இவர்தான் அந்த மாய வித்தைக்காரரா?

DLP collageஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும், குறிப்பாக இருமொழித் திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ள இந்த 49 தமிழ்ப்பள்ளிகளும், இத்திட்டத்தில் பங்கேற்பதற்கு நிர்ணையிக்கப்பட்டுள்ள தரத்தை அடைந்து விட்டனவா என்று தமிழ் அறவாரியத்தின் தலைவர் அ. இராகவன் நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு வட்ட மேசை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது கேள்வி எழுப்பினார்.

“தகுதியற்ற பள்ளிகளை, அவை மேலும் நாசமடைவதற்காகவே, தகுதி பெற்றவைகளாக மாற்றிய மாய வித்தைக்காரர் யார் என்று தெரிந்து கொள்ள தமிழ் அறவாரியம் மிக்க ஆவலுடைதாக இருக்கிறது” என்றாரவர்.

இக்கேள்விக்கான பதில் கிட்டத்தட்ட தெரிந்த ஒன்றேயானாலும், அதைப் பகிரங்கமாகக் கூறுவதற்கான ஆர்வம் வெளிப்படாமல் இருந்து வந்துள்ளது.

DLP 1ஆனால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வட்ட மேசை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பிரதிநிதி தமிழ் அறவாரியத்தின் தலைவர் தெரிந்துகொள்ள மிக ஆவலாக இருக்கும் அந்த மாய வித்தைக்காரர் பிரதமர்துறை அலுவலகத்திலிருந்து செயல்படும் பிடிஎஸ்டி (PTST), மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டுத் திட்ட வரைவு, தலைவர் டாக்டர் என். எஸ். இராஜேந்திரன்தான் என்று கூறினார். அதில் பிடிஎஸ்டி செயற்குழுவும் சம்பந்தப்பட்டுள்ளது என்ற தகவலை அவர் வெளியிட்டார்.

பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்தான் தமிழ்ப்பள்ளிகள் இருமொழித் திட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இத்தகவலை அளித்தவர் பிடிஎஸ்டி செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரிடமிருந்து பெற்றதாக கூறினார். மேலும் இந்த இருமொழித் திட்டத்திற்கு இந்த   பிடிஎஸ்டி-யில் உள்ள முத்துசாமி  பகிரங்கமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தத் தகவலை அளித்ததற்காக அவருக்கு கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த இன்னொரு பிரதிநிதி நன்றி கூறினார்.