இருமொழித் திட்டத்தை அகற்ற, புத்தராஜெயாவில் பேரணி!

a may19மே-மாதம் 19 ஆம் தேதி, தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி என்ற இருமொழித் திட்ட அமலாக்கதை அகற்ற, புத்தராஜெயாவில் ஒரு பேரணியை நடத்தப் போவதாக மே19 இயக்கம் அறிவித்துள்ளது. இந்த “மே19 இயக்கம்” தமிழ்க்கல்வி மற்றும் தாய்மொழிக்கல்வி சார்ந்த செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் தோற்றுவிப்பாகும்.

மலேசியத் தமிழர்களின் பண்பாட்டு காப்பகமாக இயங்கும் தமிழ்ப்பள்ளிகளில் தற்போது இருமொழித்  திட்டம் என்ற ஒரு வழிமுறை பள்ளியின் விருப்பத்தின் பேரில் ஊடுருவி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழில் போதிக்கப்பட்ட  அறிவியல் மற்றும் கணிதப் பாடங்கள் ஆங்கில மொழியில் போதிக்கப்படுகிறது.

இதன் நுழைவு  தமிழ் மாணவர்களின் தரத்தை பலவீனமாக்குவதோடு தமிழ்ப்பள்ளியின் கட்டமைப்பையும், தமிழ்மொழியின் வழி அறிவியல் கணிதத்திற்கான கற்றல் கற்பித்தல் அமைப்பு முறைகளையும் முற்றாக அழித்துவிடும் தன்மை கொண்டது.

தமிழ்ப்பள்ளி என்பது தமிழ்மொழி வழிக்கல்வியை வழங்கும் தளமாக இருக்க வேண்டும். எனவே குழந்தைகளின் அறிவாற்றலுக்கும்  தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மைக்கும் மிரட்டலாக இருக்கும் இருமொழித்  தி ட்டத்தை தமிழ்ப்பள்ளிகள் அமலாக்கம்செய்யக்கூடாது என்று மே 19 இயக்கம் வலியுறுத்துகிறது.

அவ்வகையில் இவ்வியக்கம் தார்மீக உணர்வோடு தமிழ்ப்பள்ளிகளைக் காப்பதற்கும் மீட்பதற்குமான செயலாக்கங்களில் ஈடுபடும். அதன் ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்தப்பேரணி அமையும். இதன் வழி நாட்டின் பிரதமருக்கும் கல்வி அமைச்சருக்கும் இவ்வியக்கத்தின் அறிவுசார்ந்த நோக்கம் விளக்கப்படும்.

DLP collageஇதற்கு முன் கல்வி அமைச்சருக்கு கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி ஒரு குறிப்பாணை வழங்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கல்வி அமைச்சு நிர்ணயம் செய்த அடைவு நிலைகளை எந்த ஒரு தமிழ்ப்பள்ளியும் அடையாத நிலையில், அவை அந்தத் திட்டதிலிருந்து விலக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட கல்வி இலாகவுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று வழியுறுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த வழியுறுத்தலுக்கு ஒரு படி மேலாக இந்த ஒவ்வாதத் திட்டத்தை இரத்து செய்வதே முறையான வழிமுறை என்கிறது மே19 இயக்கம். எனவேதான், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக புத்ராஜெயாவில் அதிருப்தி அமைதி ஒன்றுக்கூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் கட்டத்திற்கு வந்துள்ளோம் என்கிறார்கள் அதன் ஒருங்கிணைபாளர்கள்.

மே19 ஆம் தேதி, பிற்பகல் 2.30 மணிமுதல் 4.30 மணி வரையில் கல்வி அமைச்சின்   வளாகத்தில் நடைபெறும் இந்தப் பேரணியில் தமிழ்மொழியையும் தமிழ்ப்பள்ளிகளையும் காப்பாற்ற  ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

இந்த மே19 இயக்கத்தின் ஒருங்கிணைப்பார்களாக வழக்கறிஞர் கா. ஆறுமுகம், வழக்கறிஞர் ஆர். பாலமுரளி, கௌத்தமன், தியாகு, பொன்ரங்கன், கணியமுதன், தமிழினியன், தமிழ்த்திறன், கலைமுகிலன் உட்பட மேலும் பலர் இயங்குகின்றனர்.

இது சார்பான மேலதிக தகவல் பெற சுரேன் – 0184632325 மற்றும் பொன்ரங்கன் – 0166944223  ஆகியோருடன் தொடர்பு  கொள்ளலாம்.