிருக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இன்னும் பெரும் தீங்கை விளைவிக்கும் என்றாரவர்.

தொடக்கத்தில், இருமொழித் திட்டத்தில் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்க்கும் நோக்கம் இல்லை. திடீரென்று, இத்திட்டம் இப்பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், 30 தமிழ்ப்பள்ளிகள் இத்திட்டத்தில் பங்கேற்க   மனு செய்திருந்தாகக் கூறப்பட்டது. அவற்றின் மனுக்கள் அவமானப்படும் அளவிற்கு கல்வி அமைச்சால் நிராகரிக்கப்பட்டது என்று கூறிய இராகவன், இந்த நிராகரிப்புக்குக் காரணம் இந்த 30 தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றுகூட கல்வி அமைச்சால் நிர்ணையிக்கப்பட்டிருக்கும் அடைவுநிலையை எட்டவில்லை. 2016 ஆம் ஆண்டில் அதுதான் தமிழ்ப்பள்ளிகளின் நிலைமை என்பதை இராகவன் சுட்டிக்காட்டினார்.

ஆனால், 2017 ஆம் ஆண்டில், ஏதோ ஓர் இன்னதென்று தெரியாத சக்தியின் அருளால் 2016 ஆம் ஆண்டில் முற்றிலும் தகுதியற்றவை என்று நிராகரிக்கப்பட்ட 30 தமிழ்ப்பள்ளிகளும் இந்தத் திட்டத்தில் பங்குபெற அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றோடு இன்னும் 19 தமிழ்ப்பள்ளிகளும் இத்திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளன, ஆக மொத்தம் 49 தமிழ்ப்பள்ளிகள் இத்திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்றாரவர்.

ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும், குறிப்பாக இந்த 49 தமிழ்ப்பள்ளிகளும், இத்திட்டத்தில் பங்கேற்பதற்கு நிர்ணையிக்கப்பட்டுள்ள தரத்தை அடைந்து விட்டனவா என்று இராகவன் கேள்வி எழுப்பினார்.

தகுதியற்ற பள்ளிகளை, அவை மேலும் நாசமடைவதற்காகவே, தகுதி பெற்றவைகளாக மாற்றிய மாய வித்தைக்காரர் யார் என்று தெரிந்து கொள்ள தமிழ் அறவாரியம் மிக்க ஆவலுடைதாக இருக்கிறது என்றாரவர்.

தமிழ் அறவாரியம் இந்த நகைச்சுவை நாடகத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. நமது மாணவர்களும் நமது பள்ளிகளும் இப்பயிற்சிக்கு போதுமான தகுதி பெற்றிருக்கவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் கொள்கை அடிப்படையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் கூறும் அறிவுரைப்படி நடந்துகொள்ள விரும்புகிறோம் என்று இராகவன் திடமாகக் கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கான இருமொழித் திட்டத்தை நிராகரிக்கும் தமிழ் அறவாரியத்தின் தீர்மானத்திற்கு ஏற்ப இத்திட்டத்தை எவ்வித ஆரவாரமும் செய்யாமல் உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சுக்கு இறுதிக்கோரிக்கை விடுக்கிறோம் என்று அவர் அறிவித்தார்.