சேவியர்: ஷரியா சட்ட விவகாரத்தில் பிரதமரின் அதிகாரத் துஷ்பிரயோகத்துக்கு சபாநாயகர் துணையா?

சேவியர் ஜெயக்குமார், ஏபரல் 8, 2017.

Dr-Xavier-Jeyakumarநாடாளுமன்றத்தில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஷரியா நீதிமன்ற (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 355 பற்றிய தனிநபர் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய ஏதுவாக அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா  செய்திருந்த சிறப்பு ஏற்பாடுகள், பிரதமரின் பிரதான அதிகாரத் துஷ்பிரயோகத்தை மக்கள் பார்வையிலிருந்து மறைக்க, பிரதமருக்குப் பண்டிகார் அமின் மூலியா கண்மூடித்தனமாக உதவ முற்பட்டுள்ளதைத் தெளிவாகக் காட்டுகிறது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.  .

நிதி, நீதி, சட்டம் மற்றும் காவல் துறைகள் பிரதமரின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருவதால், நாடு  உலகளவில் அதன் நன்மதிப்பை இழந்து வருகிறது. மலேசியாவில், இந்நாட்டு மக்களுக்கு  எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு மற்றும் பொருளாதாரச் சூறையாடல்களுக்குக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய மலேசிய அரசாங்கம் அதனை மூடி மறைக்க முற்பட்டுள்ளது. ஆனால் அந்தக் குற்றங்களைத் தங்கள் மண்ணில் புரிந்தமைக்குச் சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய  நாடுகள் இந்தக் குற்றவாளிகள் மீது வழக்கு தொடுத்தும் தண்டித்தும் உள்ளன.

இன்று நாட்டு மக்கள் அனுபவிக்கும் பொருளாதாரச் சுமைகளுக்கு ஊழலும் ஊதாரித்தனமும் நிறைந்த இந்த அரசாங்கமே முக்கியக் காரணம். அப்படிப்பட்ட அரசாங்கத்திற்குத் துணையாக நாடாளுமன்ற மக்களவையை இட்டுச் செல்லச் சபாநாயகர் பண்டிகார் அமின் மூலியா முற்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டினார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்  

நாட்டு மக்கள்  ஒன்று பட்டு ஊழல் மிக்க பாரிசான் அரசினை எதிர்த்துச் செயல்படுவதைத் தடுக்கவும், மக்களைத் திசை திருப்பவும், இனச் சமய ரீதியாக மக்களைப் பிரித்தாளப் பிரதமர் நஜிப் மேற்கொண்டுள்ள சதி செயலுக்குத் துணை நிற்பதே இந்த ஷரியா நீதிமன்ற (கிரிமினல் மசோதாவிற்குப் பாரிசான் அரசாங்கம் வழங்கும் முக்கியத்துவத்தின் நோக்கமாகும் என்றாரவர்.

இந்தச் சட்டத்திருத்த மசோதா பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தாக்கல் செய்திருந்தாலும் அதனை  அரசாங்க மசோதாவாகத் தொடர்ந்து முன்எடுத்துச் செல்லும் என்று ஏற்கனவே பிரதமர் நஜிப் துன் ராசாக் கூறியிருந்தார். ஆனால் அதனைப் பாரிசான் அரசு நாடாளுமன்றத்தில் அரசாங்க மசோதாவாக முன்நிலைப்படுத்துவதால்  சபா சராவாக் மாநிலங்களின் பாரிசானுக்கு ஏற்படும் Speakerendsபின்விளைவுகளை மனதில் நிறுத்தி இறுதி நேரத்தில் பின்வாங்கிய பிரதமர், நாடாளுமன்றச் சபாநாயகர் துணையுடன் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் ஷரியா நீதிமன்ற (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 355 பற்றிய தனிநபர் திருத்த மசோதாவை மக்களவையின் நிகழ்ச்சிப் பட்டியலில் முதன்மை பெறச் செய்துள்ளார். அதற்கு விவாதத் தினத்தன்று அம்மசோதாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் புதன்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற அமர்வை வியாழக்கிழமை அதிகாலை மணி 5.00 வரை இழுத்து நாடாளுமன்ற  வரலாற்றில் அதிக நேரம் எடுத்துக் கொண்ட அமர்வாக ஆக்கியுள்ள அதே வேளையில் மறுநாள் விவாதத்தில் அப்துல் ஹாடியின் மசோதாவை வழிமொழிந்து  உரையாற்றிய கோத்தா பாரு உறுப்பினரின் உரைக்குப்பின் பக்காத்தானின் எந்த உறுப்பினருக்கும் வாய்ப்பு வழங்காமல் மாலை மணி நான்குக்கு முன்பே அவையை ஏன் ஒத்திவைத்தார் என்று கேள்வி எழுப்பினார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

அப்துல் ஹாடியின் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யும் முன்னர், அந்த மசோதா மீது உரை நிகழ்த்த அவை உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறிய பண்டிக்கார் அவரின் உறுதிமொழியை ஏன் காப்பாற்றவில்லை? ஏன் எந்த எதிர்க் கட்சி  உறுப்பினருக்கும், குறிப்பாகப் பக்காத்தானின் உறுப்பினர்களுக்கு அந்த மசோதா மீது உரையாற்ற வாய்ப்பு வழங்கவில்லை?

பண்டிக்கார் அமின் மூலியா நாடாளுமன்றத்தின் மாண்பைக் காக்கும் வண்ணம் செயல்பட வேண்டும். பிரதமருக்குப் கண்மூடித்தனமாக உதவுவதாக எண்ணி இந்நாட்டின் ஜனநாயகத்தை  அழித்துவிடக்கூடாது என்று எச்சரித்தார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.