பிரிட்ஜோ சுட்டுக் கொலை… நீதி கேட்டு தமிழக மீனவர்கள் டெல்லி பயணம்

fishermen1ராமேஸ்வரம்: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்க ராமேஸ்வர மீனவ பிரதிநிதிகள் டெல்லி செல்கின்றனர்.

கடந்த 6ம் தேதி தனுஷ்கோடிக்கும், கச்சதீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜோவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டு நல்லடக்கம் செய்தனர்.

மீண்டும் அட்டூழியம்

கடந்த 11 நாள்களுக்கு பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படை கற்களை வீசியும், தடிகளை கொண்டும் தாக்கினர்.

வலைகள் சேதம்

மேலும், மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரைக்கு திரும்பினார். இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்வதாகவே கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

டெல்லி பயணம்

இந்நிலையில், தொடர்ந்து மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதைப் பற்றி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து முறையிட ராமேஸ்வர மீனவ பிரதிநிதிகள் இன்று டெல்லி செல்கின்றனர்.

கோரிக்கைகள் என்ன?

இந்த சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் இருப்பது, படகு, வலை போன்ற உடமைகளை சேதப்படுத்தாமல் இருப்பது, பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்பது ஆகிய அம்சங்களை முன்னிலைப்படுத்தி மீனவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: