இந்தியர்கள் மேம்பாட்டுத் திட்ட வரைவு, ஏப்ரல் தினத் தமாஷா?

– டாக்டர் ஜெயக்குமார் சேவியர், ஏப்ரல் 2, 2017.

 

xavier-jayakumar-pkrமலேசிய இந்தியர்கள் மென்மையானவர்கள்தான், இங்கு வாழும் தமிழர்கள் ஏமாளிதான் ஆனால் அவர்களை உலக மகா முட்டாள்கள் என்று பிரதமரும், ம.இ.கா தலைவர்களும் எண்ணிவிடக் கூடாது. மலேசிய இந்தியர்களான நாங்கள் முட்டாள்கள்  இல்லை என்பதைக் கூடிய விரைவில் பிரதமருக்கும், பாரிசான் இந்தியத் தலைவர்களுக்கும், குறிப்பாக ம.இ.கா தலைவர்களுக்குப் புலப்படுத்துவோம் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

இந்தியர்கள் மேம்பாட்டுத் திட்ட வரைவு என்று இருந்தால் அதுவும் ஒரு பிரதமரின் ஆட்சிக் காலத்தில் ஒரு முறை அறிவிக்கப்படுவது இயல்பு. அதன் பின்  அதன்  அமலாக்கம் மற்றும் செயல்முறை திட்டங்களின் வெற்றி தோல்வி மேல் சீராய்வு செய்யலாம் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சேவியர்.

 

ஆனால், ஒரே கட்சியின் சுமார் அறுபது ஆண்டுகால ஆட்சிக்குப்பின் அதுவும் ஒரு பிரதமரின் 5 ஆண்டுக்காலஆட்சி தவணைக்குள் 3வது  முறையாக மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டுச் செயல்முறை திட்டம் என்ற அறிவிப்பு ஒரு மாபெரும் நகைச்சுவையாக உள்ளது. அதனையும் பிரதமர் உலக மூடர்கள் தினமான ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியிட்டுள்ளார். அதனை மலேசியாவிலிருந்துகூட செய்யவில்லை, இந்தியாவிலிருந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அவர் உலகளவில் இந்தியர்களை மூடர்கள் எனப் பகடி செய்வதாக அமைந்துள்ளது.

 

பிரதமருடன் தமிழ்நாட்டில் அரட்டை அடிக்கும் ம.இ.கா துணை அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்று இதர முக்கியமானவர்களுக்கும் அந்த அறிவிப்பு பிரதமரின் ஏப்ரல் முட்டாள் தினத் (ஏப்ரல் பூள்)  தமாஷாக  இருக்கலாம்.  ஆனால், மற்றவர்களின் பகடிக்கும், பரிகாசத்திற்கும் ஆளாகி விட்ட வளர்ச்சி குன்றிய குழந்தையை ஈன்றெடுத்த தாய்படும் மனவேதனைக்கு ஒப்பானது மலேசிய இந்தியர்களின் துயரம், மக்கள் வேதனையை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை என்பதை இது காட்டுகிறது என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித்தலைவரான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

தீயவர்களால் அதனை மனதார உணரமுடியாது, பாரிசான் தலைவர்கள் அதனை மனதார உணரவில்லை. அதனால் அவர்கள் பல முறை அந்தIMG-20170331-WA0019 (1) அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு இன்பம் காண்கிறார்கள். இந்தியர்களை ஏளனப்படுத்துகிறார்கள். இந்தியர்களைப் பின்தள்ளியதற்கு, இந்நாட்டில் ஊனமடைந்த இனமாக இந்தியர்களை ஆக்கியதற்கு, தேசப்பற்றுள்ள இந்நாட்டுத் தலைவர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.   மலேசியாவின் 13 வது பொதுத் தேர்தலுக்கு முன் பிரதமர் அறிவித்த இந்தியர்கள் மேம்பாட்டுத் திட்ட வரைவு என்ன ஆனது? மீண்டும் 2017 ம் ஆண்டு ஜனவரியில் இந்தியர்களுக்குப் புதிய மேம்பாட்டுத் திட்ட வரைவினை வெளியிடுவதாகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ம.இ.காவின் 70 வது ஆண்டு மாநாட்டில் வாக்களித்தது பிரதமருக்கு நினைவிருக்கிறதா? மீண்டும் அடுத்த மாதம் அறிவிப்பு வரும் என்று ஏப்ரல்1 ஆம் தேதி தமிழ்நாட்டிலிருந்து குடுகுடுப்பை கொட்டுவது ஏன்?

 

இந்தியர்கள் இந்நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்ததில் எவருக்கும் பின்தங்கியவர்கள் அல்ல. ஆனால் இன்று கல்வியில், வேலை வாய்ப்புகளில், பொருளாதார வளர்ச்சியில் மட்டுமின்றி, சொந்த நாட்டில் குடியிருக்க ஓர் இடமின்றி, உரிய உரிமையின்றி அன்னியர்களைவிட கேவலமாக வாழ வேண்டிய நிலையில் உள்ளனர். அரசாங்கச் செயல்பாடுகளால் வெகுவாகப் பின்தள்ளப்பட்டுள்ளார்கள். இன்று அனைவரின் பகடிக்கும் ஆளாகி விட்டார்கள்.   இதற்கு அவசரமான தீர்வு வேண்டும்.

 

”இந்தியர்களுக்கு மேம்பாட்டுத் திட்ட வரைவு” என்பது தீபாவளி வான வேடிக்கையல்ல. பிரதமர் எப்போது வேண்டுமானாலும் தனது சந்தோஷத்திற்குத் தூக்கி போட்டு விளையாட! இது அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய இந்தியர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை மற்றும் கௌரவ விவகாரம் என்பதைப் பிரதமருக்கு எடுத்துச் சொல்ல மஇகா தவறிவிட்டது.   இந்தியர்களின் இன்னலை, இந்நாட்டில் பற்பல வழிகளில் பின்தள்ளப்பட்ட ஓர் இனத்தின் மனக் குமுறலை, இந்தியர்களைப் பிரதிநிதித்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ம.இ.கா உணரத் தவறி விட்டது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.